அரசுரிமையைத் துறக்க விரும்பும் அப்பாவி ராஜகுமாரன்!

918

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

(28) நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல வரலாறு.

 

அரசுரிமையைத் துறக்க விரும்பும் அப்பாவி ராஜகுமாரன்!

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பட்டாபி ராமரை குலகுருவின் ஆசி பெற்று வரச் சொல்லி அனுப்பி வைத்தார் தசரதச் சக்கரவர்த்தி. ஶ்ரீ ராமர் தனது அன்பு மனைவி சீதாதேவியை தன்னுடன் அழைத்துச் சென்றார். தங்கள் குருநாதர் வஷிஸ்டர் முன்னால் பணிவுடன் வணங்கி நின்றார்கள். தம்பதியரை இன்முகத்துடன் வரவேற்று அமரச் செய்த ரிஷி பெருமான்,  ” சீதாராமா நீவீர் நீடூழி வாழியவே” என வாழ்த்தி விட்டு, “ராமா உனது முகம் ஏன் வாட்டமாக உள்ளது?” என வினாவினார். ஶ்ரீராமர் மீண்டும் அவரை வணங்கி, “ஐயனே தசரத புத்திரர்களாகிய சகோதரர்கள் நாங்கள் நால்வரும் ஒன்றாகப் பிறந்தோம். ஒன்றாக உண்டு, உறங்கி, விளையாடி, பேதமின்றி வளர்ந்து வந்தோம். எங்கள் பூணல் சடங்குகள், காதணி விழா, குருகுல வாசம், ஆயுதப் பயிற்சிகள் அனைத்தும் ஒன்றாக நடை பெற்றன. அதனைப் போலவே நால்வருக்கும் திருமண வைபோகம்  ஒன்று போலவே நடந்தேறியது. கீர்த்தி மிகுந்த இந்த ராஜ பரம்பரையில் மட்டும் மூவரை விலக்கி விட்டு, மூத்த குமாரனுக்கு மட்டும் மணிமுடி சூட்டுவது என்பது, நேர்மையற்ற செயலாக எனது உள்ளத்தில் தோன்றுகின்றது சுவாமி” என்றுரைத்தார். 

 

குலகுரு எண்ணினார், ‘இத்தகைய தெய்வீக மனோபாவனையை மற்றவர்கள் எண்ணுவராயின், இறைவனது அருள் அமுதமாகிய ஆசிகள் உள்ளத்தில் புகுந்து, புனிதம் அடையச் செய்து விடும் என்பது உண்மையே! சித்தத்தைத் தூய்மையாக்கி, உள்ளத்தின் ஆற்றலைப் பெருகச் செய்திடும் இது எத்தகைய சிறப்பான மனித நேயம் வாய்ந்தது!  இத்தகைய மனோபாவனை வந்து விடும் மனம் படைத்தவனது வாழ்க்கையானது இறைவனது ஆசியினால் எவ்வளவு தூய்மை பெறும்? அவ்வாறு மனிதனின் ஒவ்வொரு செயலையும் இறைவனுடன் இணைத்துக் காரியமாற்றும் பொழுது அற்புதமான ஆற்றல் சக்தி இறையருளால் தோன்றிவிடும் அல்லவா! அவனது மதிப்பு இவ்வுலகத்தில் நிச்சயமாக உயர்வு பெற்று சந்தோஷமாக வாழ்ந்திடுவான்’  என நினைந்து மானசீகமாக ராமரை வாழ்த்தினார்.’ இந்த சமயத்தில் தான் கூனி மந்தரை கைகேயியின் மனதில் பரதன் நாடாளவும், ஶ்ரீராமன் பதினான்கு ஆண்டுகள் காடாளவும் வேண்டும் என்ற  சூதான எண்ணங்களை  உருவாக்கி விட்டிருந்தாள். கைகேயி தனது பிரிய ராமனை வெறுக்கத் துவங்கி விட்டாள். தசரதன் வந்தால் ஊடல் கொண்டு காரியமாற்ற எண்ணி ஆபரணங்களை நீக்கி கைம் பெண்ணைப் போல் ஆடைகளை அணிந்து, சப்ரகூட மஞ்சத்தை விட்டு நீங்கித் துயருற்றவள் போல் தரையில் படுத்துக் கொண்டாள்.  அரசன் வரட்டும், வந்தால் தெரியும் சேதி என மனதிற்குள் கருவிக் கொண்டாள். கைகேயி இறையருளை மறந்து போனாள். அவளது அரண்மனையைக் காரிருள் பற்றிச் சூழ்ந்திருக்க ஆரம்பித்து விட்டன. தெய்வீகத்தன்மைகளும், தெய்வ குணங்களும் அவ்விடத்தை விட்டு மெல்ல, மெல்ல வெளியேறிச் செல்லத் துவங்கின. தீமை சக்திகள் அங்கு களிப்புடன் குடி புகுந்து, கைகேயியின் மஞ்சள், குங்குமத்தை அழிக்கத் துடித்துக் காத்துக் கொண்டிருந்தன.

 

இல்லற வாழ்வில் நாம் ஒருவரோடொருவர்  நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள், நமது உள்ளத்தில் தானாகவே உருவாக வேண்டும். அதற்கு இறைவன் நாட்டத்தை அதீத நம்பிக்கையுடன் நமக்குள் நாமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால் மட்டுமே இறையருளால் கல்லா ஞானம் சித்திக்கும்! அறியாமை என்னும் மாய இருள் விலகி விடுவதோடு,பாவவினைகள் அனைத்தும் நம்மை விட்டு அகன்று போகும்! இறைவனின் அறிவொளி உள்ளே பிரகசித்து விளங்குவதால் தீமை சக்திகள் நம்மை விட்டு அப்பால் விலகியோடிவிடும்! இறைவனை எண்ணி, அவன் நாமத்தை ஜெபம் செய்வதால், சர்வ வியாபகமாக விளங்கும் ஆண்டவன், நமக்குத் துணையாக, நம்முடன், எங்கும் எப்போதும், எந்த நேரமும் அருகிருந்து வருவான். இந்த வேதவாக்கியங்களை நன்கு கற்று அறிந்திருந்தவளும, தனது மந்திர ஜெபத்தால் விண்ணில் ரதத்தைச் செலுத்தவும் ஆற்றல் சக்தி வாய்ந்த கைகேயி, பகவானை மறந்து போகும் அளவிற்கு மனம் கெட்டுப் போனாள். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்றபடி, தீமை சக்தியான கூனி மந்தரையானவள், தனது விஷமான கருத்துக்களை, தெய்வ விரோதமன சிந்தனைகளை கைகேயியின் உள்ளத்தில்

பதியவைத்து விட்டாள். ஆற்றல் பெற்ற கைகேயி, ஜெகம் புகழும் ராமகாவியத்தில்

என்றுமே நீங்காத களங்கத்தைத் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டாள். ஆனால் அப்பாவி மானிடனாக அவதாரம் எடுத்த பகவான், அனைவரையும் தனது விருப்பத்திற்கு ஏற்ப ஆட்டுவித்துக் கொண்டிருந்த காரணத்தை யார் தான் அறிவார்? பாவம் கைகேயி அவளும் அறியாள்!

 

(குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தல வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

 

ஓம் ஶ்ரீ ஈஸ்வர குருநாதா சரணம்! ஓம் குருவே துணை!

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

அருளாசிகள்,

தவத்திரு நாகராஜன் சுவாமி,

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button