தாயின் உத்தரவிற்கு அடிபணிந்து நடப்பேன் — ஶ்ரீ ராமர்

857

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

(34) நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல வரலாறு.

 

தாயின் உத்தரவிற்கு அடிபணிந்து நடப்பேன் — ஶ்ரீ ராமர்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஊக்கமும், உறுதியும், அறிவும் உடைய ஶ்ரீ ராமர் தனது தந்தையும், நாட்டின் மன்னனும் தரையில் கிடந்த கோலத்தை அச்சத்துடன் பார்த்தார். அப்போது சிறிது ஸ்மரணை வரப்பெற்ற மன்னர் தசரதர் மயக்கம் நீங்கி  எழுந்து அமர்ந்தார். கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டு இருந்ததால், கைகேயி முன்னால் கரங்கூப்பிப் பணிவோடு நின்றிருந்த ராமர் மங்கலான தோற்றத்தில் தென்பட்டார். அவரை நோக்கி இருகரம் நீட்டி, “ராமா, மகனே, ராமச்சந்திரா”  என்று கதறி அழுதார். தந்தையின் நிலை கண்டு பதறிய ராமர் அவரிடம் ஓடிச் சென்று, கட்டித் தழுவித் தூக்கித்  தரையில் இருந்து மஞ்சத்தில் அமரச் செய்தார். கண்ணீரைத் தனது உத்திரியத்தால் துடைத்து ஆறுதல் கூறினார். தந்தைக்குத் தன்னால் ஏதாவது இடையூறு ஏற்பட்டு விட்டதோ என எண்ணிய ராமர் மௌனமாகத் தந்தையின் காலடியில் அமர்ந்து கொண்டார். குடும்ப சம்மந்தமான ஏதோ பிரச்சினை என்பதை உணர்ந்து கொண்ட ராமருக்கு அதுபற்றிய விழிப்புணர்வு பெற்று, அதனை ஒழுங்கு படுத்திட எண்ணிச் செயல்படத் தீர்மானம் செய்து கொண்டார். தந்தையின் நிலை ராமரை சற்று திகிலடையச் செய்தது என்னவோ உண்மைதான். சிற்றன்னை கைகேயியின்  வெறுப்புற்ற வதனத்தை அங்கிருந்தபடியே கவனித்தார். ராமர் தனது சிற்றன்னையிடம், “தாயே எனது தந்தையின் துன்பத்திற்கு உண்டான காரணம் எது எனக் கூறினால், அதனைப் போக்க முயற்சிக்கிறேன்” என்று பணிவுடன் கேட்டுக் கொண்டார்.

 

கைகேயி, ராமர் தரையில் அமர்ந்துள்ள இடத்தில் வந்து தானும் அமர்ந்து கொண்டு, “அப்பா ராமா தந்தை உன்மீது அளவிலா அன்பைக் கொண்டிருப்பதால் தான் இத்தனை துயரப்படுகின்றார். சம்பராசுர  வதத்தின் போது எனக்குத்தந்த இரண்டு வரங்களை இப்போது கேட்டுப் பெற்றேன். பரதன் நாடாளவும், நீ மரவுரி தரித்து பதினான்கு ஆண்டுகள் வனம் ஏகவும் என்பதே அந்த வரங்கள். அதனைக் கேட்டு கவலையில் தவித்துக் கொண்டு இருக்கிறார். உனது பாசத்திற்கும், கேட்ட வரங்களுக்குத் தந்த வாக்குறுதிக்கும் இடையே அகப்பட்டு அல்லாடுகின்றார். உன்னால் அவரது துன்பத்தை நீக்க இயலுமென்றால், மன்னரின் கட்டளையை ஏற்றுக் கொண்டு இப்போது ஏற்பட்டுள்ள பெரும் பிரச்சினைக்குத் தீர்வை, நீதான் தரவேண்டும்” என்று தைரியமாகக் கேட்டுக் கொண்டாள். ஶ்ரீ ராமர் கள்ளங்கபடமற்ற மனதுடன், “தாய் தந்தையரின் கட்டளையை சிரமேற் கொண்டு அவர்களை மகிழ்விப்பவனே சிறந்த மைந்தன். வனவாசம் எனக்கு மகிழ்ச்சி தரும். அங்கு சென்றால் அநேக தபஸ்விகளைச் சந்தித்து ஆசி பெறும் பாக்கியத்தை நான் பெறுவேன். இதைவிட வேறென்ன பேறு வேண்டும். எல்லா வகையிலும் எனக்கு நன்மையைத் தான் இறைவன் செய்து கொண்டிருக்கின்றார். தாயாகிய தங்களின் இணக்கமும், ஆசியும் வேறு எனக்குக் கிடைத்துள்ளது. தாயே நிச்சயமாகப் பரதன் அரசாள்வது உறுதி. அவனுக்கு எல்லாத் தகுதிகளும் பொறுந்தியுள்ளன. ஏனோ தந்தை என்னுடன் பேச மறுக்கின்றார். அவரின் அன்பு ஒன்றே எனக்குப் போதும். தாய் தந்தை கட்டளையை ஏற்று மகிழ்வுடன் வனம் போகின்றேன். விடை தாருங்கள் ” என்று கூறிப் புறப்பட்டு விட்டார்.

 

சுமந்திரரும் இவர்கள் சம்பாஷனையின் போது உடனிருந்தார். கோபமுற்ற லக்ஷ்மணனை, தாய் கௌசல்யாதேவி அனைவரையும் சமாதானப்படுத்தினார். சீதை தானும் வனத்திற்கு உடன் வருவேன் என்று வற்புறுத்திப் புறப்பட்டு விட்டாள். அண்ணனுக்குத் துணையாக இளவல் லக்ஷ்மணனும் புறப்பட்டார். தாயின் ஆசியைப் பெற்று மூவரும் மரவுரி தரித்துக் கொண்டனர். அயோத்தியே சோகமயமான வெள்ளத்தில் மூழ்கியது. இப்போது வாசித்த நிகழ்ச்சிகள் அனைத்துமே பலதரப்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பும், சோகத்தை ஏற்படுத்தி, கவலைகளில் மூழ்கச் செய்வதுமான காட்சிகள் தான். கௌசல்யா தேவியின் துக்கம் தான் மலை போன்று காணப்படுகிறது. அரசாட்சி செய்யா விட்டாலும் பரவாயில்லை, பெற்ற மகனைப் பதினான்கு ஆண்டுகள் கண்ணால் காண இயலாதவாறு, கடுமை நிறைந்த தண்டகாரண்ய வனம் அல்லவா அனுப்புகிறார் என்று எண்ணி தசரதன் மேல் கோபம் கொள்கிறாள். பிறகு தீராத சோகம் கொண்டவள், உடன் தம்பி  லக்ஷ்மணன் துணைக்குச் செல்வதால்  சற்றே ஆறுதல் கொள்கிறாள். ராமருக்கு மகுடாபிஷேகம் கிடையாது; பரதனுக்குப்  பட்டாபிஷேகம் என்பதைக் கேட்டு எரிமலை எனக் கோபத்தில் பொங்கிச் சீறியவர் இளவல் லக்ஷ்மணர் தான்.  அதுவும் மன்னனுடனே யுத்தத்திற்குத் தயாராகி விட்டார்! ராமர் தான் என்ன செய்வார்?

 

(குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தல வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

 

ஓம் ஶ்ரீ ஈஸ்வர குருநாதா சரணம்! ஓம் குருவே துணை!

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

 

அருளாசிகள்,

தவத்திரு ஶ்ரீ நாகராஜன் சுவாமி,

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button