பள்ளி கொண்ட ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம், குரு ஈஸ்வரலயம், மெய்யறிவு ஞான சபை, guru eswaralayam, guru eswaralayam charitable trust, charitable trust in pollachi, charitable trust in coimbatore, charitable trust in tamil nadu, charitable trust in india, non-profit organization, non-profit organisation, palli konda sri selva anjaneyar, parihara sthalam, thavath thiru nagarajan swami, dhavath thiru nagarajan swami

Palli Konda Sri Selva Anjaneyar Parihara Sthalam

 

ஸ்ரீ ஆஞ்சநேயரின் பாக்கியம்

ஆண்டவன் அகிலலோகங்களிலும் வியாபிக்கும் மகாசித்தி உடைய பரமாத்ம சொரூபி. அவ்வாண்டவனின் அம்சமாக மேன்மை மிகு அவதார மூர்த்தியாகத் தோன்றியவரே ஸ்ரீ ராமபிரான். பகவான் ஸ்ரீ ராமரின் பக்தர்களில் மிக சிறந்தவரும், போற்றுதலுக்கு உரியவரும், தெய்வத் தன்மை பெற்றவரும் ஸ்ரீ ஆஞ்சநேயர்தான்! ஸ்ரீ ராமரிடம் அருள் உபதேசம் பெற்று, பகவான் சேவை ஒன்றே புண்ணியம் என்று வாழ்ந்தவர். ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு பகவான் ஸ்ரீ ராமர் மனம் உவந்து சேவை சாதித்த வரலாறு, ஸ்ரீ அகத்திய மகாசித்தர் எழுதி வைத்துள்ள ஓலைச் சுவடிகளில் காணக் கிடைக்கின்றது.

என்னே இது விந்தை! பக்தனுக்காக பகவான் சேவை செய்வது என்பதே ஸ்ரீ ஆஞ்சநேயர் பெற்ற பாக்கியம் அல்லவா? பொள்ளாச்சி நஞ்சேகவுண்டன்புதூர் வாய்க்கால் மேட்டில், பள்ளி கொண்ட ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பற்றிய ஸ்ரீ அகத்திய மகாசித்தரின் கருத்துக்களும், ஸ்தல வரலாறும், படிப்பவர் கேட்பவர் அனைவரும் பேரு பெற்றவர்களாவர். இனி வரலாறு கூறும் விந்தை சரித்திரத்தை தெரிந்து கொள்வோம்!

இராவண இரகசியம்

தசகண்ட இராவணேஸ்வரன் சிறந்த சிவபக்தனாவான். அவன் திக் விஜயம் செய்த காலகட்டத்தில் திரு நளமகா முனிவரை சொர்க்கத்தில் சந்தித்தான். தனது ஊழ்வினை ஆயுள் பற்றிய இரகசியத்தை அவரிடம் தெரிந்து கொண்டான். தனது இறப்பிற்குப் பிறகு நரகலோகத்தில், தான் தண்டனை அனுபவிக்க வேண்டி புதியதோர் இடம் சிருஷ்டிக்கப்படுவதை நேரில் கண்டு மிகவும் அதிர்ச்சியுற்றான். தான் இத்தகைய கொடிய தண்டனையில் இருந்து தப்பிக்கும் உபாயம் ஒன்றை திரு நளமகா முனிவரிடம் பணிவுடன் கேட்டுக் பெற்றுக் கொண்டான்.

வானர சேனைகளுடன் வரும் ஸ்ரீ ராமருடன் யுத்தம் புரிந்து, பகவானாகிய அவரது திவ்ய கரங்களால் மடிய நேரிட்டால் மட்டுமே, நரக வேதனையில் இருந்து மீண்டிட முடியும் என்பதே அது! தனக்கு பரம பதமும் சித்திக்கும் என்பதை அறிந்து கொண்டான். மகிழ்வு கொண்ட இராவணேஸ்வரன் பகவான் ஸ்ரீ ராமரை இலங்கைக்கு வரவழைக்கும் காரணத்தை உத்தேசித்தான். அதன் விளைவே அன்னை ஸ்ரீ சீதா பிராட்டியை சிறை எடுத்தது!

இராவண மோட்சம்

ஏகபத்தினி விரதன் பகவான் ஸ்ரீ ராமர் கோபம் மிகுந்திட வானர ஸேனைகளுடன் புறப்பட்டார். ஸ்ரீ ஆஞ்சநேயர் உதவியுடன் கடலில் ஸேது பந்தனம் செய்வித்தார். ஸேது சமுத்திரத்தை கடந்து வேந்தன் தசகண்ட இராவணேஸ்வரனை குலத்தோடு சம்ஹரித்தார். பகவான் ஸ்ரீ ராமரின் அனுக்கிரஹத்தால் வேந்தன் இராவணேஸ்வரன் மோட்சப்ராப்தி அடைந்தான். அன்னை ஸ்ரீ சீதா பிராட்டியாரை சிறை மீட்டார் ஸ்ரீ இராமச் சந்திர மூர்த்தி. பகவான் ஸ்ரீ ராமரின் பக்தனான விபீஷணன், இலங்கை வேந்தன் இராவணேஸ்வரனின் சகோதரன் ஆவார். விபீஷணருக்கு ஸ்ரீ ராமர் அரசுரிமை பட்டம் சூட்டினார்.

ஸ்ரீ அகத்திய மகா சித்தருடன் ஆலோசனை

பிரம்ம குலத்தில் தோன்றியவனும், சிவபக்தனுமாகிய இலங்கை வேந்தன் தசகண்ட இராவணேஸ்வரனை வதம் செய்ததால், பகவான் ஸ்ரீ ராமருக்கு பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதனை நீக்கிக் கொண்டிட ஸ்ரீ அகத்திய மகா சித்தரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. முடிவில் இராமேஸ்வரத்தில் குறிப்பிட்ட முகூர்த்த காலத்திக்குள், முறையாக சிவலிங்கம் ஸ்தாபிதம் செய்து சிவபூஜை செய்வது என உறுதியானது. பகவான் ஸ்ரீ ராமபிரான் சிவ பூஜை செய்திட சிறந்த சிவலிங்கம் ஒன்றை கைலயங்கிரியில் இருந்து, குறிப்பிட்ட முகூர்த்த காலத்திற்குள் கொண்டு வர ஸ்ரீ ஆஞ்சநேயரைப் பணித்தார்.

ஸ்ரீ நாகலக்ஷ்மி தாயாரின் திருக்காட்சி

பகவான் ஸ்ரீ ராமரின் ஆணையைச் சிரமேற்கொண்ட ஸ்ரீ ஆஞ்சநேயர், கைலாய பர்வதத்தில் இருந்து சக்தி வாய்ந்த சிவலிங்கம் ஒன்றைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டார். வரும் வழியில் நாகவனத்து குரு ஈஸ்வராலயத்தில் பதினெண் சித்தர்களும், முனிவர்களும், கந்தர்வர்களும், தேவர்களும் கூடி ஸ்ரீ நாகலக்ஷ்மி தாயாரை வழிபாடு செய்து கொண்டிருப்பதை கண்டார். இந்திராதி தேவர்களோடு ஸ்ரீ குபேரனும் பக்திப் பரவசத்தோடு பூஜிப்பதைக் கண்டு ஸ்ரீ  ஆஞ்சநேயரும் வணங்கி வழிபட்டார். பகவான் ஸ்ரீ ராமர் சேவை செய்திடும் ஸ்ரீ ஆஞ்சநேயரை சித்தர்களும், முனிவர்களும்,தேவர்களும் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர். ஸ்ரீ நாக லக்ஷ்மி தாயாரை வணங்கி விட்டு ஸ்ரீ ஆஞ்சநேயரும் புறப்பட்டு இராமேஸ்வரம் வந்து சேர்ந்தார். இதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டு விட்டது.

ஸ்ரீ சீதா பிராட்டியாரின் சிவப்பிரதிஷ்டை

குறிப்பிட்ட முகூர்த்த காலத்திற்குள் ஸ்ரீ ஆஞ்சநேயர், சிவ பூஜைக்கு சிவலிங்கம் கொண்டு வர இயலாதவாறு, தெய்வ சங்கற்பம் அமைந்து விட்டது. ஸ்ரீ சீதா பிராட்டியாரின் திருக்கரத்தினால் தான் சிவபிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என்பது தெய்வ சித்தம் ஆகும். குறித்த முகூர்த்த காலத்திற்குள் அன்னையினால் மணலைக் கொண்டு சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. அச்சிவலிங்கத்திக்குள் சிவம், ஸ்ரீ ராமநாதராக எழுந்தருளினார். அனைவரும் ஆனந்தமுடன் வணங்க, பகவான் ஸ்ரீ ராமபிரான் இராமநாதரைப் பூஜித்து தனது பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொண்டார்.

ஸ்ரீ ஆஞ்சநேயரின் சிவப்பிரதிஷ்டை

ஸ்ரீ ஆஞ்சநேயர் சிவலிங்கத்துடன் இராமேஸ்வரம் வந்தடைந்தபோது ஸ்ரீ ராமரின் சிவபூஜை நிறைவு பெற்று விட்டது. மணலால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் ஸ்ரீ ராமநாதராக துலங்கிக் கொண்டிருப்பதை பக்தன் ஸ்ரீ ஆஞ்சநேயர் கண்டார். தான் கொணர்ந்த சிவலிங்கப் பிரதிஷ்டையை அண்ணல் செய்வதைக் கண்டு மகிழ எண்ணி இருந்தவர், அது நிறைவேறாத காரணத்தால் சிறிது சினமுற்றார். மணலால் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த ஸ்ரீ இராமநாத லிங்கத்தைத் தனது வாலினால் சுற்றி இழுத்து அப்புறப்படுத்த முனைந்தார். அதனால் ஸ்ரீ ஆஞ்சநேயரின் வால் சிறிது பின்னமுற்றது, இரத்தம் சொட்டியது. ஸ்ரீ ராமர் தனது பக்தன் செயல் கண்டு சமாதானம் செய்வித்து ஆறுதல் கூறினார். ஸ்ரீ ராமரின் விருப்பப்படி ஸ்ரீ ஆஞ்சநேய லிங்கத்தை வடக்குப் பக்கமாக பிரதிஷ்டை செய்யப் பணித்தார். ஸ்ரீ ஆஞ்சநேயர் தனது கரத்தினால் தான் கொணர்ந்த சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். அனைவரும் ஆசி கூறினர். ஸ்ரீ அகத்திய மகாசித்தரும் பெருமகிழ்வு எய்தினார்.

ஸ்ரீ ராமரின் அருள் வாக்கு

ஸ்ரீ ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் அருள் வாக்கினால் பிரச்சித்தி பெற்றுவிட்டது. பக்தனுக்காக பகவான் தந்த வாக்குதான் என்ன? அது, “புனிதம் மிகுந்த இராமேஸ்வரம் வந்து தீர்த்தங்களாடி வழிபாடு செய்திடும் பக்தர்கள் ஸ்ரீ ஆஞ்சநேயரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்தைப் முதலில் பூஜித்து வழிபடாமல், தம்மால் பூஜிக்கப்பட்ட ஸ்ரீ இராமநாதரை மட்டும் வழிபடுபவர்களுக்கு எவ்வித பலனும் ஏற்படாது” என்பதேயாகும். மேற்கண்ட வாக்கு பக்தன் மீது பகவான் கொண்ட பிரேமையினால், வந்துதித்த தெய்வீக வாக்காகும். அதனை அலட்சியம் செய்யாது கடைப் பிடிப்பவர்களுக்கு சகல வித சௌபக்கியங்கள் நிச்சயம் ஏற்படுகின்றது. இது உண்மையாகும்! ஸ்ரீ ஆஞ்சநேயர் மனம், ஸ்ரீ ராமரின் வாக்கினால் குளிர்ந்தது. தனது இதயக்கமலத்தில் என்றென்றும் குடி கொண்டு விளங்கும் பகவான் ஸ்ரீ ராமரை அநேகத் ஸ்தோத்திரங்கள் செய்து வணங்கினார் ஸ்ரீ ஆஞ்சநேயர். பிறகு ஸ்ரீ ராமர், ஸ்ரீ சீதா தேவியார், ஸ்ரீ லக்ஷ்மணன் ஆகியோர் அயோத்தி புறப்பட்டுச் சென்றனர்.

ஸ்ரீ ஆஞ்சநேயர் குரு ஈஸ்வராலயத்தில் தவம் புரிந்தது

பகவான் ஸ்ரீ ராமரும் மற்றவர்களும் அயோத்தி புறப்பட்டுச் செல்லும் போது, ஸ்ரீ ஆஞ்சநேயர் மட்டும் உடன் செல்லவில்லை. ஸ்ரீ ராமநாதர் லிங்கத்தை வாலினால் பற்றி இழுத்த தோஷத்தை போக்கிக் கொண்டிட விரும்பினார். அதற்குத் தகுந்த இடம் நாகவனத்து குரு ஈஸ்வராலயமே எனத் தேர்வு செய்திட்டார். கைலயங்கிரியில் இருந்து சிவலிங்கம் கொணர்ந்த போது நாகவன குரு ஈஸ்வராலயத்தில் சித்தர்களும், முனிவர்களும், இந்திராதி தேவர்களும், குபேரனும் கூடி ஸ்ரீ நாகலக்ஷ்மி தாயாரை வழிபட்டுக் கொண்டு இருக்கும் பரவசக் காட்சி நினைவு வர, நாகவனம் நோக்கிப் புறப்பட்டார். பகவான் ஸ்ரீ ராமரின் திருக்கரத்தால் தான் கொணர்ந்த சிவலிங்கம் ஸ்தாபிக்கக் படாததும், தனது வால் சேதமடைந்த சோகமும், தனக்கு ஏற்பட்ட சினமும் சேர்ந்து கொடிய தோஷமாகி, தன்னை வருத்துவதை உணர்ந்தார். சகலவித தோஷங்களையும் போக்கி நலமருளும் ஸ்ரீ நாக லக்ஷ்மி தாயாரின் சன்னதி வந்து வழிபாடு செய்யத் தொடங்கினார். நாகவனத்தில் பள்ளி கொண்டு தவம் புரிந்தார் ஸ்ரீ ஆஞ்சநேயர். ஸ்ரீ ஆஞ்சநேயரின் தோஷங்கள் இங்கே விலகியது. சதா ஸ்ரீ ராம நாம ஜெபம் செய்யத் தொடங்கி வாழ்ந்து வரலானார்.

நாகவனத்து குரு ஈஸ்வராலயப் பெருமை

ஆதியில் நாகவனத்தில் வருவோர்க்குப் புண்ணியங்கள் பெறவைக்கும் புனிதமான மலை ஒன்று இருந்தது. அம்மலையில் ஒன்பது குகைகள் இருந்தன. ஒன்பது குகைகளிலும் சித்தர்களும், முனிவர்களும் தங்கி தவம் புரிந்து வந்தனர் என்று ஸ்ரீ அகத்தியர் மகா சித்தர் அருளியுள்ள ஏடு விவரிக்கின்றது. நாகவன மலையில் இருந்து நீர் சொரியும் அழகிய ஓடையும் குளமும் இருந்திருக்கின்றது. உயிர் காத்திடும் அனேக பெரும்பயன்கள் விளைவிக்கச் செய்திருக்கின்றன.

ஸ்ரீ குபேரன் நாகவனத்தில் தவம் செய்து ஸ்ரீ நாக லக்ஷ்மி தாயாரின் வரபலம் பெற்று உயர்வடைந்ததும் இவ்விடத்தில்தான். ஸ்ரீ நாக லக்ஷ்மி தேவியை ஸர்ப வடிவிலும் அநேக தெய்வங்கள் வழிபட்டு மகிழ்ந்து கொண்டிருப்பதும் இந்த நாகவன குரு ஈஸ்வராலய ஷேத்திரத்தில்தான். கால சர்ப தோஷம் உடையவர்களும், களத்திர தோஷம், திருமண தடை தோஷம் உடையவர்களும், ராகு கேது திசை நடப்பவர்களும் மற்றும் கருவினில் வளரும் தோஷம் உடையவர்கள், ஸர்பஹத்தி செய்தவர்களும் வந்து சாப விமோசனம் பெற்று நற்கதி பெற்றதும் இந்த நாகவனத்து ஸ்ரீ நாகலக்ஷ்மி தாயாரிடம் தான்! இன்னும் அனேக தோஷங்களுக்கும் ரிஷிகளும் பரிகாரம் பெற்றதும் இதே நாகவனத்தில் உள்ள தெய்வீக சக்தியிடம்தான் என்பதில் எள்ளளவும் ஐயமே இல்லை! இன்றும் நடந்து கொண்டிருப்பது கண்கூடு.

ஸ்ரீ ஆஞ்சநேயரின் “ஸ்ரீ ராம காவியம்”

புனிதம் உடையதும் புண்ணியம் மிகுந்ததும் வந்தடைந்தோரின் சகல தோஷங்களையும், பாவங்களையும் போக்க வல்லதாகிய நாகவனத்து குருஈஸ்வராலயத்தை வந்தடைந்தார் ஸ்ரீ ஆஞ்சநேயர். ஸ்ரீ நாகலக்ஷ்மிதேவியை வழிபட்டு தோஷங்களை நீக்கிக் கொண்டு மன நிம்மதியையும் சந்தோஷத்தையும் அடைந்தார்.தனது இதயத்தில் குடி கொண்டிருக்கும் ஸ்ரீ ராமரின் அரும் பெரும் காவியத்தை எழுதிட எண்ணம் கொண்டு நாகவனத்து குருஈஸ்வராலய ஷேத்திரத்தில் தவம் இயற்றி வந்தார். இறைஅருள் ஸ்ரீ ஆஞ்சநேயருக்குப் பரிபூரணமாகச் சித்தித்தது. திவ்யமாக “ஸ்ரீ ராம காவியத்தை” எழுதி முடித்தார். அக்காவியம் பல தெய்வீக இரகசியங்கள் கொண்டது. ஸ்ரீ ஆஞ்சநேயரின் மனோ பீஷ்டம் ஈடேறியதும் குருஈஸ்வராலயத்தில் தான்!

ஆனந்தமாகவும் அமைதியாகவும் ஸ்ரீ ராம நாம ஜெபத்தை உச்சரித்த படியே தவத்தை தொடர்ந்து மேற்கொண்டார. ஸ்ரீ ஆஞ்சநேயரின் ஸ்ரீ ராம காவியத்தில் நாகவனத்தை பற்றிய அனேக மகிமைகளும் மற்றும் தான் பள்ளி கொண்டதும் இடம் பெற்றிருந்தன. ஸ்ரீ ராமர் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே ஸ்ரீ ஆஞ்சநேயரின் “ஸ்ரீ ராம காவியம்” வெளி உலகினுக்கு கிடைக்காமல் போய் விட்டதும் தெய்வத்தின் சித்தம் தான்! நாகவனமும், புனிதம் மிக்க மலையும், ஓடையும், குளமும், நவ குகைகளும் மற்றும் உயிர் காக்கும் சஞ்சீவினியும் பூமிக்குள் புதையுண்டு ஆழ்ந்து போய் விட்டது. இப்போது ஸ்ரீ ஆஞ்சநேயர் பள்ளி கொண்டு தோற்றம் தரும் சிறிய மலை முகடுதான், பூமியின் மேற்புறம் காட்சியளிக்கின்றது. இதுவும் கால வெள்ளத்தின் மகிமைதான்!

நாகவன குரு ஈஸ்வராலயம் வரும் ஸ்ரீ ராமர்

கற்புக்கரசியாம் அன்னை ஸ்ரீ சீதாதேவியைச் சிறை மீட்ட அண்ணல் ஸ்ரீ ஜெயராமருக்கு அயோத்தியில் பட்டாபிஷேக வைபவம் செய்திட மும்முரமாக ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். பகவான் ஸ்ரீ ராமர் தனது தெய்வீக பக்தன் ஸ்ரீ ஆஞ்சநேயர் வர வில்லையே என்று வருத்தம் மேலிடக் காட்சி தருகின்றார். ஸ்ரீ ராம ஸேவை ஒன்றையே கொண்டு வாழ்ந்த தனது பக்தனை பட்டாபிஷேக வைபவத்திற்கு அழைத்து வர வேண்டும் என எண்ணுகிறார் பகவான் ஸ்ரீ ராமர். அன்னை ஸ்ரீ சீதா தேவியார், இளைய பெருமாள் ஸ்ரீ லக்ஷ்மணர் உடன் வரப் புறப்பட்டு நாகவனத்து குரு ஈஸ்வராலயம்வந்து சேருகின்றார். அவருடன் அனேக சித்தர்களும் முனிவர் பெருமக்களும் வந்து கூடி விட்டனர். ஸ்ரீ நாகலக்ஷ்மி தாயாரை பூஜித்துவிட்டு, குரு ஈஸ்வராலயத்தின் மலை முகட்டில் ஸ்ரீ ஆஞ்சநேயர் பள்ளிகொண்டு நிம்மதியாக ஆழ்ந்த நித்திரையில் இருப்பதைக் காண்கின்றனர். பள்ளி கொண்டு விளங்கும் தனது பக்தனைக் கண்டு பகவான் ஸ்ரீ ராமர் மகிழ்ச்சியில் திளைக்கின்றார்.

பக்தனுக்காக பகவான் ஸேவை சாதித்தல்

பள்ளி கொண்ட ஸ்ரீ ஆஞ்சநேயரைக் கண்டு மகிழ்ந்த அண்ணலின் முகம் கண்டு அன்னை ஸ்ரீ சீதா தேவியும் ஆனந்தம் கொள்கின்றார். பிராட்டியார் “ஆஞ்சநேயா” என்று இனிய குரல் கொடுத்து அழைக்கின்றார். ஆழ்ந்து உறங்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர் எழவில்லை. பகவான் தனது தேவியிடம் “ஸீதே.... இதோ எனக்காகவே சேவை புரிந்த எனது பக்தன் உறங்குகின்றான். உறங்குபவரை உசுப்புதல் கூடாது. எனது பக்தன் உறங்கட்டும்” என்று வாஞ்சையுடன் கூறுகின்றார். தனது பக்தனுக்கு ஸேவை சாதிக்க விருப்பம் கொள்கின்றார். அன்புடன் ஸ்ரீ ஆஞ்சநேயரின் முகம் நோக்கி தலைப்பக்கமாக அமர்ந்துக் கொண்டு, தனது பக்தனின் தலையைத் தூக்கி தனது மடியின் மீது வைத்து கொள்கின்றார். இக்காட்சியை காணவே தெய்வங்களும் கூடிவிட்டனர் என்று ஸ்ரீ அகத்திய மகாசித்தர் பெருமான் குறிப்பிடுகின்றார்.

அண்ணலுடன் சேர்ந்து அன்னையின் ஸேவை

ஸ்ரீ ராமபக்தன் ஸ்ரீ ஆஞ்சநேயரின் தலையை தன் மடிமீது வைத்துக் கொண்ட பகவானின் ஸேவை கண்டு இளைய பெருமாள் ஆனந்தக் கண்ணீருடன் கைகூப்பி வணங்கினார். அன்னை ஸ்ரீ சீதா தேவியோ தனது உத்திரியத்தின் தலைப்பைக் கொண்டு காற்றின் மைந்தனுக்கே காற்று வர வீசுகின்றார். அண்ணனுடன் சேர்ந்து அன்னையின் ஸேவையை அனைவரும் வியந்து நோக்கி மகிழ்வுடன் பரவசம் உற்று வணங்கினர்! பகவான் ஸ்ரீ ராமர் உறங்கும் தனது பக்தன் உடலைப் பரிவுடன் வருடி கொடுக்கின்றார். காண்பதற்கு அறியதன்றோ பகவானின் ஸேவைத் திருக்காட்சி! இதனை விவரித்துக் கூறிட யாரால் தான் முடிந்திடும்? என்னே பகவானின் கருணைத் திருவுள்ளம்! பகவானே நின் புகழ் வாழி! வாழியவே!...

பக்தனுக்காக பகவான் புரிந்திடும் அரிய ஸேவைக் காட்சியை ஸ்ரீ அகத்திய மகாசித்தர் பெருமான், தானே நேரில் கண்டு தரிசித்து மகிழ்வுடன் வாழ்த்தியதையும், தெய்வங்கள் அனைவரும் கூடி கண்டு களித்து வாழ்த்தியதைப் பற்றியும் பரவசத்துடன் கூறுகின்றார்!

ஸ்ரீ ராமநாதர் கண்டுமகிழ்ந்த ஸ்ரீ ராமஸேவை

பகவான் ஸ்ரீ ராமரின் சேவை நிகழ்ச்சியைக் கண்டுகளித்து வாழ்த்திட தேவர்களும், முனிவர்களும், பதினெண் சித்தர்களும் வந்து கூடி விட்டனராம்! ஸ்ரீ வியாகிரபாதர், ஸ்ரீ பதஞ்சலி மகா முனிவர் மற்றும் வானவர்கள் அனைவரும் வந்திருந்த காட்சியை விவரிப்பது கூட வார்த்தை விவரணத்திற்கு அப்பாற்பட்டது என்பது அவர் வாக்கு!

இதற்கெல்லாம் மேலாக ஸ்ரீ ராமபிரானால் பூஜிக்கப்பட்ட ஸ்ரீ இராமநாதேஸ்வரர் இந்த ஆனந்தக் காட்சியை சிறிது தூரத்தில் நின்று கண்டு மகிழ்ந்தாராம். ஸ்ரீ ஆஞ்சநேயரே சிவனின் அவதாரம் அன்றோ! இப்புண்ணிய காட்சியை கதை வடிவில் வாசித்து கொண்டிருப்பவர்களும் கூட பெரும் புண்ணியம் பெற்றவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை! ஸ்ரீ இராமநாதர் நின்று ஸ்ரீ ராம சேவையைக் கண்டு மகிழ்ந்த இடத்தில் சிவலிங்க அடையாளம் ஒன்று இருப்பது இன்றைக்கும் கண் கூடு!

ஸ்ரீ ஆஞ்சநேயரின் நிலை

அனைத்து தெய்வங்களும் வந்து கூடிய காரணத்தால் குரு ஈஸ்வராலயத்தில் எல்லாத் தெய்வீக சக்திகளும் குடி கொண்டு வரும் பக்தர்களுக்கு நல்வாழ்வு அளித்து வருவதும் இன்றைக்கும் நடைபெற்று வருகின்றது.

வேண்டுவோர்க்கு வேண்டும் வரமருளும் ஸ்ரீ நாக லக்ஷ்மி தாயார், ஸ்ரீ வைகுண்ட வாஸன் சன்னதிகள், ஸ்ரீ ஆஞ்சநேயரின் பள்ளி கொண்ட சேவை காணக் கண்கோடி வேண்டும்! பகவான் ஸ்ரீ ராமஸேவையால் ஸ்ரீ ஆஞ்சநேயர் உறக்கம் நீங்கப் பெற்றார். “ஸ்ரீ செல்வ” என்று அன்புடன் தன் பகவான் அழைப்பதை செவிமடுத்தார்.

தனது தலையை தன் மடிமீது பகவான் ஸ்ரீ ராமர் வைத்துக் கொண்டும், தனது உடலை வருடிக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஸ்பரிசமும் சேர தன் நிலையை ஸ்ரீ ஆஞ்சநேயர் உணர்ந்து கொண்டார். அன்னை ஸ்ரீ சீதா தேவி தனது உத்திரியத்தால் காற்று வீசிடும் நிலையையும், ஸ்ரீ லக்ஷ்மணர் வணங்கிய படியே சேவை சாதிப்பதையும் கண்டு வியப்பும் அதிர்ச்சியும் அடைந்தார் ஸ்ரீ ஆஞ்சநேயர்! தேவாதி தேவர்களும் முனிவர்களும் கூடி இருக்கும் காட்சியையும் கண்டு, ஸ்ரீ ஆஞ்சநேயரின் நிலை எப்படி இருந்திருக்கும் என்று சற்றே எண்ணிப்பாருங்கள்!..

இருகரம் கூப்பி வணங்கியபடியே ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தி எழுந்து கொண்டிருக்கும் திருக்காட்சியின் வடிவமே, குரு ஈஸ்வராலயத்தில் தரிசனம் தந்து கொண்டிருக்கும் அவரின் திரு மேனியாகும்! வியப்பின் எல்லைக்கே சென்று விடுகின்றோம்! பக்தியினால் நமது கரங்களும் நம்மை அறியாமல் எழுந்து வணங்குகின்றன. உள்ளம் நெக்குருகி கண்கள் ஆனந்தக் கண்ணீர் பெருக்குகின்றன!

பகவானுக்கும் பக்தனுக்கும் நடைபெற்ற சம்பாசனைகள்

பகவான் ஸ்ரீ ராமரையும், அன்னை ஸ்ரீ சீதாதேவி, ஸ்ரீ லக்ஷ்மணரையும் பணிந்து வணங்கிய ஸ்ரீ ஆஞ்சநேயரை மார்புறத் தழுவிக் கொண்டு ஸ்ரீ ராமர் மகிழ்ச்சி அடைந்தார். பள்ளி கொண்ட ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயருக்கு வேண்டும் வரம் அருள விருப்பம் கொண்டார். பகவானிடம் ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயர் “ஸ்ரீ நாகலக்ஷ்மி தாயார் அருள்புரிந்து கொண்டிருக்கும் குரு ஈஸ்வராலய ஷேத்திரத்தில் தான் என்றென்றும் பள்ளி கொண்டு தவம் புரிந்து வர அனுமதிக்க வேண்டும்” என்றார். மற்றும்,

“ஸ்ரீ பரதருக்கு தாங்கள் ஸ்ரீ பாதுகையை தந்து அருளியது போல் எமது வலது மார்பில் தங்களுடைய தாமரைத் திருவடிகள் என்றென்றும் நிலை பெற்று இருக்கும்படி பதித்தருள வேண்டும்” என்றும்,

“தான் என்றும் ஸ்ரீ ராம நாமம் ஜெபித்து பள்ளி கொள்ளும் குரு ஈஸ்வராலயம் நாடி வரும் பக்தர்களுக்கு, எனது சன்னதியில் சகல சௌபாக்கியங்களும் பெற்றிட அருள் புரிந்து, ஐயன் காத்திட வேண்டும். இதுவே எமது விருப்பம்” என்று ஸ்ரீ ஆஞ்சநேயர் வேண்டி நின்றார். பகவான் ஸ்ரீ ராமரும், அன்னை ஸ்ரீ சீதா தேவியும், ஸ்ரீ லக்ஷ்மணரும் “அப்படியே ஆகும்” என்று அருள் புரிந்தனர். கூடியிருந்த அனைவரும் “ஜயவிஜயீபவ” என்று கோஷம் முழங்கி ஆசி கூறினார்.

பகவான் ஸ்ரீ ராமர் தனது பட்டாபிஷேக வைபவத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த பிறகே, ஸ்ரீ ஆஞ்சநேயர் மீண்டும் குரு ஈஸ்வராலயத்தில் பள்ளி கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். அதன்படியே அயோத்தியில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா இனிதே நடைபெற்றது. ஸ்ரீ ஆஞ்சநேயர் பகவான் ஸ்ரீ ராமரின் திருவடியை தாங்கி மகிழ்ந்தார். ஸ்ரீ ராமரின் திருவடி ஸ்ரீ ஆஞ்சநேயர் மார்பின் வலதுபுறம் மிகவும் அழகுறத் துலங்கியது.

ஸ்ரீ பதஞ்சலி முனிவருக்கு ஸ்ரீ ராமர் வேண்டுகோள்

நாகவன குரு ஈஸ்வராலயத்தில் வருகை புரிந்து ஸ்ரீ ஆஞ்சநேயரைச் சிறப்பித்த பகவான் ஸ்ரீ ராமபிரான், நாகவனத்தில் தவம் செய்து கொண்டிருந்த ஸ்ரீ பதஞ்சலி மகாமுனிவருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். தான் பிரதிஷ்டை புரிந்த ஸ்ரீ இராமநாதமூர்த்தியை வழிபாடு செய்து வரவேண்டும் என்பதே. மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் எழுதிய ஸ்ரீ ராம காவியத்தை உடன் எடுத்துச்சென்று அதனை இராமேஸ்வரத்தில் பாதுகாத்து வர வேண்டும் என்பதே! ஸ்ரீ ராமபிரானின் வேண்டுகோளைக் கட்டளையாக எண்ணி ஸ்ரீ பதஞ்சலி மகாமுனிவர் இராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டுச் சென்றார். குரு ஈஸ்வராலயத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயரால் எழுதப்பட்ட ஸ்ரீ ராம காவியம் இன்றளவும் ஸ்ரீ பதஞ்சலி மகா முனிவர் பாதுகாப்புடன் பூஜிக்கப்பட்டு வருவதாகவே மகாஞானியர்களின் வாக்காகவே இருந்து வருகிறது! ஸ்ரீ பதஞ்சலி மகா முனிவரின் ஜீவ சமாதியை இன்றைக்கும் இராமேஸ்வரம் ஸ்ரீ இராமநாதர் ஆலயம் செல்பவர்கள் கண்டு தரிசித்து அருள் பெறலாம். ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தி கொணர்ந்த கைலாய லிங்கத்தையும் தரிசிக்கலாம்.

ஸ்ரீ அகத்திய மகாசித்தரின் வாக்கு

பகவான் ஸ்ரீ ராமருக்கும், பள்ளி கொண்ட ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயருக்கும் குரு ஈஸ்வராலயத்தில் நடைபெற்ற சம்பாஷணை நிகழ்ச்சியைத் தான் அப்படியே தனது ஏடுகளில் பதிப்பித்து வைத்திருப்பதாகவே ஸ்ரீ அகத்திய மகா சித்தர் தெரியப்படுத்துகின்றார். அவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறிடும் அம்மகாசித்தர்,பக்தர்கள் படித்துப் பயனுறும் விதம் தந்து அருள்வதாகவும் அனுக்கிரகித்து இருக்கின்றார். [சற்குருநாதர் ஸ்ரீ ஈஸ்வரபட் சுவாமி அவர்களின் அருளினாலும், ஸ்ரீ அகத்திய மகாசித்தர் அருட்கடாச்சத்தினாலும் ஏடு கிடைத்திடவே குரு ஈஸ்வராலயத்தில் பக்தர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றார்கள்].

இக்கலியிலும் குரு ஈஸ்வராலயம் பள்ளி கொண்ட ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயரின் பரிகார ஸ்தலத்தை நாடி, நம்பிக்கையுடன் வருகை புரிந்திடும் பக்தர்களின் மனோ பீஷ்டம் கண்டிப்பாக நிறைவேறிடும்! சகல சௌபாக்கியங்களையும், செல்வச் செழிப்பையும் பெறுவார்கள்! தொழில் துறை வளர்ச்சிகளிலும் மேம்பாடு அடைவார்கள்! குழந்தைகளின் சகல தோஷங்களும் நீங்கி கல்வி அறிவில் சிறப்பு பெற்றிடுவார்கள்! கருவில் வளரும் தோஷங்களும், கால ஸர்ப தோஷங்கள், திருமணத் தடைகள், களத்திர தோஷங்கள், தாரமங்களதோஷம், நாகஹத்தி செய்தவர்கள் தோஷம், பிதுர் தோஷம், வேதியர் சாபம்,சந்நியாசி சாபம் என்று அனேக தோஷம் உடையவர்களும் இங்கு வந்து வேண்டிக் கொண்டு வழிபாடுகள் செய்து நன்மைகளையே அடைவார்கள். இது உண்மை! இது அம் மகாசித்தரின் அருள் வாக்காகும். ஸ்ரீ ஆஞ்சநேயர் விரும்பி எக்காலத்திலும் இங்கு வாஸம் செய்வது போல் தானும் இனி குரு ஈஸ்வராலயத்தில் கோவில் கொண்டு பக்தர்களைப் பாதுகாத்து வருவோம் என்று கூறி இருப்பது பக்தர்கள் செய்த பாக்கியமே ஆகும்! இது ஒரு வரப்பிரசாதம் என்றே கருதுகின்றோம். இத்தகைய புனிதம் மிக்க தெய்வங்களின் இருப்பிடமே குரு ஈஸ்வராலயம் என்பது மகாசித்தரின் வாக்காகும்.

பரிகார ஸ்தல யாகங்கள்

குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தலத்தில் தெய்வீக சக்திகள் பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டி தினந்தோறும் யாகம் நடைபெற்று வருகின்றது. தெய்வீக இயற்கை மூலிகைகள் மட்டுமே கொண்டு யாகம் நடத்தப்பட வேண்டும் என்பது சற்குருநாதர் கட்டளையாகும். அதனால் காற்று மண்டலம் தூய்மை அடைவதோடு பக்தர்களின் உள்ளங்களிலும் தெய்வீக அனுக்கிரஹம் கிடைத்து வாழ்வு வளம் பெரும்! தெய்வீக சக்திகளை உக்கிரப்படுத்தும் துர்யாகங்களினால் மக்களின் மனம் கேடடையும் என்பது சித்தர் பெருமக்களின் வாக்காகும். எனவே தெய்வீக மூலிகைகள் கொண்டு மட்டுமே ஸ்ரீ அகத்திய மகாசித்தர், யாகங்கள் செய்திடக் கூறி இருக்கின்றார்.

பௌர்ணமி அமாவாசை காலங்களில் மகாயாகம் நடைபெறுவதோடு, உலக மக்கள் நலனுக்காகவும் பிரார்த்தனைகள் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்களின் வேண்டு கோளுக்கு ஆயுள் ஹோமம், தொழில் அபிவிருத்தி ஹோமம் மற்றும் தோஷ நிவர்த்தி ஹோமம் முதலியன செய்யப்படுகிறது. யாகத்திற்கு உண்டான பொருட்களை பக்தர்கள் கொண்டு வந்து கொடுக்கும் போது அவை நிறைவேற்றப்படுகின்றதே அல்லாது காணிக்கைகள் நிமித்தம் யாகங்கள் செய்யப்படுவதில்லை. குரு ஈஸ்வராலத்தின் தெய்வீக யாகங்களில் கலந்து கொண்டு நன்மைகள் அடைந்தவர்கள் ஏராளமானோர்!

அன்னதான மகிமை

குரு ஈஸ்வராலயத்தில் பௌர்ணமி, அமாவாசை தினங்களில் நடைபெற்றிடும் அன்னதானம் பிரசித்தி பெற்றது. பக்தர்களாலேயே அன்னதானம் நிறைவேற்றப்படுகிறது. அனேக பக்தர்கள் தங்களால் இயன்ற அளவு அன்னதான சேவையில் பங்கு கொண்டு வருவது வியப்பூட்டும் உண்மை. ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா, சிவராத்திரி விழா, நவராத்திரி பண்டிகை, குரு பூஜை விழா மற்றும் முக்கிய பண்டிகை நாட்களிலும் பக்தர்களே முன்னின்று மகிழ்வுடன் அன்னதானம் செய்கின்றார்கள். புரட்டாச்சி மாதத்திய சனிக்கிழமை நாட்களும் விமரிசையாக வழிபாடுகளும் அன்னதானமும் பக்தர்கள் நடத்தி வைக்கின்றார்கள்.

பக்தர்கள் பக்தி பூர்வமாக விரதம் இருந்து, உணவுகள் சமைத்து வீட்டில் இருந்து கொண்டு வந்து, சனிக்கிழமை நாட்களில் பிரியமுடன் அன்னதானம் செய்து மகிழ்வது, பரவசப்படுத்தும் காட்சியாகும். ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடுகளின்றி, எல்லோரும் ஒரு தாய் மக்களாக, அமைதியுடன் பூஜித்து அன்னதான உணவை சாப்பிடும் காட்சி, கை கூப்பி வணங்கிடச் செய்திடும் என்பதில் மிகையில்லை!

ஸ்ரீ அகத்திய மகாசித்தர் அருளியது யாதெனில்  சித்தர்களும், இரு நூற்று நாற்பது முனிவர்களும், ஐநுற்று அறுபது தேவாதி தேவர்களும், சூட்சும வடிவில் அன்னதானத்தில் கலந்து கொண்டு அருள் புரிகிண்றார்கள் என்பதாம்!

நம்பிகையுடனும், விருப்பத்துடனும் அன்னதானத்தில் பங்கேற்கும் பக்தர்களுடைய தோஷங்களளும் துயரங்களும் நீங்கி அருள் ஆசி பெற்றுச் செல்கின்றார்கள். அன்னதானத்தின் மகிமையே இங்கு அளிக்கும் அன்னம், அனேகருடைய உடல் உபாதைகளையும் போக்கி ஆரோக்கியமான தன்மையை உண்டாக்கி விடுவதுதான்! தானத்தில் சிறந்தது அன்னதானம்.

இது குரு ஈஸ்வரலயத்தில் தெய்வீக சக்திகள் பக்தர்களுக்கு அனுக்கிரகிக்கும் மகிமைதான் என்பது பிரசித்தம்!

பக்தர்களுக்கு தெய்வீக பாதுகாப்பு

தெய்வீக சக்திகளினாலும், சித்தர்கள், முனிவர்களாலும் பாதுகாக்கப்பட்டு வரும் குரு ஈஸ்வராலாயத்தில் பக்தர்கள் அமைதி காத்து மகிழ்வுடனும், பொறுமையாகவும் வழிபாடுகள் செய்வதுதான் உத்தமம். இங்கு எவ்வித குற்றங்களும், பூஜைக்கு தடங்கல்களும் ஏற்படுத்துவது கூடாது. பக்தர்களுடைய நலனும் சுபிட்சமும் கருதியே இங்கு வழிபாடுகள்  நடத்தப்படுகின்றன. இறைவனை வாழ்த்தி வழிபடுபவர்கள் வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பதும் உண்மையாக உள்ளது. தினந்தோறும் நடைபெற்றிடும் தெய்வீக யாகத்தின் விபூதி பிரசாதம் மஹாஜெபம் ஜெபிக்கப்பட்டு சன்னதியில் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றே ஆசி வழங்கப்படுகிறது. பாதுகாப்பு ரஷை கயிறுகளும் பக்தர்கள் விருப்பப்படி பெற்றுச் செல்கின்றார்கள். இங்கு வருகை தரும் ஒவ்வொரு பக்தனும் ஆண்டவரை ஜெபம் செய்பவர்களாகவும் நம்பிக்கையுடன் வழிபாடு செய்பவர்களாகவும் இருப்பது ஆன்மீக மலர்ச்சியை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

ஸ்ரீ செல்வ கற்பக விநாயகர் சன்னதி

அனுதினம் முறையாக பூஜைகள் நடைபெற்று வரும் இத் தெய்வ சன்னிதானத்தில் வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருளும் மகாசக்தியாக ஸ்ரீ செல்வ கற்பக விநாயகர் காட்சி தருகின்றார். குழந்தைகளுக்கு ஏற்படும் சகல தோஷங்களும் மற்றும் வாழ்வில் உண்டாகும் தடைகள் நீங்கி வெற்றி பெற வழிபாடுகள் நடத்துகின்றனர். அனைவருக்கும் நலன்கள் விளைய பிரார்த்தனை செய்திடும் சிறப்புடைய சன்னிதானம்.

ஸ்ரீ ராமநாதேஸ்வரர்

ஸ்ரீ ராம சேவையைக் கண்டு மகிழ ஸ்ரீ ராம நாதேஸ்வரர் தோற்றம் தந்த இடத்தில் தினப்படி விஷேச பூஜைகள் ஆலய குருக்களால் நடத்தப்படுகிறது. சிவம் மகிழ்ந்து உவந்து நின்ற இடம் ஆதலினால் இப்புனித இடம் பாதுகாக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. பிறகு இங்கு ஸ்ரீ இராமநாதேஸ்வரர் ஆலயம் அமைத்திட பக்தர்கள் எண்ணத்தில் கொண்டு, நலன்கள் ஏற்படுத்தும் சன்னிதானமாகத் திகழப்போகின்றது.

ஸ்ரீ துவிஜர் சன்னதி

நவகிரஹங்களின் பீடத்தின் மீது ஸ்ரீ துவிஜர் காட்சி தருவது அற்புதக் காட்சியாகும். தொழில் முன்னேற்றம், கல்வியில் முன்னேற்றம், விவசாயம் செழிக்கவும், காலா காலத்தில் மழையும், தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்கவும் பூஜைகள் மேற்கொண்டு வருகின்றார்கள். இங்கு தேங்காய் உடைக்காமல் முழுமையாக வைத்தே பூஜிக்கப்படுகின்றது. திருமணத் தடை நீங்கவோ, தொழில் முன்னேற்றம் கருதியோ விரதம் இருப்பவர்கள், வெற்றிலை-பாக்கு, மஞ்சள் தடவிய இரண்டு தேங்காய்கள், மஞ்சள் கொம்பு, மஞ்சள் கயிறு, எலுமிச்சம்பழம் கொண்டு வந்து பூஜித்து வருகின்றார்கள். வெற்றி மேல் வெற்றி அடையவே இங்கு பக்தர்களுக்காக பிரார்த்தனை செய்யப்படுகின்றது. வெள்ளிக்கிழமை இங்கு விரதமிருப்போர் வழிபடுகின்றனர். யாக சமித்துக்கள் காணிக்கையாகப் பெறப்படுகிறது.

ஸ்ரீ சக்கரத் தாழ்வார், ஸ்ரீ நரசிம்மர் சன்னதி

சிறப்பு மிகுந்த இச்சன்னிதானத்தில் தினசரி பூஜைகள் நடைபெற்றாலும் வியாழக்கிழமை அன்று விஷேச பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. தொழில் தடை, குடும்பப் பகை மற்றும் எதிர்ப்புகள் விலகி வாழ்வில் வெற்றிபெற்று ஒற்றுமையுடன் வாழவே இங்கு பக்தர்கள் பிரார்த்திக்கின்றார்கள். நன்மைகள் நடைபெற்று அருள் பெறுவதும் நடைமுறையில் கண்டு மகிழலாம். இங்கு தர்பையை காணிக்கையாக செலுத்துகின்றார்கள்.

ஸ்ரீ செல்வ குபேரர்

ஸ்ரீ செல்வ குபேரர் தவம் புரிந்து ஸ்ரீ நாகலக்ஷ்மி தேவியை வழிபட்டு நன்மைகள் அடைந்த இடம். இங்கு பக்தர்களின் விருப்பப்படி அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. தினமும் ஆலய குருக்களால் ஆராதனை செய்யப்படும் புண்ணிய இடம் இது. பச்சிலை மூலிகைகளால் அர்ச்சிக்கப்பட்டு வருகிறது. அமாவாசை பௌர்ணமி காலங்களில் குபேர பூஜை செய்து பக்தர்கள் செல்வச் சிறப்படைய வேண்டி புனித தீர்த்தம் வழங்கப்படுகிறது. சகல சௌபாக்கியங்களும் பெற்றிட இங்கு வழிபடுகின்றார்கள்.

ஸ்ரீ வைகுண்ட வாஸப் பெருமாள் சன்னதி

ஸ்ரீ தேவி பூதேவி உடனமர் ஸ்ரீ வைகுண்ட வாஸப் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றார்கள். பிதுர் தோஷம், குல தெய்வ சாபம், அந்தணர் சாபம், சந்நியாசிகளின் சாபம் பெற்று அல்லல் உறுபவர்கள் இங்கு வந்து வழிபட்டு சாபங்கள் நீங்கி நன்மைகள் அடைகின்றார்கள். தோஷங்கள் அகன்று விடுகின்றன. பிரதி அமாவாசை தினத்தன்று மதியம் 12.00 மணிக்கு முன் (அபிஜின் முகூர்த்த காலம்) மோட்ச தீப வழிபாடு நடைபெறுகின்றது. இறந்து பட்ட ஆத்மாக்கள் பிறவாப் பெரு நிலையை அடையவே இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.

தவிரவும் அமாவாசை தினம் ஸ்ரீ வைகுண்ட வாஸர் திருமேனியின் மீதுவெண்ணை போடும் நிகழ்ச்சியும் இரவு வரை செய்கின்றார்கள். அமாவாசை மட்டுமே இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. வாழ்வில் துயரம் நீக்கிடும் ஸ்ரீ வைகுண்ட வாஸருக்கு இதுவே காணிக்கையாக்கப்படுகிறது.

அமாவாசை அன்றைய இரவு ஸ்ரீ வைகுண்ட வாஸருக்கு மூலிகைத் தைலக் காப்பும், வெண்ணீர் ஸ்நானமும் செயவிக்கப்படுகிறது. மூலிகைத் தைலமானது தோல் சம்பதமான வியாதிகளுக்கு மேல் பூசும் ஔஷதமாக உபயோகிக்கப் பக்தர்களால் கொண்டு செல்லப்படுகின்றது. இவரை வழிப்பட்டு நன்மை பெற்று வரும் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்து வாழ்கின்றார்கள்.

ஸ்ரீ நாகலக்ஷ்மித் தாயார் சன்னதி

நாகவனத்து குரு ஈஸ்வராலயத்தின் வரதேவதை! சித்தர்களாலும் முனிவர்களாலும் தெய்வங்களினாலும் பூஜிக்கப்படும் மகா சக்தி தேவி! பதினாறு நாகங்கள் குடை பிடிக்க அருள் அரசாட்சி புரிபவள். அன்னையின் சன்னதியில் ராகு புத்தி திசை நடப்பவர்கள் ஸர்ப தோஷம் மற்றும் ஸர்ப ஹத்தி செய்தவர்கள் கருவில் வளரும் கால ஸர்ப தோஷம் உடையவர்கள் வந்து வழிபாடுகள் செய்து தோஷம் நீங்கப் பெறுகின்றனர்.

வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் வில்வம், அறுகு, தர்பை இம் மூன்றையும் வாழை இலையில் வைத்து தாயாரின் சன்னதியில் பூஜிக்கப்பட்டு அவைகளை பிரசாதமாக கொண்டு செல்கின்றார்கள். அப்பிரசாதங்களை நீரில் இட்டு குளித்திடும் போது ஸர்ப தோஷம் நீக்கம் பெறுகிறது. வெள்ளிக் கிழமைகளில் பொங்கல் வழிபாடும் பக்தர்களால் நிறைவேற்றப்படுகிறது.

ஸ்ரீ நீலமேகசியாமளர், ஸ்ரீ மலையாள கருப்பண்ணர் சன்னதி

தினசரி வழிபாடுகள் நடைபெறும் இடம். குரு ஈஸ்வராலயத்தின் காவல் தெய்வங்கள். இங்கு பக்தர்கள் தங்களது கால் நடைகளின் அபிவிருத்தி வேண்டி பிரார்த்திக்கின்றார்கள். ஆடு, மாடு, கோழிப் பண்ணைகள் நடத்துவோர் மற்றும் எல்லாக் கால் நடைப் பிராணிகளும் நலமடைய வேண்டுவோர் இங்கு வேண்டிக் கொண்டு நன்மை பெறுகின்றார்கள். ஸ்ரீ நீலமேகசியாமளர் பெருமாளின் அவதார மூர்த்தம். இங்கு விவசாயம் செய்பவர்கள் வந்து விவசாயம் செழித்திட பிரார்த்திக்கின்றார்கள்.

ஸ்ரீ நந்தி மண்டபம்

பிரதோஷ காலங்களில் ஸ்ரீ நந்தி பகவானுக்கு சிறப்பான விழா நடைபெறுகின்றது. பக்தர்கள் அறுகு, வில்வம், கனி மாலைகள் சூட்டி வழிபடுகின்றார்கள். ஸ்ரீ நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு வெண்ணை, உறைந்த நெய் பூசப்படுகின்றது. குறைப்பாடு உடையவர்கள் நலம் பெற அஷ்ட தீப ஆராதனை செய்து பிரார்த்திக்கின்றார்கள்.

நினைவு ஆற்றல் குறைந்த குழந்தைகளுக்காக ஸ்ரீ நந்தி பகவானுக்கு அபிஷேகிக்கப்படும் தேனை பிரசாதமாக கொண்டு சென்று குழந்தைகளுக்குக் கொடுத்துவர நினைவு ஆற்றல் பெருகுகின்றது. இதை சிறப்பானதொரு வழிபாடாகச் செய்து வருகின்றார்கள்.

பள்ளி கொண்ட ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயர் சன்னதி

கலியுகத்தில் வரபிரசாதமாக கிடைத்த கோயில். இருபத்தி ஏழு அடி நீளத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் பள்ளி கொண்டிருக்கும் திருக்கோலம் காணக் காணப் பரவசத்தையும் பக்தி உணர்வையும் நமக்கு ஏற்படுத்தி விடுகின்றது இராமாயண கால தொடர்புடையது. பொதுவாக புண்ணியங்கள் கோடி தந்திடும் புனிதம் மிகுந்த ஷேத்திரம் இது. இங்கு விஷேச ஆராதனைகள், கலச பூஜைகள் மற்றும் பக்தர்களுடைய நலன் வேண்டி பிரார்த்தனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தினமும் இங்கு விசேஷ பூஜை நாட்கள் தான். உலகெங்கும் உள்ள பக்தர்கள் நாடி வந்து வழிபட்டு அருள் பெற்றுச் செல்வது கண்கூடு.

வாசனாதி திரவியங்கள் மற்றும் பச்சிலை மூலிகைகளினால் இவருக்கு அர்ச்சனைகள் நடைபெறுகின்றது. இங்குள்ள யாக குண்டத்தைப் பக்தர்கள் பதினோரு முறை வலம் வந்து வணங்கி தங்களது இஷ்ட கார்யப் பூர்த்திக்கு வேண்டிக் கொள்கின்றார்கள். சனிக்கிழமை மற்றும் பௌர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூடி வழிபாடு செய்து வருகின்றார்கள்! தீமைகளை விலக்கி நன்மைகளைச் செய்திடும் பள்ளி கொண்ட ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயரை, சொல்லின் செல்வனை வழிபட்டு வாழ்வின் உயர்நிலை பெற்றிட குரு ஈஸ்வராலயம் வாருங்கள்.

பரிகார ஸ்தலத்தின் பூஜை நேரங்கள்

  • பிரதிதினம் அதிகாலை சன்னதிகள் திறக்கப்பட்டு யாகங்களும் பூஜைகளும் நடைபெறுகின்றது.
  • மதியம் 1.00 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.
  • பிறகு மாலை 4.00 மணிக்கு பரிகார ஸ்தல நடை மீண்டும் திறக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்படுகிறது.
  • இரவு 8.00 மணிக்கு மேல் இரவு பூஜைகளை நிறைவு செய்து நடை சாத்தப்படுகின்றது.
  • பிரதி சனிக்கிழமைகள் மற்றும் பௌர்ணமி, அமாவாசை, ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி, சிவன் ராத்திரி நாட்களில் நடை திறந்தே இருக்கும். பக்தர்களுக்கு விசேஷ பூஜைகள் செய்து தருகின்றார்கள்.