ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.
வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!
மனிதனே புனிதன் பாகம் – 2
(15) கடலோடும் கொள்ளைக் கூட்டம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பாரத தேசத்தின் மேற்குக்கடல் பகுதியில் கொடூரகுணம் கொண்ட ஒரு கூட்டம் கொள்ளையடிப்பதையே தொழிலாகவும், உயிர்வதை பண்ணுவதையே பொழுது போக்காகவும், கடலில் சுற்றியலைந்து திரிவதை வாழ்க்கையாகவும் எண்ணி இறுமாந்திருந்தது. இவர்களுக்கு பாரத தேசத்தில் விக்கிரமாதித்தியன் ஆட்சியில் செல்வச் செழிப்புடன் மக்கள் வாழ்ந்து கொண்டிருப்பதை, இவர்களிடம் பிடிபட்ட வணிகர்களிடம் இருந்து செய்தியைக் கிரகித்துக் கொண்டனர். பாரதத்தைக் கொள்ளையிட இன்னும் அநேகத் தீயவர்களைக் கூட்டாளிகளாக்கிக் கொண்டு, கொலைபாதக எண்ணத்தை வலுவாக்கியபடி சந்தோஷத்துடன் புறப்பட்டு வந்தனர். இறைவனின் நோக்கம் வேறுவிதமாக இருந்தது. பெரும் சூறைக் காற்றில் சிக்கி அவர்களது கப்பல்கள், படகுகள் சின்னா பின்னமாகிப் போனது. பலரும் மாண்டு போய் உடலில் வலுவுள்ள சிலர் உயிர்தப்பி பாரதமண்ணில் “காம்பே” என்ற துறைமுகப் பட்டினத்தின் வழியே கால் பதித்தனர். இனி கடலோட முடியாது என்ற நிலைமையில் நிலத்தில் தங்கி இருந்து காரியம் சாதிக்க வந்தவர்களைச் சந்தித்தான் காலன் என்ற தம்பனவசியன். அடர்ந்த வனத்தினுள் கிழக்கு நோக்கி பலகாததூரம் கடந்து காலன் தங்கியிருந்த அடர்ந்த வனத்திற்குள் வந்து சேர்ந்தனர். தம்பனவசியனை தூரத்தில் இருந்தபடியே கவனித்தனர். தூய நிற வெள்ளை உடையில் ஒரு மகானைப் போல், ஜடா மகுடத்துடன், வஞ்சக நெஞ்சமும், குமிழ் சிரிப்புமாக இருந்த அவனை நெருங்கினர். அவனது கண்களை நேருக்கு நேர் கண்டவர்கள், வசிய மயக்கத்திற்கு ஆட்பட்டு விட்டனர். அவர்கள் அனைவரையும் ஒருவித போதை மயக்கத்தில் ஆழ்ந்து இருக்கச் செய்யும் ரகசிய வித்தையை அவன் அறிந்திருந்தான். இப்படியாகத் தனக்கு அடிமை ஆட்களைத் தேர்வு செய்தான்.
பாடலிபுத்திரம் முதல் தலைநகரமாக இருந்தது. நாடெங்கினும் மக்களுக்கு உதவிட இலவச மருத்துவ விடுதிகள் துவங்கப்பட்டு ஆரோக்கிய வாழ்வினுக்கு வழிவகைகள் சிறப்பாகச் செய்யப்பட்டது. பெரிய மருத்துவ விடுதியானதால் அதன் தலைமைப் பொறுப்பு ஆயுர்வேத மருத்துவத்தில் மிகச் சிறந்தவரும், அறுவைச் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவருமான ஶ்ரீலஶ்ரீ சுஸ்ருதர் என்ற அறிஞர் பெருமானிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. அறிவிற்சிறந்த இவர் ஶ்ரீ மந் நராயணனின் அவதாரமாகப் போற்றப்பட்ட மருத்துவ சித்தர் ஶ்ரீ தன்வந்திரி பகவான் அவர்களுடைய சீடர்களில் முதன்மையான சீடராவார். விக்கிரமாதித்தியன் காலத்தில் தான் இவரது அவதாரம் நிகழ்ந்தது. மகான் ஶ்ரீ வல்லப ரிஷியின் ஆசீர்வாதத்தால் ஶ்ரீ பூவராகரிடம் அனுபவ மருத்துவக் கல்வி பயின்று நற்பெயர் பெற்ற பத்மபாதனை பாடலிபுத்திரம் சென்று மேன்மேலும் சிறப்படைய அவரது குருநாதர் அனுப்பி வைத்தார். பத்மபாதன் பகவான் ஶ்ரீ தன்வந்திரியின் அருளாசிகள் பெற்று பாக்கியவான் ஆனார். மன்னன் விக்கிர மாதித்தியன் இரண்டாவது தலைநகரம் நிர்மானித்த போது அதன் பெயர் மாகாளிப் பட்டினம் என்று வைப்பதாகத்தான் இருந்தது. அந்த சமயத்தில் அவர் வாழ்வில் மிகப் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நடை பெற்றது. அறிவிற்சிறந்தவன் என்று வானுறையும் தெய்வங்களால் போற்றப்பட்ட விக்கிரமாதித்திய மாமன்னன் அறிவுசால் போட்டியில் ஒரு பெண்பிள்ளையிடம் தோற்று அவளை மணமுடிக்கும் கட்டாயத்திற்கு ஆளாகிப் போனார்.
விக்கிரமாதித்திய மன்னனின் பட்டத்தரசி நாகவம்சத்தைச் சேர்ந்தவர். அவர்களுக்கு அரசியல் வாரிசுகள் என மகன், மகள் இரண்டு பேர் இருந்தனர். காடாறு மாதம் அரசாட்சியில் நாட்டை சீர்திருத்தவும், வளப்படுத்தவும் பட்டியுடன் சென்றிருந்த மன்னன் மனதினில் விடை காணமுடியாத கேள்விகள் சில எழுந்தன. அதற்கு யாரும் விடை கூறாத நிலையில், ஒரு ஊனமுற்ற பெண் விடை கூறினாள். அவளுடைய வெற்றிக்குப் பரிசுதான் தான் மன்னனுடன் திருமணம பந்தம். மாகாளிப்பட்டினத்தில் தான் அவள் வாழ்ந்து வந்தாள். மன்னனது ஓய்வு மாளிகையில் அவள் கண் எதிரில் அவளது வாழ்வு கேள்விக் குறியானது. இரவு நேரத்தில் தம்பனவசியனுடன் வந்த கள்வர்களுடன் மன்னன் போரிட நேர்ந்தது. மன்னன் அவர்களின் இருப்பிடத்தில் சிறைக் கைதியானார். உணவு, குடிநீர் எதுவுமே வழங்கப்படாத நிலையில் மன்னன் மயக்க நிலையில் கிடந்தார். அப்போது தான் அந்த அமானுஷ்ய சம்பவம் நிகழ்ந்தது. ஒரு ரிஷியானவர் அமர்ந்து தவம் செய்தபடி உள்ள தோற்றத்தில் ஆகாய மார்க்கத்தில் மிதந்து
வந்தபடி இருந்தார். தம்பன வசியன் காட்டுக்கள்வர்களுடன் வாழும் குகைக்குள் வந்து சேர்ந்தார். சிறையின் கதவுகள் திறந்து அவருக்கு வழிவிட்டன. அங்குள்ள அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்து இருந்தனர்.
(மனிதனே புனிதன் வரலாறு பாகம் -2 இன்னும் தொடர்ந்து வரும்)
வளம் பெருக! அருள் பெறுவோம்!
நன்றி, வணக்கம்!
ஶ்ரீ ஈஸ்வர குமரரின் தொண்டன்
மதுரை M.மேகநாதன்,
குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,
பொள்ளாச்சி .
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.