ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
15•11•2016,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(138) மனிதனே புனிதன் —
வீடே கொள்ளை போனது!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அக்காலத்தில் பொள்ளாச்சியில் கோஷ்டி சண்டைகள் நடந்து கொண்டிருந்த காலம். மரப்பேட்டை, பத்திர காளியம்மன் கோயில் பகுதி, ராஜாமில்ரோடு, சந்தைப்பேட்டை இன்னும் பல இடங்களில் பற்பல கோஷ்ட்டிகளும், அதற்குத் தலைவர்களும் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரையும் சென்று சந்தித்துக் கலகம் விளைவிக்க ஆட்களைத் தந்து உதவ வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்தனர், மில்அதிபரின் மூன்று மகன்களும். “எவ்வளவு பணம் செலவானாலும் சரி, எனது மகன்கள் மண்டையை உடைத்த குடும்பத்தைப் பூண்டோடு அழிக்காமல் ஓயமாட்டேன்” என்று சபதம் செய்தார் மில்அதிபரின் மனைவி.
பிறகென்ன பணம் அப்பாவிக் குடும்பத்தை அழிக்க தண்ணீராகச் செலவழிக்கத் துவங்கியது. மில் அதிபர் தனது மகன்களை அழைத்து, “டேய் பசங்களா, நீங்கள் தப்பு செய்யப் போகின்றீர்கள் என்று எனது மனம் கூறுகின்றது. கிராமத்தில் APM குடும்பம் மரியாதைக்கு உரியது. அடாவடித்தனம் ஒருபோதும் அவர்கள் செய்ய மாட்டார்கள். என்மீது மரியாதை கொண்டவர்கள். யாரோ அவர்களுக்கு வேண்டாதவர்கள் செய்யும் சூழ்ச்சி என்றே நினைக்கின்றேன். எதற்கும் யோசித்து முடிவெடுங்களப்பா” என்ற அவருடைய வாதம் எடுபடவில்லை. அவரது மனைவி மகன்களுக்குக் தைரியம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
பொள்ளாச்சியில் கோஷ்டித் தலைவர்கள் மில்அதிபரின் மகன்களுக்குப் புத்தி சொல்லி அனுப்பி வைத்தனர். “மிகுந்த மரியாதைக்குப் பேர்பெற்ற அக்குடும்பத்துடன் தகராறு செய்ய நாங்கள் தயாராக இல்லை ” என்ற பதிலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
“என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ எனக்குத் தெரியாது. APM குடும்பத்தில் ஒரு ஆளாவது பிணமாக வேண்டும்” என்று தாயார் கறுவிக் கொண்டிருந்தார். கோஷ்ட்டி தலைவர்களுக்கும் தெரியாமல், அவர்கள் ஆட்களுக்கு அதிகப் பணம் கொடுத்துத் தனிக் கூலிப்படையை தயார் செய்தனர். அப்படைக்கு மூவருமே தலைவர்களாகி விட்டனர். சந்தைப் பேட்டை ரெளடிகள் மற்றும் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து அடாத செயலுக்கும் துணிந்து விட்டனர்.
கிராமத்தில் மீன் கரை சாலையில் இறங்கிய புதுத் தலைவர்கள் மூவரும், முதலில் கம்பு சுத்தி வலுச்சண்டைக்கு ஊரையே அழைத்தனர். இரண்டு பட்ட ஊர் மக்களை நமக்கெதற்கு வம்பு என்று ஒதுங்க வைத்தனர் சுவாமியின் பெரியப்பா குடும்பத்தினர். பாயாசம் வைக்கச் சொல்லி இனிய நாளாகக் கொண்டாடினர். சுவாமி மீது அபிமானம் உடைய ஊர்க்குழந்தைகள் ஒன்று கூடி கலகக் கும்பலைச் திரும்பிப் போகச்சொல்லிக் கூச்சலிட்டனர். பெற்றோர் குழந்தைகளை வீட்டிற்கு இழுத்துப் போயினர். இது அநியாயம் என்ற குழந்தைகள் பெற்றோரால் அடிபட்டு அழுதனர்.
பாட்டியைக் கடையில் இருந்து கையைப்பற்றித் தெருவுக்கு இழுத்து வந்து கன்னத்தில் அறைந்தனர். வயோதிகம், தள்ளாமை காரணமாகக் கீழே விழுந்தும் இறைவனைத் துதித்தபடியே தெருவில் அமர்ந்து விட்டார். பலசரக்குக் கடையைக் கொள்ளை அடித்தனர். சந்தைப் பேட்டை ரெளடிகள் வேறென்ன செய்வார்கள்? மிகப்பெரிய மீனாட்சி அம்மன் படத்தை அடித்து உடைத்து மீனாட்சி அம்மனின் மார்பில் ஈட்டியைச் சொருகி எடுத்து வீதியில் விட்டெறிந்தனர். பிறகு வீட்டிற்குள் நுழைந்து மாரியம்மன் நீர்க்குடத்தைக் காலில் உதைத்து உடைத்தனர். வீட்டுப் பொருட்களை துவம்சம் செய்தனர். கைக்குக் கிடைத்த பணம், நகைகள் என அகப்பட்டதைச் சுருட்டிக் கொண்டு வந்த வாகனங்களில் ஏறி மேற்கு திசையில் சுங்கத்தை நோக்கிப் போனார்கள்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.