விரதகாலப் பலன்கள்!

0 179

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

29•07•2016,
வெள்ளிக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(26) மனிதனே புனிதன் —
விரதகாலப் பலன்கள்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஐம்புலன்கள் அடக்கத்தை விடவும் மிகச் சிறந்தது வேறு எதுவுமே கிடையாது என சுவாமி அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்.இந்தப் புலன் அடக்கத்திற்கு விரதம் என்பதை நானும் ஒப்புக் கொண்டு விட்டேன்.

விரதம் என்ற பெயரில் நான் சாப்பாடே சாப்பிடுவது இல்லை என்பவர்கள், வாயிக்கு ருசியான சிற்றுண்டிகளை விரும்பி உண்பதையும் கண்டிருக்கிறேன். கேட்டால் நான் குழம்பு ரசத்துடன் சாப்பாடு மட்டும் சாப்பிடுவது கிடையாது. சிற்றுண்டிகள் விரதக் கணக்கில் வராது. அதனால் இஷ்டம் போல் சாப்பிடலாம் என்று கூறினர். இவர்களிடம் புலன் அடக்கத்தைப் பற்றி எப்படிப் பேசுவது? சுவாமியைப் போன்று மெளனமாக இருந்து விடுவதல்லவா உத்தமம்!

ஒரு மண்டலம் அல்லது நாற்பத்தி எட்டு நாட்கள் புலனடக்கத்துடன் விரதம் இருந்து பார்த்தால் ஒரு உண்மை புலப்படும்! அதாவது நமது வாழ்க்கையில் கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் வேறுபட்ட பழக்க வழக்கங்கள் அனைத்தையும் கைவிட வேண்டியதாக இருக்கும்!

ஊருக்குள் அடங்காமல் அடாவடித்தனமாக வாழ்பவனும்;
நல்லோர் செற்கேளாமலும், பெற்றோரை மதியாமல் திரிபவனும் கூட விரத காலங்களில் அடக்கத்திற்கே மொத்த உருவமாக மாறி விடுவதைப் பார்த்து இருக்கிறோம். கெட்ட பழக்க வழக்கங்களை விட்டு விடுகிறார்கள்.

தியாகத்தின் செம்மலாகவே மனிதனை மாற்றி விடும் விரதமானது, பக்குவ நிலையில் இருக்கும் நமது சுவாமிக்கு எத்தனை அருட் கொடைகளை வழங்கி இருக்கும்!
வைராக்கியமுடைய மனது எவ்வளவு சாதனைகளைப் புரிய உதவி செய்து விடுகிறது?! நல்லுணர்வுகளையும், நற்பண்புகளையும் உருவாக்கி நன்மைகள் தந்திடும் இவ்விரதத்தின் சிறப்பை வாழ்த்திடவே தோன்றுகிறது!

சுவாமியின் வீட்டில் கதவைத் தட்டி சூலக்கல் வரவேண்டும் என்ற அசரீரியைக் கேட்டு ஊரில் காலை முதல் அதே பேச்சாக இருந்தது!

நடுஇரவுக்குப் பிறகு விடியவிடிய மிகவும் கனமான மழை பெய்து எங்கும் தண்ணீர் பெருகி ஓடியது. காலையில் சுவாமி பிரார்த்தனை செய்த பின்னர், திரு.நாகப்பநாயுடு, திரு. சிங்கத் தேவர், திரு.பேச்சிமுத்து மூவரும் நமது சுவாமி அவர்களைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு பஸ்ஸில் ஏற்றி சூலக்கல் கோயில் போனார்கள்.

நல்ல மழையினால் அங்குள்ள ஓடையில் வெள்ளப் பெருக்கு இருப்பதாகவும், நாகு சுவாமியை ஓடைநீரில் முகம் கழுவச் செய்யப் பேசியபடியே ஓடைக்குக் கூட்டிப் போனார்கள். அங்கு உள்ளவர்கள் மிகவும் பரிதாபம் என்று சொல்லி அனுதாபப்பட்டு மாரித்தாய் நல்லது செய்வாள் என்று ஆறுதல் கூறினார்கள்.

நீர் வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தது. முழந்தாள் அளவு நீரில் நிற்க வைத்துப் இருபுறமும் பாதுகாப்பாக நின்று கொண்டு உதவினர். நாகு சுவாமி நீரை எடுத்து முகம் கழுவ, சுரீர் என எரிச்சல், கடுமையான வலி கண்டு பொறுத்தவரை மீண்டும் அழைத்துச் சென்று வழியில் உள்ள மரத்தடி மேடையில் அமரச் செய்தனர். முகத்தைத் துடைத்துச் சுத்தம் செய்தனர்.

கண்கள் மெல்ல மெல்லத் திறக்க, இரத்தம் போன்று சிவந்த விழிகளில் கூச்சமும், வலியும் மெல்லக் குறைந்தது. ஆகாயத்தில் மேகம் விலகி பளிச்சென்று சூரியன் தெரிந்தது.
மேடையில் இருந்து ஒரு அம்மா, அவிழ்ந்த கூந்தலும், இடுப்பில் சிறிய கூடையும், கூடைக்குள் பல வண்ணத்தில் உருண்டை வடிவ பெரிய மணிமாலைகளும், கையில் வெள்ளியில் கட்டுக்களுடன் கூடிய கரிய நிறப் பிரம்பும், வாய் நிறைய வெற்றிலைச் சிவப்பும், மாநிறமான உடலும், ஒரு கையில் கலச செம்புடன் மேடையை விட்டுக் கீழே இறங்கி கோயிலை நோக்கி மெதுவாக நடந்து செல்வதை யாவரும் பார்த்தனர்.

திரு.நாகப்பநாயுடு அவர்கள் அம்மனுக்கு நேர்ச்சை போலும் என்று கூறியபடியே ஆகாயத்தைப் பார்த்து நன்றி கூறினார். கோவிலுக்குள் சென்றார்கள். பூஜாரி தவிர கோயிலில் யாருமில்லை!

நாயுடுஅவர்கள் பூசாரியிடம் சுவாமிக்கு நேர்ந்த துன்பத்தைக் கூறினார். கலசதீர்த்தம் மற்றும் கூடையில் நிறைய முத்துக்கள் எடுத்துக் கொண்டு கோயிலுக்குள் வந்த அம்மாவைப் பற்றியும் விசாரித்தார். பூஜாரி கையை விரித்து அசைத்து யாரும் வரவில்லையே என்றார்.

நமது சுவாமி, “குழந்தைகளைப் பார்க்கத் தாய் வந்திருப்பாள்” என்றதும் அவர், “ஏனப்பா உனக்குப் பேசக் கூட வருமா? இந்தப் பத்து நாட்களாக நாங்கள் பட்டபாடு ஐயப்பனுக்கே வெளிச்சம்!” என்றவர் கண்ணீர் சிந்தினார்.

“அப்பா நாகு சுவாமி உன்னைத் சுற்றி ஏதோ நடக்கிறது! எங்கள் அறிவுக்கு எட்டவில்லை?! ஏதாவது குற்றம் குறைகள் எங்களிடம் இருந்தால் மன்னித்து விடப்பா!” என்று நாத்தழுதழுக்கக் கூறி சுவாமியின் கையைப் பற்றினார். பூஜை செய்து விட்டு உற்சாகமாக வீடு திரும்பினர். இறைவா நன்றி!

கடைசிக்காலம் உயிர் துறக்கும் வரை மூன்று பெரியவர்களும் நமது சுவாமிக்கு மிகச் சிறந்த நண்பர்களாக, இறை பக்தியில் சிறந்தவர்களாக விளங்கி இறைவனடி சேர்ந்தனர்.

(மனிதனே புனிதன் வரலாறு தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்! மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button