ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
14•8•2016,
ஞாயிற்றுக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(41) மனிதனே புனிதன் —
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நச்சுத்தன்மை செடிகளானது உயிரினங்கள் விடும் நச்சுக் காற்றைத் தங்கள் சுவாசத்தில் உறிஞ்சிக் கொண்டு, பிறவற்றிற்கும் நன்மையைச் செய்து விடுகின்றன. தீய குணம் கொண்டவர்கள் பிறருடைய சுவாசங்களில் வெளிப்படும் தீமைகளை ஈர்த்துக் கொண்டு நன்மைகளையே மற்றவர்களுக்குச் செய்கிறார்கள். காரணம் அவர்களுக்கு நன்மை எது?, தீமை எது? என்று பிரித்து உணரத் கூடிய தன்மையைத் தங்களுடைய கோபகுணங்களால் இழந்து விடுகின்றனர். அது அவர்களுடைய அறியாமையே தவிர வேறில்லை!
அத்தகைய தீமையாளர்கள் இறைசக்தியின் துணை இருப்போரை எதுவும் செய்து விட முடியாது என்ற காரணத்தால், மாயனிடம் சுவாமி தைரியமாக உரையாடினார். இறைசக்தியின் அருளுடன் வாழும் வாழ்வில் நன்மைகள் நிச்சயம் கிடைக்கும். இறையருளின் மீது நம்பிக்கை வைத்து நமக்கும் மற்றவர்களுக்கும், நன்மையான காரியங்களைச் செய்ய விரும்புகிறவர்கள், உலகில் சிறப்புடையவர்களாகவும், இறைசக்திக்குப் பிரியமானவர்களாகவும் இருந்து வருவார்கள்.
பிரபஞ்ச சக்தியானது எல்லையில்லாப் பரந்து விரிந்த அறிவினால் இறையருளைச் செயற்படுத்துகிறது. அதனைப் பெறுகின்ற அறிவுடையவனால் வாழ்வில் ஒழுக்கமான நற்பண்புகளைப் பெற்றுவிட முடியும் . அப்படிப்பட்டவர்கள் இறை நம்பிக்கை வைத்து வாழ்க்கையை அன்பு வழியில் கொண்டு சென்று தங்களது கடமைகளைச் செவ்வனே முடிப்பார்கள். அதற்கும் இறையருள் துணை நின்று பாதுகாக்கும்.
ஒருவர் தனக்குத்தானே பகையாக முடியுமே அல்லாது மற்றவர்களுடைய பகை நமக்குத் தீமை செய்யாது. அப்படியே செய்ய வந்தாலும் இறையருளுடன் அதனை ஜெயிக்க வாழ்வில் நல்லதே, நேர்மையாக நடக்கும். இந்த உபதேசத்தைச் சுவாமி என்றுமே கடைப்பிடித்து வருபவர். எனவே மாயனின் கோபமும், கிடைக்காது என்று தெரிந்தும் விடாத பிடிவாதமும், பழி வாங்கும் உணர்வும், இறையருளைச் சிந்திக்கும் மேன்மக்களைக்
கேடுறுத்த எண்ணிய அடாத செயலுமே அவரைத் தோல்வியுறச் செய்தன. அதுமட்டுமல்லாமல் கோபத்தை நம்முள்ளேயே வைத்திருப்பதானது நமக்கு நாமே தீங்கு செய்யும் காரியமாகும். அதனை மாயன் சரிவரச் செய்தது அவரது அறியாமை என்றே கொள்ள வேண்டும்.
ஆகாயத்தில் உலாவும் ஆத்மாக்களில் ஏதாவது ஒன்றோ அல்லது பலவோ எப்படி இருந்தாலும், அவைகளை ஈர்த்து பூமியில் உள்ள ஏதாவது ஒரு பொருளினுள் குறித்த காலத்தில் நுழையச் செய்து விட்டால் அவன் சொல்வதைக் கேட்டு, அது நடக்கும் ஜீவனாகி விடும். அவைகளுக்கு நல்லவன், கெட்டவன் என்ற பாகுபாடு கிடையாது. தீமையாளன் ஏவியதைச் செய்து முடிப்பார்கள். அவைகள் உயிர் பெற்ற பிறகு தீமையாளனால் கூட அவைகளை அழிக்க முடியாது.
எல்லாவற்றையும் செய்து முடிக்க கோபம் அங்கு உபயோகப்படாது. பொறுமை இழந்ததால், கை கூடி வராததால் மாயனின் கோபம் மாயன் மீதே திரும்ப அவர் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டு, தான் உருவாக்கி விட்ட தீய சக்திக்கே தன்னை அர்ப்பணித்துக் கொடூர ஆவிஆத்ம மாந்திரீக சக்தியாக மாறி அந்தக் குறிப்பிட்ட மரத்தையே தனது இருப்பிடமாகக் கொண்டு விட்டார். சரியாக இருபத்தி ஐந்து வருடங்கள் சென்று சுவாமி மாயனை மீண்டும் சந்திக்கும் சூழலும் உருவானது விசித்திரமே!
சுவாமி ஊருக்குத் திரும்பி வந்த பிறகு பல மாதங்களுக்குப் பிறகுதான் மாயன் நிலை மாறுபட்டுப் போனது. குருநாதருடன் மீண்டும் சுவாமிக்கு சந்திப்பு ஏற்பட்டபோது, குருநாதர் கூறினார், “நாகராஜா கொஞ்ச காலத்திற்கு நீ என்னைப் பார்க்க முடியாது. நல்லது, கெட்டது இரண்டுமே உனக்கு அனுபவப் பாடமாக மாறப் போகிறது. அதில் நீ எடுக்கும் முடிவானது உனது வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிடப் போகிறது. மீண்டும் உனது பொறுமையால்தான் நீ ஜெயிக்க முடியும். மீண்டும் சந்திப்போம்” என்று கூறிச் சென்று விட்டார்கள். சுவாமி தனது குருநாதர் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தார்.
சுவாமி தனக்குள் சங்கல்பம் சொல்லிக் கொண்டே குருநாதரை ஏக்கமாகப் பார்த்தவர் கண்களில் நீர் திரையிட மன உறுதி கொண்டார்.
” கடந்து சென்றதைப் பற்றியோ, நிகழ்காலத்தில், நடந்த, நடந்து கொண்டிருந்த செயல்களைச் பற்றியோ எனக்கு எந்தவிதக் கவலையும் இல்லை! இதோ இப்பொழுதே நான் முழுமையான சுதந்திர உணர்வை சற்குருநாதர் ஆசியுடன், இறைவன் தியானத்தில் அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன். பிறரது எண்ணத்திற்கு என்றுமே நான் அடிமைப் படுவதும் இல்லை! இந்த உடல், மனம் இவற்றிற்கும் நான் அடிமைப்பட்டுக் கிடக்கவும் இல்லை! ஏனெனில் நான் யாரையும் வெறுக்கவும் இல்லை! மற்றவர்களிடத்தில் கோபம் கொள்ளவும் எனக்கு உரிமை இல்லை. நான் ஈஸ்வரனாகிய இறைசக்தியை வணங்கி வருபவன். இறைவா உமக்கு நன்றி”
நன்றி! வணக்கம்!
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M. மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.