ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
26•10•2016,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(109) மனிதனே புனிதன் —
வித்தியாசமான சவால்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“அமானுஷ்யங்கள் கைக்கடிகாரத்தையும் குறிப்பாகப் பணத்தையும் எடுத்துக் கொண்டு போய் என்ன செய்கின்றன? சொல்!” என்ற சாமியாரின் சரளமான கன்னடம் விடுதியின் காவலாளியைத் தடுமாறச் செய்தன. பதில் கூறாமல் திணறினார். அதற்குள் இன்னொரு நபரும், “என் பணம் போச்சே” எனக்கூக்குரல் இட்டார். சாமியாரும் சிலரும் விடுதியின் பின்னால் ஓடினர். பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி வந்த வாலிபன் ஒருவன் பிடிபட்டு விட்டான். காணாமல் போனவரின் பணத்தில் அவர் பென்சிலால் எழுதி வைத்த அடையாளத்தைக் கூறியதும் அது அப்படியே வாலிபன் கையில் இருந்த பணத்தில் இருந்தது. திருடன் அகப்பட்டான்!
ஆனால் முரட்டுக் கும்பல் ஒன்று வியாபாரிகளைச் சூழ்ந்து கொண்டது.வியாபாரிகள் அனைவரும் பேருந்தை நோக்கி ஓடினார்கள். முரட்டுக் கும்பல் துரத்தியது. அவர்கள் பேருந்தை வளைத்துக் கொண்டார்கள். தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். பேருந்தின் பக்கங்களில் கையால் பலமாக அடித்துக் ‘கீழே இறங்குங்கள்’ எனக் காட்டுக் கூச்சல் இட்டனர். நமது சுவாமிக்கு ஆச்சரியம் காத்திருந்தது! வாகனத்தில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர், “இனி நம்ம காரியத்தைச் பார்ப்போமா” என்றதும் சக வியாபாரிகள் ‘ஆகா ஒகோ’ எனக் குரல் கொடுத்தபடி எழுந்தனர்.
எல்லோரும் பிடரியில் கைகளைக் கட்டிக் கொண்டார்கள். பிறகு பேருந்தில் இருந்து இறங்கிக் பேருந்தைச் சுற்றிலும் வட்டமாக நின்று கொண்டனர்.முரட்டுக் கும்பல் திகைத்தது. வியாபாரிகள் முதுகுப்புறம் சட்டைக்குள் வைத்திருந்த, கைக்கு அடக்கமான ஆனால் பயங்கரமான ஆயுதங்களை வெளியே எடுத்துக் கொண்டனர். பல வியாபாரிகள் கராத்தே கற்று இருந்ததால் அந்த பாணியில் நின்று கொண்டு தீ விழியால் மிரட்டினர்.
வயதான இன்னும் ஐந்து பெரியவர்கள் பேருந்தில் கொண்டு வந்திருந்த சிலம்பாட்டக் கம்புகளை எடுத்து வந்து சுழற்றி, எட்டு வீடுகள் கட்டி, கிருக்கி எடுத்துப் பகுல் அடித்துச் சலாம் வேறு வைத்துக் கம்பின் நுனியை இடம், வலமாக ஆட்டி வலுச்சண்டைக்கு அழைப்பு வேறு விட்டனர். நமது சுவாமியும் சாமியாரும் இந்த வேடிக்கை வினோதத்தைப் பார்த்தபடி சிரித்துக் கொண்டிருந்தனர். ஐந்து பெரியவர்களும், விடுதியின் காவல்காரரை கம்பு சுழற்றியபடி, பேருந்தின் அருகில் அழைத்து வந்தனர். வியாபாரிகளுள் பலருக்கும் பல பாக்ஷைகள் பேசுபவர்களாக இருந்தனர். நமது சுவாமியின் மைத்துனர் சாம்ராஜ் நகரில் இருந்து தேங்காய் வியாபாரக் கொள்முதல் செய்து வந்தவர். அவரும் அவர்களிடம் ஏதோ பேசினார். திருட்டுக் கொடுத்த பொருட்கள் எல்லாம் ஒழுங்காக வந்து சேர்ந்தன. முரட்டுக் கும்பல் திரும்பிச் சென்றது. பேருந்தும் புறப்பட்டது. பணம் திருடிய வாலிபன் ஒரு கல்லை எடுத்துப் பேருந்தை நோக்கி விட்டெறிந்தான். பேருந்தின் பின்புறம் ‘டொம்’ என்ற சப்தத்துடன் தாக்கியது.
கிளீனர் சேட்டு வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டுப் கீழே குதித்து, அவன் விட்டெறிந்த கல்லை எடுத்து ‘மவனே’ என்று விட்டெறிந்தார். பெருத்த ஆரவாரத்தோடு பேருந்து கிளம்பியது. ஆனைமலை சாமியார்,” இப்படிப்பட்ட நேரங்களிலும் ஜெபம் செய்து நம்மை நாம் சமனப்படுத்த வேண்டும்” என்க்கூறிவிட்டு தியானத்தில் ஆழ்ந்து போனார். நமது சுவாமிக்கு ஆனைமலை சாமியார் என்று கூறிக் கொண்டு தன்னுடன் பயணிக்கும் அவர்மீது மரியாதை கலந்த பாசம் ஏற்பட்டிருந்தது.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.