வாழும் வழி தேடிய தெய்வீகக் குடும்பம்.

0 167

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

08•07•2016,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(5) மனிதனே புனிதன் — வாழும் வழி தேடிய தெய்வீகக் குடும்பம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சீர்மிகுந்த சிவகங்கைச் சீமையில் இருந்து வாலை குருநாதர் வம்சத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம், வாழும் வழி தேடி, ஞான வள்ளல் முருகன் அருளாட்சி செய்யும் பழனியம்பதியை அடைந்து, விவசயத் தொழில் செய்து தர்ம சிரத்தையுடன் வாழ்ந்து வந்தது.

பல தலை முறைகள் சிறப்புடன் வாழ்ந்த குடும்பம் பிளேக் நோய் பரவிய காலத்தில், பழநியில் இருந்து முருகன் அருள் பெற்று மேற்கு திசை நோக்கி நகர்ந்தது.

சேர வள நாட்டின் கொங்கு தேசமான கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள, அருள் மாந்தர் நிறைந்த பொள்ளாச்சியின் வடதிசை
யில் இருக்கும் ஓர் சிற்றூரில் தங்கி வாழ்ந்து மீண்டும் விவசாயம் செய்து வந்தது.

தான, தர்ம, சத்திய வாழ்வில் ஈடுபட்ட அவர்களின் செல்வம், சூழ்ச்சியாளர் யுக்தியினால் இழந்து, வறுமை நோயினால் வாடி அந்த கிராமத்தை விட்டுக் குடும்பம் வெளியேறியது.

பொள்ளாச்சி நகரின் மேற்கு திசையில் ஓடும் ஆழியாற்றின் கரையில் தங்கி வாழ்ந்து வரலாயினர்.

இறையுணர்வில் திளைத்த
அக் குலத்தில் பொன்னம்மாள் என்ற மூதாட்டி ஈஸ்வர சிந்தனையாய் தவ வாழ்வில் ஈடுபட்டு வாழ்ந்து வந்தார்.

அன்னாரின் ஒரே புதல்வி பாப்பாத்தி என்று அழைக்கப்படும் பாப்பம்மாவை, தனது சகோதரன் கடைசிப் புதல்வன் P.M.சாமி என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.

தம்பதியரின் இல்லற வாழ்வில் பிறக்கின்ற குழந்தைகள் மூன்று வயதாகும் போது கை கால்களில் வீக்கம் கண்டு இறந்து போயினர்.

இரண்டு ஆண் குழந்தைகளும் இறைவனடி சேர்ந்து விட, மூன்றாவதாகக் குழந்தை வேண்டி ஒவ்வொரு கோயிலாகச் சென்று, புனித நீராடி இறைவனைத் தொழுது வந்தனர். அக் குழந்தையாவது நீடுழி வாழ வேண்டித் தவம் இருந்தனர்.அவ்வாறு வரமிருந்து பெற்றவர் தான் நமது சுவாமி நாகராஜ் அவர்கள்.

மூன்றாவதும் ஆண் குழந்தை. கிடைத்தற்கரிய செல்வம் கிடைத்ததாய் எண்ணி, பாட்டி பொன்னம்மாள் பாராட்டிச் சீராட்டிக் குழந்தையை வளர்த்து வந்தார்.

மூன்றாம் வயது வந்தது; கூடவே கை கால்களில் வீக்கமும் வந்தது.பேச்சு மூச்சற்று, கண் விழிக்காமல், பிழைப்பதே அரிது என்ற நிலையில் குழந்தை மரணத்தை தழுவியது.

குழந்தையை முற்றத்தில் படுக்க வைத்து குடும்பத்தினரும் சூழ்ந்து, உடல் அருகே அமர்ந்து இறைவன சோதனை என்று எண்ணி வாய்விட்டுப் புலம்பி அரற்றினர்.

இவரது அன்னையின் தாயார் பொன்னம்மாள் மட்டுமே, எவ்விதக் கலக்கமும் இல்லாமல்
தைரியமாக இருந்துள்ளார்.
இறை அருட்குழந்தை பிழைத்து எழும் என்று எண்ணி தியானத்தில் பாட்டி ஆழ்ந்து போனார்.

(மனிதனே புனிதன் — வரலாற்றுத் தொடர் இன்னும் வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரர் தொண்டன்
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button