வஞ்சகத்தின் வீழ்ச்சி.

0 168

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

03•08•2016,
புதன்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(30) மனிதனே புனிதன் —
வஞ்சகத்தின் வீழ்ச்சி.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிறருடைய கருத்துக்கள் நமக்குப் பிடிக்காமல் போனாலும் கூட, நாம் அதனை ஏற்றுக் கொண்டு ஒத்துப் போவதும்; பிறருடைய தவறுகளைத் தெரிந்து கொண்டு, தேவைக்கு மேல் அதிகப்படியாக மன்னித்து அதனை ஏற்றுக் கொள்வதும்; மற்றவர்களுடைய பலவீனங்களுக்கு அனுசரணையாக நாம் நமது, திறமைகளையும், பலங்களையும் ஒடுக்கிக் கொண்டு இருப்பதன் காரணமாக, சமுதாயத்தில் ஒரே விதமான மனிதர்கள் தொடர்ந்து செழித்து வாழவே பயன்படுகிறது. இதனால் எதற்கும் உணர்ச்சி வசப்படும் தன்மைகள், நம்மிடம் உருவாகும். நிதானத்தன்மைகள் வாழ்வில் குறைந்து போகும். பிறருக்கு இன்னல் விளைவிக்கும் குணங்கள் மேலோங்கி அன்பு காட்டும் குணம் பாழாகி விடும். அதனால்தான் நல்லோர்களின் மெளனம் இதனைச் சுட்டிக் காட்டும் போது, நாம்தான் அதனைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

அம்பலநாயக்கர் பாளையம், மார்ச்சநாயக்கர் பாளையம் எனப்படும் இடங்களில் வாழ்ந்த மக்களின் நிலையும் அப்படியே ஆனது. நாகலாதேவியின் பூப்பு நன்னீராட்டு சடங்கு நிகழ்ச்சிக்குத் தனது அண்ணனை அழைக்க அம்பல நாயக்கர் சென்றார். தம்பி வருவதை அவர் மனைவி ஏற்காததால் பிரசண்ட விநாயகர் ஆலயத்தில் வைத்து அண்ணன் வரவேற்பு தந்து அழைப்பை ஏற்றுக் கொண்டார்.

கோபம் கொண்ட அவர் மனைவி, அம்பலநாயக்கர் குடும்பத்தைத் தீராத அவமானத்திற்கு ஆளாக்கிவிட ஒரு சூழ்ச்சி உபாயத்தைத் தனது கணவனுக்குப் போதித்தாள். அதனை நிறைவேற்ற எண்ணி மார்ச்சநாயக்கர் குடும்பத்தினர் அனைவருக்கும் சடங்கு நிகழ்ச்சிக்குச் சென்று, உறவாடி மகிழ்ந்தனர்.

நாட்டில் நிலவும் குழப்ப நிலையைத் தம்பி இரண்டு பாளையத்துப் படையினரைக் கொண்டு அடக்குவது என்றும்; அண்ணன் மார்ச்சநாயக்கர் தங்கள் புதல்வியை அழைத்துச் சென்று திருச்சி மன்னரை சந்திப்பதென்றும்; தக்க கணவனைத் தேர்ந்து திருமணம் செய்து கொடுத்து விட்டு வருவது என்றும் முடிவானது. அப்படியே காரியத்தை அண்ணன் நடத்தி விட்டு, திருச்சியில் இருந்து ஒரு படைப்பிரிவை மன்னர் அனுமதியுடன் அழைத்து வந்து தனது நாட்டைப் பலப் படுத்திக் கொண்டார்.

தீமையான எண்ணங்கள் கொண்ட பெரும்பான்மையினரை வைத்து, ஒரு காரிய நிமித்தம் தீர்மானம் செய்யப்படும் முடிவுகள் அனைத்துமே, அதனை நம்பி வாழும் சிறுபான்மை மக்களின் தகுதியை நிச்சயம் பாதிப்பு அடையச் செய்யும்படி நிலைமையை உண்டாக்கி விடும். தம்பி அம்பலநாயக்கர் வாழ்விலும் அது நடந்தது.

திருமணம் செய்து கொடுத்த தனது மகள் தலைவிரித்த கோலமாகக் குதிரையில் தனியே பிரயாணம் செய்து வந்து, பெற்றவர்கள் காலடியில் வீழ்ந்து, அரற்றி அழுத கோலங்கண்டு ஊரே திரண்டு வந்து பார்த்துப் பதறிப் போனார்கள்.

மகளை சமாதானம் செய்து ஆறுதல் படுத்தி விஷயத்தை அறிந்து பெற்றோரும் கதறி அழுதனர். பெரியப்பா தன்னை திருச்சிராப்பள்ளியில் குதிரைகளுக்கு வார், சேணம் மற்றும் காலணிகள் தயாரிக்கும் ஒரு குடும்பத்தில் உள்ள குஷ்டரோகியான வயோதிகனுக்கு கட்டாயத் திருமணம் செய்வித்ததாகவும்; வேண்டாம் பெரியப்பா என்று கெஞ்சி மறுத்த தன்னை ஈவு இரக்கமின்றி அடித்துக் கொடுமைப் படுத்தியதாகவும் கூறி அழுதாள்.

மகளின் உடல் எங்கும் காயங்கள் தழும்புகளைக் கண்ட பெற்றோர் தனது மகளிடம் “இனி என்ன செய்ய வேண்டும். உன் முடிவைச் சொல்” என்றனர். மானம் இழந்து நான் வாழ விரும்ப வில்லை என்று மகள் கூறினாள். சரி நமது மரணத்தைத் தனது அண்ணனிடம் சொல்லி விட்டு வருகிறேன் என்று போனார்.

ஆடிப்பெருக்கு வெள்ளம் ஆற்றில் கரைபுரண்டு ஓடியது. பரிசலில் செல்ல முடியாதபடி அது துண்டிக்கப்பட்டிருந்தது. நீந்தி ஆற்றைக் கடந்து போன வரை, அண்ணனும் அவரது குடும்பத்தினரும் முகத்தில் காறிஉமிழ்ந்து, மானங்கெட்ட குடும்பம் என்று சொல்லி, எள்ளி நகைத்துப் பரிகாசம் செய்தனர்.கட்டி உதைத்து செருப்பு மாலை இட மாந்திரீகன் உத்தரவிட அதுவும் நடந்தது.

தீமையின் பிடியில் சிக்கியவர்களுக்குப் பிறரைத் துன்பப்படுத்திப் பார்ப்பதிலும், ரசிப்பதிலும் வக்கிர புத்தி ஏற்படும். அது அவர்களின் இயல்பு. அக்காலத்தில் அவமானப் பட்டவர்கள் தற்கொலை செய்வதும் வழக்கமானது தான்.

அம்பலநாயக்கர் அண்ணன் முன்பு மனம் வெதும்பி உக்கிரமான சாபம் இட்டார்.
“குலதெய்வம் நாகதேவதை சாட்சியாக, சத்திய தர்மங்களுடன் வாழ்ந்த எங்கள் குல முன்னோர்கள் சாட்சியாக, பஞ்சபூதங்கள் சாட்சியாக நீயும் உனது நாடும் அழிந்து போகட்டும். எனக்குச் செய்த அவமானங்களை என்றுமே நாட்டு மக்கள் உனக்குச் செய்யட்டும். இது முக்காலமும் சத்தியம்” என்று கூறிவிட்டு வைராக்கியமுடைய மனதுடன் தனது அரண்மனை திரும்பினார்.

தனது மனைவி மகளுடன் நாகதேவதை கோயிலில் வழிபட்டு, அம்மனின் திருமேனியில் உடுத்துள்ள புடவையை எடுத்துக் கொண்டு வெஞ்சினத்துடன் சபதம் செய்தார்.

“நாகலா தேவியைத் திருமணம் செய்து கொடுமை செய்த குலத்தினர்கள் இனிமேல் இங்கு வாழக்கூடாது. வாழவும் விடமாட்டோம். கடவுளின் மீது ஆணை.” மூவரும் சபதம் செய்த நாள் ஆடிப்பதினெட்டு பண்டிகை தினம்.

அம்மன் புடவையில் மூவரும் உடல் முழுவதும் சுற்றிக் கட்டிக் கொண்டு, பிரசண்டவிநாயகர் கோயில் இருக்கும் அக்கரஹாரத் தெருவில், ஆற்றை ஒட்டிய பார்ப்பணப் பெண்கள் குளிக்க வரும் படித்துறையை நமஸ்கரித்து விட்டு “தெய்வமே எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறியபடியே ஆற்று வெள்ளத்தில் இறங்கி தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டனர்.

இன்றும் அந்த இடம் பாப்பாத்தி கெஜம் என்ற ஆழம்மிகுந்த மடுவாக உள்ளது. பிராமணர்கள் அக்ரஹாரத்தை காலி செய்து கொண்டு வேரூர் சென்று விட்டனர்

சாபத்தைச் சாந்தி செய்ய மார்ச்சநாயக்கர் தனது உருவத்தைக் கற்சிலையாக வடித்து, அதற்கு மாந்திரீகர்களைக் கொண்டு செய்து வந்த பூஜைகளும் பலனற்றுப் போயின. அவர் ஆட்சி செய்து வந்த அரண்மனையும் அழிந்தது. இன்றும் அவரது கற்சிலை ஹஜரத் ஷான்சா ஒலியுல்லா தர்காவின் எதிர்ப்புறத்தில் உள்ள பள்ளச்சிவயல் என்ற இடத்தில் ஆகாயத்தைப் பார்த்தபடி மல்லாந்து கிடக்கின்றது.

வயலில் வேலை செய்யும் பெண்கள் தங்கள் கால்களில் ஒட்டியிருக்கும் சேற்றை, மார்ச்சநாயக்கர் சிலையில் தேய்த்து விட்டு, வாயில் போட்டிருக்கும் தாம்பூலம், புகையிலை அல்லது எச்சிலைக் காறி உமிழ்ந்து உதைத்து விட்டுச் செல்லும் பழக்கம் வெகு காலம் நீடித்தது. ஊர் அழிந்து அந்தப் பெயரும் அழிந்து, இன்று சுங்கம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது!

பிரசண்ட விநாயகர் கோயில் பூஜை யற்றுப் போனது. சமீபகாலத்தில் அங்கு கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் நடந்து விஷேச காலங்களில் அன்னதானம் நடந்து வருகிறது. நமது சுவாமியிடம் சுப்பேகவுண்டன் புதூர் மணியம் கணக்கப்பிள்ளை அவர்களும், முக்கிய பிரமுகர்களுடன் வந்து கோயில் சாபநிவிர்த்தியைக் கேட்டு பரிகாரம் செய்து, இன்று அது பிரசித்தி பெற்று நடந்து வருகிறது.

தவத்திரு நாகராஜா சுவாமி தனது குருநாதர் ஆலோசனைப்படி தாம் வாழ்ந்த கிராமத்திற்கு சாபநிவிர்த்தி பெற்றுத் தந்து வாழுகின்ற வழி காட்டி விட்டார்கள். நான் சுவாமி அவர்களுக்கு நன்றியையும், வணக்கத்தையும் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். இனி குருநாதர் உத்தரவுப்படி நாகதேவி ஆலயம் சென்று வந்த அபூர்வமான விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

–ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button