ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
22•01•2017,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(206) மனிதனே புனிதன் —
யக்ஷ தாபம் – மோகம் – கோபம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கோபத்தினால் ஒருவன் தீமைகளைச் செய்யும் போது, அவன் தனது அறிவை இழந்து விடுகின்றான். பிறகு தனது இயல்பான சகஜ நிலைக்குத் திரும்பும் போது அவன் தான் கோபம் கொண்டதை எண்ணி எண்ணி வருந்துகிறான். தன்னால் மற்றவர்கள் துன்பம் அடையத் தான் காரணமாகி விட்டோமே என்று குமைந்து விடுகின்றான். அதனால் தனது உள்ளத்தை மறைமுகமாக நோகச்செய்து கொள்கிறான். மனதில் மிகுதியான துன்பத்தை அனுபவிக்க ஆரம்பித்து விடுகின்றான். தான் செய்த பாவத்திற்குத் தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொள்ளும் இயல்பு நிலையும் இதுதான்.
மற்றும் ஒன்று இருக்கின்றது. மண்ணாசை, பொன்னாசை களினால் மனித மனம் தூண்டப்படுகிறது. அதனால் மற்றவர்களுக்குத் தெரிந்தே துரோகம் இழைக்கின்றான். அதனால் துன்பம் உறுவது மற்றவர்களே தவிரத் தானல்ல, தனது மனமும் அல்ல என்பதையும் புரிந்து கொள்கிறான். பெண்ணாசையினால் மோகத்திற்கு ஆட்பட்டுச் செய்யும் அக்கிரமமான காரியங்களிலும், செய்யும் குற்றத்திலும், உடல் இன்புறுகிறது; ஆனால் மனம் துன்புறுவதே இல்லை! நோகாமலும், மனவருத்தம் இல்லாமலும் செய்கின்ற பாவச் செயலும் இதுதான்! கோபத்தினால் ஒருவன் செய்யும் காரியங்களில் பாவத்தின் சுமை குறைவென்றும், அதி ஆசை மிகுத்து நோகாமல் செய்யும் காரியங்களில் பாவத்தின் சுமை மிக அதிகம் என்றும் தெய்வீக வேதவாக்கியப் பரிபாலனம் தனது தீர்ப்பை இவ்வாறு வழங்கி உள்ளது.
செல்வி. தேவானையைத் தவறான நோக்குடன் அணுகியவர்கள் மனத்துன்பம் ஒன்றும் உறாமல் தனது இன்னுயிரை இழந்திருக்கிறார்கள் . அது மாத்திரமல்ல தனது உள்ளத்தின் சுதந்திரத்தை அனுபவியாமல் சென்று விட்டார்கள். தீமை சக்திகளுக்கு உடந்தையானவர்கள் கதியும் இப்படித்தான் ஏதாவது ஒரு வழியில் இயற்கையின் தீர்ப்பு வழங்கப்பட்டு விடுகிறது. இவ்வுலக இயல்பின் கட்டுப்பாட்டில் மனிதனுக்கும், தெய்வீகத்திற்கும் உள்ள ஏதோ ஒரு வகையில் சம்பந்தமுடன் அனைத்து நிகழ்வுகளும் நிகழ்ந்து கொண்டே உள்ளது. பத்து மாப்பிள்ளைகள் மணமுடிக்க வந்து, யக்ஷனால் மரண தேவதையின் இடத்தை அடைந்து விட்டார்கள். மாந்திரீகனும் தனது பெண் மோகம் தீராமல் ஓய்ந்து போய் விட்டான். காரணமும் இருக்கிறது.
யக்ஷன் கரிச்சான் ரக்கன் செல்வி.தேவானையை நேசிக்கத் துவங்கியிருந்தான்! அவன் நேசித்ததில் வியப்பொன்றும் இல்லை. தெய்வங்கள் மானிடர்கள் ஜெபத்திற்குக் கட்டுப்பட்டு, ஆகர்ஷணம் உடைய சக்தியைப் பிரயோகம் செய்ததை நமது இதிகாசங்கள் இயம்புகின்றன. அவளைக் காப்பதற்காகவே, அவள் விருப்பத்திற்கு மாறாக நடக்கின்ற எவர்மீதும் ஆக்ரோஷமான வெறுப்பின் அலைகளை வீசித் தனது எண்ணத்தை யக்ஷன் நிறைவேற்றத் துவங்குவதை, செல்வி.தேவானையினால் சுலபமாகப் புரிந்து கொள்ளவும் முடிந்தது. தனக்கு துஷ்டர்களிடம் இருந்து யக்ஷன் பாதுகாப்பதைப் பெருமையாக நினைக்கத் துவங்கி விட்டாள். செல்வி. தேவானையின் அன்பின் கட்டுக்குள் அடங்கி விட்ட யக்ஷன், மாந்திரீகனின் பிடிக்குள் இருந்து தப்பிக்கும் மார்கத்தையும் அவள் மூலமாகப் புரிந்து கொண்டு விட்டான். பிரபஞ்ச சக்தியில் “நான்” என்பதைப் புரிந்து கொண்டு, தனக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டு, பிரபஞ்ச இயல்பில் தானும் ஓர் அங்கம் என்பதை உணர்ந்து, பிரபஞ்ச இயல்பிற்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்ளும் போது, (மனிதனுக்கும்) தனது சுதந்திரம் தெரியவரும்.
அதனை நம்புவதற்குக் காலம்தான் பதில் கூற வேண்டும்!
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.