முத்து என்ற தாந்திரீகன்!

240

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

09•11•2016,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(132) மனிதனே புனிதன் —
முத்து என்ற தாந்திரீகன்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நமது சுவாமி பலசரக்குக் கடையில் அமர்ந்திருந்தார். கோபி செட்டிபாளையத்தைச் சேர்ந்த கோடாங்கிகள், அம்பலநாயக்கன் பாளையம் பஞ்சாயத்து புளியந் தோப்பில் வந்து தங்கி இருப்பார்கள். தங்கி சுற்றுப்புற கிராம ஜனங்களுக்கு அவர்களின் எதிர்காலத்தையே கணித்து ஜோசியம் சொல்லிப் பணமும், பொருளும் பெற்று வருவார்கள். இரவு நேரத்தில் குடித்து விட்டுக் கும்மாளமிட்டுப் பாட்டுக்கள் பாடியோ அல்லது சண்டை சச்சரவுகள் இட்டுக் கொண்டோ, இங்கு மட்டும் ஓடிக் கொண்டோ இருப்பார்கள். ஏக களேபரமாக நந்தவனத் தோப்பு இருக்கும்.

ஜடாமகுடம் அணிந்த சாமியார்கள் பொழுது சாய்ந்ததும் புளியந் தோப்புக்குள் வருவார்கள். அவர்களைக் கண்டதும் குழந்தைகள் “அப்பா” என்று கூக்குரல் கொடுத்த படியே ஓடிச் சென்று கால்களைக் கட்டிக் கொள்வார்கள். சாமியார்கள் தங்களுடைய குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்வார்கள். “ஒரே சாராய நாத்தம்” என்று கூறிக் குழந்தைகள், முகம்சுழித்தபடி, வலுக்கட்டாயமாகக் கீழே இறங்கி ஓட்டம் பிடிப்பார்கள். சில குழந்தைகள் சாமியாரின் பொய் மீசை, தாடி இவைகளைப் பிரித்துக் கீழே எறிவார்கள். “ஹைய் நாயனா” என்று உரக்கக் கத்துவார்கள்.

ஜடாமுடிகளைக் கழற்றி வைத்துவிட்டு, ஊறுகாயைத் தொட்டுக் கொண்டே, பட்டை சாராயத்தைக் கடகடவெனக் குடித்து தாக சாந்தி செய்து கொள்வார்கள், வேஷதாரிக் கோடாங்கிகள்! சிலர் சாராயத்திற்குப் பணத்தைச் சிலவு செய்து விட்டு, சமையல் சாமான்களைக் கடனாகப் பெற கடை, கடையாக ஏறி இறக்கிக் கொண்டிருப்பார்கள். அப்படி வந்தவர்களில் ‘முத்து என்ற பெயர் கொண்ட சுமார் பத்தொன்பது வயதுடைய வாலிபன் இருந்தார். அவர் சுவாமி அவர்களிடம் உதவி கேட்டு வந்தார். தயங்கியபடியே பேசினார்.நன்கு படித்தவர்.

அவர்கள் நாடாறு மாதம், காடாறு மாதம் என்று வாழ்வார்களாம். விக்கிர மாதித்தியன் பரம்பரை என்று கூறிக் கொண்டார்! ” எந்த விக்கிரமாதித்தியன்?” என்று சுவாமி கேட்டதும், மெல்லச சிரித்து சமாளித்தார். சுவாமியும் சிரித்து விட்டு, “ஹிந்தி விக்கிரமா? தெலுங்கு விக்ரமனா?” என்று கேட்கவும், அவர் புரிந்து கொண்டு விட்டு, சாதாரணமாகவே சகஜமாகப் பேச ஆரம்பித்தார். தனது பெயர் சுப்பிரமணியன் என்றும், முத்து என்று கூப்பிடுவார்கள் என்றார்.

சுவாமி அவரிடம், “உங்கள் பெண்கள் தங்களை கிருஷ்ணர் பரம்பரை என்று கூறிக் கொள்கிறார்கள். ஏதோ கிருஷ்ணன் பாட்டுப்பாடி யாசகம் கேட்கிறார்கள். நீங்கள் ஜோசியம் பார்ப்பவர்களா? அல்லது யாசகம்?” என்றதும் அவர், “நீங்கள் மன்னிக்க வேண்டும். ஏதோ வயிற்றுப்பாடு யாசகம் எடுக்கிறோம். ஜோதிடம் கைரேகை, முகராசி பார்த்துப் பத்து விஷயம் சொல்வோம். அதில் ஏதாவது ஒன்று பலிதமாகி தலையை ஆட்டினால் அவர்கள் ஆசைப்படி ஜோசியம் சொல்வோம். இப்ப எங்க ஆளுங்க பள்ளியில் படிக்க ஆரம்பித்து விட்டோம். அடுத்து என் குழந்தைகள் படித்து உத்தியோகம் பார்ப்பார்கள். பிச்சை எடுக்க மாட்டோம். ஏமாற்றிப் பிழைப்பு நடத்த மாட்டோம். எனக்குப் பசியாகிறது. மளிகைப் பொருட்கள் வேண்டும். பணம் நாளைக்குத் தான் கொடுப்பேன். எப்படி வசதி?” என்று இறுமாப்பாகக் கூறினார்.

நமது சுவாமி, “நாளைக்கு யாரை ஏமாற்றப் போகிறாய்? உன்னுடைய வசதியில் தானே!” என்றதும் அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது. “இனி ஏமாற்றாமல் பிழைக்கப் பார்க்கிறேன். எங்கள் ஆட்களுக்கு மாந்திரீகம் தெரியும். உங்களைக்கூடக் கட்டி விடுவோம்” என்றார். உடனே சுவாமி, “அப்படியா சேதி! ஆகட்டும், அனுப்பி வையப்பா தம்பி. நிரப்பவும் சந்தோஷம்” என்றார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button