மீன் பிடித்த மீனவரின் அவலம்.

161

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

17•09•2016,
சனிக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(70) மனிதனே புனிதன் —
மீன் பிடித்த மீனவரின் அவலம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கத்தியினாலோ, மற்ற ஆயுதங்களினாலோ மரணம் ஏற்பட்டவரை, அகாலத்தில் மரணம் உண்டானவரை, வாகன விபத்துக்களில் நசுக்குண்டு மரணம் சம்பவித்தவரையோ, தற்கொலை செய்து கொண்டவர் உடல் மற்றும் மனிதனின் எலும்புகளைத் தொடுவதும் தீட்டுக்கள் ஆகுமா!?

— இந்தச் செய்தியைச் சற்குரு நாதரிடம் நமது சுவாமி கேட்கும்போது கிடைத்த பதில் உபயோகமாக இருக்கிறது!
ஆழியாற்றில் பெருவெள்ளம் வந்த போது அணைக்கட்டுக்கு அருகே இருந்த பெரிய சிமெண்ட் குழாய்களையும் அடித்து, உருட்டி, உடைத்து கம்பிகள் தெரிய வந்தவைகள், சரியாக அம்பல நாயக்கர் தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்ட பாப்பாத்தி மடுவில் ஆழத்தில் கிடந்தன.
அங்கு மக்கள் குளிக்கச் செல்வதை நிறுத்தி விட்டனர். அவ்விடம் ஏகாந்தமாக இருந்ததால் சுவாமி அங்கு குளிக்கச் செல்வார். தனது அருமையான காலை இழந்து விட்ட கோவிந்தனும் கம்பை ஊன்றிக் கொண்டு சுவாமியுடன் செல்வான். அவனுக்கு அமானுஷ்யத்தின் மீது நம்பிக்கை கிடையாது.

மக்கள் மனதில் ஏதாவது ஒன்றைப் பற்றிய நிகழ்ச்சி பய உணர்வுடன் பதிந்து விட்டால், அதனைப் பற்றியே பேசுவார்கள். தாங்கள் பெற்ற அதே உணர்வுகளை மற்றவர்களிடம் சொல்லி, தங்களுக்குள் சமாதானத்தை உண்டாக்க முயலுவார்கள். கோவிந்தனும், “ஆவியாக அலையும் அம்பல நாயக்கர் ராஜாவைச் சந்திக்க நேர்ந்தால், அவரிடம் ஏதாவது உதவிகள் கேட்கத்தான் போகிறேன்” என்பான். அவன் முகத்தில் எந்த உணர்வும் காட்டாமல் பேசுவான்.

பெளர்ணமிக்கு இரண்டு தினங்கள் முன்பு பள்ளிமாணவர்கள் குளிப்பதற்குக் கும்பலாக வந்தனர். ஆற்றங்கரை மணல் பரப்பில் விளையாடிவிட்டு, யார் தடுத்தும் கேளாமல் பாப்பாத்தி மடுவில் இறங்கினர். நன்கு நீச்சல் கற்றவர்களாகப் போட்டி போட்டு நீந்தி மகிழ்ந்தனர். எல்லோரும் கரை திரும்பிய போது அதில் ஒருவனைக் காணவில்லை. சற்று நேரம் தேடிக்கொண்டு இருந்து விட்டுக் காணாததால் வருத்தமுடன் வீடு திரும்பினர். மறுநாள் காணாமல் போன பையனின் பெற்றோரும் வந்து தேடி அழுது கொண்டே போனார்கள். பையன் கிடைக்கவில்லை. அதற்கு அடுத்த நாள் பெளர்ணமி தினம். கிராமத்தில் போட்டி போட்டுக் கொண்டு மதமாற்றம் நிகழுந்து கொண்டிருந்த காலம். செம்படவ நாய்க்கர் இனத்திலிருந்தும் சிலர் மதம் மாறி மாற்றுப் பெயர்களைச் சூட்டிங் கொண்டார்கள். அதில் ஒருவர் திரு.அப்துல்ரசாக் ராவுத்தர் ஆனார். வயோதிகர், பலசாலி, உழைப்பினால் உடலை உரமேற்றிக் கொண்டவர்.சுவாமி மீது அன்புள்ளம் கொண்டவர். அவர் சாப்பிடும்போது போது பனைவெல்லம் அவசியம் வேண்டும். பெளர்ணமி தினம் மீன்பிடி வலையையையும் மறக்காமல் பனைவெல்லம் இரண்டு இவற்றுடன் ஆற்றுக்குள் போனார். பல இடங்களில் வலை வீசி அவர் எதிர்பார்த்த மாதிரி மீன்கள் கிடைக்காமல், கடைசியில் பாப்பாத்தி மடுவில் வலையை வீசினார். வலையை இழுக்க இயவில்லை. பகல் போல் நிலவு வெளிச்சம். வலை எதிலோ சிக்கி விட்டதாக எண்ணித் தண்ணீரில் மூழ்கி, வலையை சிக்கல் நீக்கிய படியே வந்தார். சிமெண்ட் குழாய் உடைந்து பெரிய கம்பிகளுக்கு இடையில் சிக்குண்டு கிடப்பதைப் பிடித்து இழுத்தார். மூச்சு விடுவதற்கு நீரின் மேல் தலையை நீட்டி ஆசுவாசப் படுத்திக் கொண்டு, மீண்டும் நீரினுள் மூழ்கிச் சென்று கம்பிக்குள் சிக்கிய பொருளைத் பிடித்து இழுத்தார்.

அதுதான் அந்தப் பள்ளி மாணவன். நீரில் வேகமாக உள்ளே குதித்தவன், நேராகக் குழாய்கள் உடைந்து கிடந்த பெரிய கம்பி வலைக்குள் கால் ஒன்று நுழைந்து சிக்கியதால், காலை வெளியே இழுத்தும் வராததால் மூச்சுத் திணறி ஜலசமாதியை அடைந்து விட்டான். திரு.ரசாக் அவர்கள் அவனது காலைப் பிடித்து மேலே இழுக்கவும் ஒருவழியாக வெளியே வந்து விட்டது. ஊறி உப்பிய உடலை மீன்பிடி வலை போர்த்தியபடி சரேல் என நீருக்கு மேலே எம்பியபடி எழுந்தது, அதனுடன் கூடவே மேலே வேகமாக வந்தவர் கண்களில் பயங்கரமாக அது தென்பட்டது. மிகப் பெரிய உருவம் வலையைப் போர்த்திக் கொண்டு தலைக்கு மேல் குதித்து எழுந்தால், நிலவொளியில் எப்படி இருந்திருக்கும்?

அவர் அந்த உருவத்தை அம்பல நாயக்கர் என்றே கருதி விட்டார்! நீருக்கு மேல் நிற்பது போல் வேகமாக எழந்த உடல் சரியாக அவர் மீதே விழுந்து விட, அவரது நிலை அவருக்கே புரியாமல் கத்திக்கதறி அழுது அவர் போட்ட சப்தத்தில் அவருடன் மீன்பிடிக்க வந்தவர்கள் எல்லோரும் அங்கு வந்து விட்டனர். மயக்கமாகி நீரினுள் மூழ்க இருந்தவரைக் கரை சேர்த்து மயக்கம் தெளிவித்தனர். அலறிக் கொண்டு எழுந்தவர் தாம் கொண்டு வந்த பனை வெல்லத்தை, அமானுஷ்யம் கேட்கத்தான் வந்ததாக நினைத்து நீரினுள் “ம்..ம்.சாப்பிட்டுக்கோ” என்று கூறி வீசி எறிந்தார். அதிர்ச்சியில் மீண்டும் மயங்கிச் சாய்ந்தவரை வீட்டிற்குக் கொண்டு சேர்த்தனர்.
நன்றி! வணக்கம்!
(வரலாறு இன்னும் வரும்)

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M. மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button