மிருக மனம் ஆக்ரோஷம்!

227

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

16•10•2016,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(99) மனிதனே புனிதன் —
மிருக மனம் ஆக்ரோஷம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பண்ணாரி மாரியம்மன் கோயில் வளாகத்தில் குறைந்த நேரம் அளவே சுவாமி நின்றிருந்தார் என்று பார்த்தோமல்லவா? அப்போது கர்பகிரகத்தினுள் பிரகாசமான ஜோதி ஒன்று தோன்றியதைக் கண்டு இருக்கின்றார். அப்போது ஒரு அசரீரிக் குரலையும் கேட்டு இருக்கின்றார். அது அவரது மனதின் மெளனத்தின் குரல் என்று தான் கூறினார். “நீ தனியானவன் அல்ல! அவர் என்றும் உன்னோடிருப்பவர்! அவருக்கு மரியாதை கொடு! உனக்கு மரியாதை தானே தேடி வரும்”– இதுதான் அந்தக் குரல் கூறிய கருத்து. இதில் பல விஷயங்கள் அடங்கியுள்ளதாக நான் எண்ணுகிறேன். நமது சுவாமி அவர்களுக்கு சிறுவயதில் வடக்குத் திசையில் இருந்து ஒரு அசரீரிக் குரல் கேட்டுக் கொண்டே இருக்கும்! அதன் தொடர்பு இதில் உள்ளதா? என்ற வினாவிற்குப் பிறகு பதில் கூறுகிறேன் என்று சொல்லி விட்டார். தக்க தருணம் பார்த்து நிச்சயமாகக் கூறுவார்.அதற்கு நன்றி கூற வேண்டும்.

சுவாமியுடன் சேர்ந்து பல இடங்களுக்கும் சென்று வர எங்களுக்கு எண்ணம். எங்களைப் போன்றே பலர் அவருடனேயே தங்கி இருக்க விருப்பம்! அவர் அதனை ஏற்கவில்லை. காரணம் அவர் சொன்னதை அப்படியே தருகிறேன்.

“என்னுடன் தங்கியிருப்பதால் உனது இயல்பு குணங்கள் மாற்றம் பெறுமா? நீ நீயாக இருப்பாய்! நான் நானாக இருப்பேன்! உனது பிரக்ஞையும் மாறாது இருக்கும் என்பதற்கு என்னால் உத்தரவாதம் தர இயலாது. எங்கேயிருந்தாலும் எண்ணத்தால் ஒன்றிணைவோம்! இப்படிப் பட்ட உள்ளமே இறையருளுக்கு உகந்தது. நன்றி! ” எனக் கூறினார். சில சமயங்களில் அவர் இரவு நேரம் தியானம் செய்து கொண்டிருப்பார். உடன் இருப்பவர்களுக்கு அது ஏற்புடையதாக இருக்காது. உறங்கும் நேரம் அன்பர்களுக்கு வசதிப்படாது! சில மலைகளுக்கு உடன் சென்றிருக்கிறோம். அவர் கடமையை நிறைவேற்ற அவர் என்றும் தயங்கியதும் இல்லை. நாமும் நமது கடமையாற்றும் போது அவர் குறுக்கிடுவதும் இல்லை. சித்தன் போக்கு சிவன் போக்கு என்பது உண்மைதான் என நாங்கள் அறிந்து கொண்டது இங்குதான்!

பேருந்து திம்பத்தை அடைந்த போது விடியும் நேரம் நெருங்கியது. அங்கு ஒரு செய்தியைக் கூறினார்கள். ‘புலிக்கும் பாம்புக்கும் சண்டை நடந்து கொண்டுள்ளது. அவைகளைப் பார்க்கும் போது வண்டியை நிறுத்தாமல் சென்று விட வேண்டியது’ என்பதுதான். இதைக் கேட்டதும் பேருந்தில் இருந்தவர்கள் சந்தோஷம் மிகுதியால் கூச்சல் இட்டனர். அங்கிருந்த அதிகாரி கூறினார், “முதலில் இப்படிக் கூச்சல் இடுவதை நிறுத்துங்கள். அமைதியான பயணமே பாதுகாப்பு” என்று வழியனுப்பி வைத்தார்.

கிராமத்து வியாபாரிகள் எதையும் கேட்பதாக இல்லை. வியாபாரத்தில் உழைத்துச் சம்பாதிப்பவர்கள். தங்களின் இஷ்டப்படியே செலவும் செய்பவர்கள்! உழைப்பை மேன்மைப் படுத்த வேண்டும் என நினைப்பவர்கள், உழைத்துப் பெற்ற வருமானம் தனது கையில் வந்ததற்கு நன்றி சொல்ல வேண்டும். பணத்தை செலவு செய்திடும் போது எனது உழைப்பே நீ திரும்பவும் என்னிடம் வந்து தங்கி இருக்க வேண்டும், நன்றி என்று சொல்லவும் வேண்டும்! பணமோ, பொருளோ, மனிதனோ, மிருகங்களோ எதற்கும் நன்றி பாராட்டப்பட வேண்டும். அதில்தான் படைப்பின் உன்னதம் அடங்கி இருக்கிறது. வள்ளுவம் இதனை வெளிப்படையாகப் பேசுகிறது.

வழியில் பாதையின் ஓரத்தில் மைல் கல்லின் மீது சிறுத்தை அமர்ந்து கொண்டு, காலையின் இதமான வெயிலில் தனது அடிபட்ட வலது காலை நாவினால் நீவிக் கொண்டு அமைதியாக அமர்ந்து இருந்தது. வண்டி ஓட்டுனர் பாதையின் வலது புறமாக, அதன் அருகேயே சென்று பேருந்தை நிறுத்தினார். நகர மக்களும் காட்டுக் கூச்சல் போடுவதை சுவாமி அன்றுதான் கண்டார். அதிர்ச்சியினால் சிறுத்தை கல்லில் இருந்து நழுவி கீழே விழுந்து வலது புற முன்னங்காலை நொண்டிய படியே தாவிச் சென்றது. ‘

இயற்கை சக்தி எல்லா உயிர்களிடத்திலும் ஒரு மரியாதை உணர்வை உண்டு பண்ணி இருகின்றது. அதனைக் கொண்டுதான் தனக்குத் தேவையான உணவை அவைகள் அடைகின்றன. தான் வேட்டையாடி உண்பதும் அந்தத் தகுதியின் அடிப்படையில் தான். தனது தகுதியை, தனது மரியாதையை அவைகள் இழந்து விட்டதாக எண்ணம் வந்த உடனேயே உயிரை மாய்த்துக் கொள்கின்றன. மனிதர்கள் மிருகங்களின் தன்மானத்தை அலட்சியம் செய்யும் போது அவைகள தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திக் காட்டும்.

ஒரு மனிதனுக்கு உற்சாகம் அதிகப்படும் போது மற்றவர்களுக்கு தங்களால் ஏற்படும் இடர்பாடுகளையும் தங்களது கவனத்தில் கொண்டு விட்டால் உலகில் அநேக குற்றங்களும், குறைகளும் நீங்கி விடுகிறது.

இந்த வனத்தில்தான் சற்குரு நாதரின் இரண்டாவது சீடர் தவத்திரு.வேணு கோபால சுவாமி அவர்கள் தவம் செய்து கொண்டிருந்ததாக, அவரின் வாங்கினால் நேரடியாகப் கேட்டு அறிந்து கொண்டிருக்கின்றார் நமது சுவாமி.

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button