மாதேஸ்வர சித்தர்.

175

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

27•11•2016,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(150) மனிதனே புனிதன் —
மாதேஸ்வர சித்தர்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அமைதி மிகுந்த மாதேஸ்வரர் ஆலயம் அன்று தேரோட்டத் திருவிழாவானதால் பக்தர்களால் நிறைந்து காணப்பட்டது. ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்த பிறகு ஆன்மிகக் கூட்டத்தில் கலந்து கொண்ட அன்பர்கள் ஆங்காங்கே தியானத்தில் அமர்ந்து காணப்பட்டனர். நமது சுவாமி கோயிலின் உள்ளே பூஜைகள் முடியும் வரை காத்திருந்த பொழுது ஆங்கொரு சித்திரத்தைக் காண நேர்ந்தது. அது புலி மீது பவனி வரும் மாதேஸ்வரர் சித்தர் என்று அங்கு ஒரு பெரியவர் கூறினார். பொள்ளாச்சியில் இருந்து புறப்படும்போது, தவயோகினி திருமதி.சுந்தரம்மாள் வீட்டில் தியானத்தின் போது காட்சி தந்த அதே தோற்றம் அந்தச் சித்திரத்திலும் இருந்தது! உடல் முழுவதும் மின்காந்த சக்தி வேகமாகப் பரவுவது போன்று தேகச் சிலிர்ப்பு உண்டானது.

சற்குருநாதரின் குரல் நமது சுவாமியின் காதுகளில் ஒலித்தது. ” பாதுகாப்புத் தருவதற்காகவே இன்று உனக்குப் புதிய பாடங்கள் நடத்த எண்ணியுள்ளோம். கோயில் தேர் முன்பு சென்று அமர்ந்து கொள்!” என்ற உத்திரவு பிறந்தது. உடனே சென்று தேர் நிலை கொண்டுள்ள இடம் சென்றார் சுவாமி. அங்கு எவ்வித சப்தமும், சந்தடியின்றி அமைதியாக இருந்தது. திடீரென ஒருவித மயக்கம் நாகராஜன் சுவாமிக்கு ஏற்பட அவ்விடத்திலேயே அமர்ந்து கொண்டார். உடலில் ஏற்பட்ட காந்த சக்தியின் வேகம் மிகவும் அதிகமானது. உடல் முழுக்கத் துடித்தது. கண்கள் திறந்தது திறந்தபடியிருக்க அநேக வண்ணங்கள் சுற்றிச் சுழன்று சென்று கொண்டே இருந்தது. தன்நிலை என்ன? ஏது? என்று அறிய முடியாத காந்தசக்தியில் ஈர்த்துக் கொள்ளப்பட்டார்.

இப்போது மஞ்சள் வண்ணமுடைய புலத்தினுள் வந்து சேர்ந்திப்பது மாதிரி உணர்வு இருந்தது. மஞ்சள் வண்ணம் அங்கு அடர்த்தி மிகவும் அதிகமாக இருந்தது. பிறகு அதனுள் நுழைந்ததும் உணர்வு உண்டாயிற்று. கண்களால் அங்கிருப்பதைப் பார்க்க யாரோ உடனிருப்பதைப் போலவும், மனதினில் இனம் புரியாத ஓர் கிலேசம் உண்டானது. மிகவும் உயரமாக அந்த ஆவி ஆத்மாக்கள் தென் பட்டனர். அங்கு நன்மை செய்யும் ஆவி ஆத்மாக்களும், பயஉணர்வு கொண்டால் தீமைகள் செய்யவும் தயங்காத ஆவி ஆத்மாக்களும் இருந்தனர். நமது சுவாமி இவர்களின் நடுவில் இருந்தார். அவைகள் தமது இம்சையைத் துவக்கி விட்டன.

ஆவி ஆத்மாக்கள் படாதபாடு படுத்தினர். வேறே வழியின்றி ஜெபம் செய்யத் துவங்கினார். தைரியமாகக் கண்களையும் திறந்து நிலையாக வைத்து ஜபம்செய்திட விலகிச் சென்றன. மேலும் கீழுமாக முத்தலை சூலாயுதமும், நடுவில் கையால் பிடித்துக் கொள்வதுமான ஓர் ஆயுதத்தை ஏந்திய அம்மன் சக்தி தோற்றமானது. துஷ்ட்ட ஆவி ஆத்மாக்களின் தலையைப்பற்றி அவைகளின் குரல்வளைப் பகுதியில், அந்த சூலாயுதத்தால் குத்தி அவைகளை அப்புறப்படுத்திப் பாதுகாப்பு சக்தியை ஏற்படுத்தியது. உடனே அந்தக் காட்சி விலகி பிரகாசமான ஒளி தாமரை மலரைப் போன்று விரிந்து சுடர்ந்தது!

நாகராஜன் சுவாமிக்கு உணர்வு மெல்ல மெல்ல உண்டானது. சுற்றிலும் சப்தம் மிக அதிகமாகக் காதில் விழத்துவங்கியது. கண்களைத் திறந்து பார்த்தார். தேர் அருகில் வந்து நின்றிருந்தது. தேர் ஓடும் பாதையில் தியானத்தில் அமர்ந்து விட்டதும் புரிய, மெல்ல எழுந்து ஆலயத்திற்குள் சென்றார். “எப்போதும், எந்த நேரத்திலும், உணர்வுடனே இருப்பதுதான் பாதுகாப்பானது. உணர்வு என்பது ஆதமாவில் இருந்து பெறப்பட்டு ஐம்புலன்களும் செயல்பட மனம் உதவி செய்கிறது. யோகிகள் ஐம்புலன்களை அடக்கி ஆள்வதால் உணர்ச்சிகள் கட்டுப் படுத்தப்பட்டு, உணர்வு அப்படியே இருந்து கொண்டிருக்கும். இந்த உணர்வில்தான் காந்த சக்தி நிறைந்திருக்கும். ஐம்புலன்கள் உணர்வுகளை மனதிடத்தில் இருந்து பெற்று, அவைகளை மின்சார மாக மாற்றி செலவாகும் போதுதான் உணர்ச்சிகரமாக மாற்றமும், செயலும் நடை பெறும். ஐம்புலன் நுகர்ச்சி கட்டுப்படுத்தப்பட, உணர்வுடன் கூடிய தியானமாக மாறும்.” மனம் விடை பகர்ந்தது!

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button