ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
11•04•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(285) மனிதனே புனிதன் —-
மன்னிச்சுடுங்க, நானும் வாரேன்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°வாழ்வைக் காப்பதுதான் விவேகம் என்றார்கள் ஞானியர்கள். உலகில் ஒரு காரியம் நடை பெறுகிறது என்றால் அதற்குச் சரியான காரணம் என்ற ஒன்று இருந்திடல் வேண்டும். நாம் நியாயம் தவறி நடக்கும் போதுதான் சத்திய வாக்கு நீங்கி விடுகின்றது.
கள் குடிப்பதற்குப் போதிய பணத்தை வைத்துக் கொண்டு தரமறுக்கும் மகனை அடித்து, உதைத்துத் துன்புறுத்திய பிறகு கழுத்தைப் பிடித்து நெரிக்க ஆரம்பித்தார். வெங்கிட்டு அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. கெஞ்சினார், தடுத்தார். தகப்பனார் பிடியில் இருந்து தப்பிக்கத் துடிதுடித்தார். கண்கள் சொருகி மயக்கம் ஏற்பட்டது. கடைசி நேர முயற்சியாக, மண் வெட்டியை இரண்டு கரங்களால் தலைக்கு மேல் தூக்கிப் பிடித்துக் கொண்டார். உயிர் போய்விடும் என்ற கடைசி நிமிஷ ஆவேசத்தில், மண்வெட்டியைத் தகப்பனார் முகத்தில் பலமாக இறக்கினார். கத்தி போல் பதமாக இருந்த மண்வெட்டி, முகத்தில் பேர் பாதியை ஒரு கண்ணோடு சேர்த்து வெட்டிச்சீவித் தள்ளியது. தரையில் விழுந்த பாதி முகத்தின் ஒரு கண் மகனை வெறித்துப் பார்த்தபடியே கிடந்தது. இறந்தும் அவர் முகத்தில் கேலிக் சிரிப்பு அப்படியே இருந்தது. ‘கடலோரம் வாங்கிய காத்தா? ‘ என்று எப்போதும் பாடிக் கொண்டே இருக்கும் அவர் குரல் ஓய்ந்து அடங்கியது. ஆகாயத்தைப் வபார்த்தபடியே உள்ளங்கைகள் விரிந்தபடி கிடந்தது. நான் எதையும் இந்த பூமியில் இருந்து எடுத்துச் செல்ல வில்லை எனக் கூறுவது போல் கிடந்தார். மகன் அப்பாவின் காலடியில் கிடந்து கத்திக் கதறி அழுது கொண்டே இருந்தான். “குடி நம்ம குடியக் கெடுத்ததடா சாமி. அப்பா நான் வேணுமுன்னு ஊங்களக் கொல்ல நினைக்கலே. என்ற உயிர் போற ஆவேசத்தில இப்படி நடந்து போச்சு ஐயா. என்ன மன்னிச்சுருங்க. இதோ நானும் உங்க கூட வந்திடறேன்” என்று சப்தமிட்டபடியே மண்வெட்டியைக் கொண்டு தனது கழுத்தைத் தானே வெட்டிக் கொள்ள முயன்றார் வெங்கிடசாமி.
அழுகை சத்தம் கேட்டு ஓடி வந்தவர்கள் சின்னக்கவுண்டர் நிலை கண்டு அதிர்ந்து போனார்கள். வெங்கிட் தன் கழுத்தைத் தானே வெட்டும் காரியத்தை உடனே தடுத்து நிறுத்தினார்கள். தகவல் தெரிந்து காவல் துறையினர் வாகனத்தில் வந்து பார்த்து அவர்களும் இந்தநிலை கண்டு அனுதாபப் பட்டனர். தகப்பனாரின் கால்களைப் பிடித்துக் கொண்டு அழுது கொண்டே இருந்த, இளம் குற்றவாளி, பள்ளியில் பயிலும் வயதுள்ள வெங்கிட்டு, தனது குற்றத்தை உணர்ந்து கொண்டு, எல்லோருக்கும் வணக்கம் சொல்லியபடியே காவல் நிலையம் போய்ச் சேர்ந்தார். அதன் பிறகு வழக்கு விசாரணைக்கு வந்தது. வெங்கிட்டு அவர்கள் குற்றத்தை ஒத்துக் கொண்டார். அவர் கூறியது, “தோட்டத்தில் மண்வெட்டி யுடன் பணி செய்து கொண்டிருந்தேன். அப்போது எனது தகப்பனார் அங்கு வந்து பணம் கேட்டு அடித்துத் துன்புறுத்தினார். நான் பொறுத்துக் கொண்டேன். கள் குடிக்க மீண்டும் மீண்டும் பணம் கேட்டு சித்திரவதை செய்தார். ஒரு கட்டத்தில் வெறியுடன என்னுடைய கழுத்தை நெரித்துக் கொல்ல முயற்சி செய்தார். பணத்தைத் தர மறுத்து விட்டேன். அதனால் நீ செத்துப் போ என்று சொல்லி கழுத்தை நெறித்தார். மூச்சு விட முடியாமல் தவித்துப் போனேன். கண்கள் இருளடைந்து கொண்டு வந்தது. அவரிடம் இருந்து தப்பிக்க அவரை அடித்து விலக்குவதைத் தவிர வேறு வழி எனக்குப் புலப்படவில்லை. எனது கையில் ஏதோ தட்டுப் பட்டது. அது கம்பா அல்லது மண்வெட்டியா என்று புரியவில்லை. என்னைக் காப்பாற்றிக்கொள்ள கையில் கிடைத்ததைக் கொண்டு அடித்து அப்புறம் தள்ளி விட்டேன். இது தான் நடந்தது. நான் அடித்ததும் உண்மை” என விசாரணையில் கூறினார்.
இதனைக் கேட்ட நீதிபதி அவர்கள் தனது தீர்ப்பில் வெங்கிட்டு அவர்களுக்கு விடுதலை தந்தார். ஆனாலும் தான் செய்த குற்றம் தனது நெஞ்சை அரிக்க அன்று முதல் மன நிம்மதி, தூக்கம், உடல் ஆரோக்கியம் எல்லாம் இழந்து, தனது தந்தையின் நினைவாகவே வாழ்ந்து வந்தார். மரணதேவதை வெங்கிட்டு அவர்களைப் பிரியமுடன் நெருங்கித் தனது கொடூர கரங்களால் தழுவிக் கொண்டாள். ஸ்ரீ ஈஸ்வர வர நீதி வாக்கியப்படி ஒவ்வொரு மனிதனும் வாழ்ந்து வந்தால் உலகில் துன்பங்களும், வறுமையும் ஏது? மனிதர்கள் மற்றவர்களுக்கு ஏதாவது சொல்லி தன்னைச் சான்றோன் எனக் காட்டிக் கொள்ள முயல்கிறார்கள். தாங்கள் அறிவைப் தேடி அடைய விரும்பவில்லை. இது கலியின் முடிவு காலம் நெருங்கி விட்டதைச் சொல்லாமல் உணர்த்திக் கொண்டே உள்ளது என்பது ஆன்றோர் வாக்கு.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி !வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.