ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
21•09•2016,
புதன்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(74) மனிதனே புனிதன் —
மனம் முந்தி! காரியம் பிந்தி!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மதுரையில் ஒரு சிறுவனுக்கு மூளையின் இயக்கம் அறிவுடன் கூடித் தொழிற்படுவதில் தான் ஏதோ தடுமாற்றம். நமக்கு முன்னால் ஒரு சிறிய பள்ளம் இருந்தால் அதைத் தாண்டிச் செல்வோம். ஆனால் அவனுக்குத் தூரத்தில் தெரியும் பள்ளம் மிக அருகாமையில் தெரியும். பள்ளம் என்று நினைத்து வெறும் தரையைத் தாண்டிக் கொண்டிருப்பான். பள்ளத்தின் அருகே செல்லும் போது வெறும் தரையாக எண்ணி பள்ளத்தினுள் வீழ்ந்து விடுவான். அடிபட்டுக் கொள்வான்.
அவனுக்கும், அவன் பெற்றோருக்கும் அதனால் துன்பமே விளைந்தது. பற்பல மருத்துவம் செய்தும் பெற்றோர் நிம்மதியின்றித் தவித்து வந்தனர். நாங்கள் அப்போது தியானக் கூட்டம் நடத்தி வந்தோம். அங்கு தான் அவர்களைச் சந்தித்து விபரம் அறிந்தோம். ” இந்த நிலைக்கு ஆன்மிகத்தில் தீர்வுண்டா? ” என்ற வினா அக்கூட்டத்தில் கேட்கப்பட்டது. நான் அவர்களிடம்,”உங்கள் மகன் குணப்படுவான் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?” என்று கேட்டேன். பையனின் தாயாருக்கு மட்டுமே எப்படியாவது தனது மகன் நலமடைய வேண்டும் என்பதன் அடிப்படையில் தெய்வீக வழியில் நம்பிக்கை இருந்தது.
பையனின் தந்தைக்கோ, “எவ்வளவு செலவுகள் செய்து விட்டோம், இவன்கள் ஏதோ தத்து, பித்து என்றும் தியானம் என்றும் உளறிக் கொண்டுள்ளார்கள். படிக்காத மக்கள் என்றாலும் ஏதாவது சொல்லலாம். படித்தவன்களுக்குமா புத்தி இப்படி ஆகி விட்டது” என்ற எண்ணத்தில் கடுப்பானார். நான் அவரிடம், “அப்பு நீ எவ்வளவு வைத்தியம் செய்திருப்பே! அடுத்தவட்டம் இங்கே ஒரு மருத்துவர் வருகிறார். கடைசியாக அவரிடம்தான் பையனக் காட்டுவோமே! காசா பணமா செலவாகுது? வந்துதான் பாருங்கப்பு! ” என்று கூறினேன். பலபடிகள் நல்ல விதமாகப் கூறி நம்பிக்கை ஊட்டினேன். அந்த நாளும் வந்தது.
‘2000 – ம் ஆவது வருடம் உலகம் அழிவது உறுதி ‘ என்று தியானத்தில் இருந்து
அறிந்ததாக ஒரு அறிக்கை வெளியானது. ஆன்மிக உலகில் இருப்போரும், ‘ இருப்பதை எல்லாம் விற்று செலவு செய்து, அனுபவித்து விட்டுப் போகலாம்’ என்று எண்ணும் போது, மற்றவர்களைப் பற்றிக் கேட்கவா வேணும்!? நமது சுவாமி அந்த சமயத்தில் மதுரை விஜயம் செய்த போது, எனக்கு ஆறுதல் ஏற்பட்டது. பதில் சொல்ல வேண்டிய கடமை இப்போது சுவாமி அவர்களுக்கு வந்து விட்டது என்ற எண்ணத்தில் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.
சுவாமி பையனைப் பார்க்க சம்மதித்தார். எனக்கு ஏகப்பட்ட சந்தோஷம். பையனுக்கு ஏதாவது விமோசனம் பெற வழி சொல்லுவார் என்ற நம்பிக்கை எனக்கு முதலில் வந்து விட்டது. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் வீட்டிற்குப் பையனை அழைத்து வந்தனர். சுவாமி மிகவும் அன்புடனும், மரியாதையுடனும், நட்புடன் சகஜமாகப் பேசியதால், சொந்த உறவினர்கள் இடத்தில் பேசுவது போன்று உரையாடினார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சி! பையனை அருகே அழைத்து அமரவைத்தார். நானும் அருகில் அமர்ந்து என்ன கூறப் போகிறார் என்று கவனமானேன்.
அமைதியாகக் குழைந்த பார்வை பார்த்த படியே இடிருந்தார். பிறகு அவரும் கண்களை மூடிக் கொண்டார். அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்று கேட்க ஆவல். ஆனால் துணிவு பிறக்க வில்லை.
சுவாமி எழுந்து பையனின் எதிரில் நின்றார். தனது வலது உள்ளங்கையைப் பையனின் தலை மீது வைத்தார். சிறிது நேரத்தில் பையன் கண்கள் மூடி ஆடாமல், அசையாமல் அமர்ந்து விட்டான். பையன் எழுந்ததும் எங்களுக்குத் தகவல் தெரிவியுங்கள் என்று கூறினார். அன்புடன் விடை பெற்றுக் கொண்டார். பல இடங்களுக்கும் சென்று விட்டு இரவு பத்து மணிக்கு எனது இல்லத்திற்குச் சுவாமியை அழைத்து வந்தேன். அப்போது எனது வீட்டில் டெலிபோன் மணி ஒலித்தது.
பையனைத் தியானத்தில் அமரவைத்து விட்டு சுவாமி வந்தார் அல்லவா? அந்த வீட்டு நண்பர் பேசினார். “மாலை நான்கு மணிக்கு அமர்ந்த பையன் இன்னும் கண் விழிக்க வில்லை. நாங்கள் உறங்கப் போக வேண்டும். என்ன செய்வது?” என்று கேட்டார். குரலில் பயம் கலந்த மரியாதை இருந்தது. நான் சுவாமி அவர்கள் முகத்தைப் பார்த்தேன். சுவாமி வாய்விட்டுச் சிரித்தார். எனக்கும் மனதில் சிறிது பய உணர்வு தோன்ற மெல்ல ஜெபிக்கத் துவங்கினேன்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.