மண்டை வெட்டியான்!

213

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

04•10•2016,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(87) மனிதனே புனிதன் —
மண்டை வெட்டியான்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மனிதனுக்கும் பிரபஞ்சத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமை என்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருந்து வந்துள்ளது. நமது பூமியில் ஒவ்வொரு பருவ காலத்திற்குத் தகுந்தவாறு வாழ்க்கையின் நடைமுறைகள், மனிதனின் பழக்க வழக்கங்கள் இயற்கையோடு கூடியவையாக உள்ளன. மிகுதியான ஒற்றுமை தான் இதில் பிரத்யேகமாக அங்கம் வகித்துக் கொண்டுள்ளது என, ஆன்றோர் பெருமக்களால் போற்றப்பட்டது! பற்பல காரியங்களைச் செய்ய மனிதன் முற்படும் சமயத்தில் அவைகளின் வெற்றி, மனிதனிடம் இருக்கும் ஒற்றுமையின் உணர்வு எந்த அளவிற்கு இருக்கிறதோ, அந்த அளவைக் கொண்டேதான் அமைகிறது.

நடைமுறையில் நல்லபழக்க வழக்கங்களைக் கொண்டிருப்பவர்களிடம், இயற்கைக்கும், அவர்களுக்கும் உள்ள ஒற்றுமையின் அளவு மிகவும் அதிகப்படியாக இருக்கும். அவர்கள் காரியங்கள் பலவற்றைச் செய்யும் போது தவறுகள் ஏற்பட்டால், சுலபமாக நீக்கிக் கொள்ளக்கூடிய ஆற்றலையும் பெற்றிருப்பார்கள். இயற்கையின் ஒற்றுமை உணர்வைத்தான் நமது முன்னோர் ஆசாரவிதியின் ஒழுக்கம் என்று உணர்த்தினர். இந்த ஆசாரவிதிகளுக்கு ஏற்ப எந்தக் காரியங்களும் ஒழுங்காக இல்லாமல் இருப்பதால்தான், அதிகப்படியான அளவில் தவறுகள் உலகில் இயல்பாக நடைபெற்றுக் கொண்டே உள்ளன.

சுவாமியின் தகப்பனாரை எடுத்துக் கொண்டால், பொதுவாக ஆற்றல் மிக்கவர். சில அபூர்வ சக்திகள் கைவரப் பெற்றவர். இயற்கையின் சக்தி எதையோ அவருக்கு வழங்கிக் கொண்டேதான் இருந்திருக்கிறது! மல்யுத்தம், சிலம்பம் பயிற்சிகள் முறையாகப் பயின்றவர். காமா பயில்வானின் பிரதம சீடர் இவருக்குக் குருவாக அமைந்தார். எங்கும் எப்போதும் வியாபார நிமித்தப் பிரயாணம்! குடும்பம் குழந்தைகள் இவர்களுடன் பேசுவதற்கு அவகாசம் இருந்ததில்லை. அப்படி இருந்தாலும் நெருங்கிப் போகாத இயல்பு. உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றியதால் திடமான நோயற்ற சரீரம். நிறைய நண்பர்கள்! எங்கே இருந்தாலும் இவர் வார்த்தைதான் எடுபடும். நண்பர்களுக்கும், அவருக்குப் பிடித்தமானவர்களுக்கும் தாராள உதவிகள்! நமது சுவாமியை, அவரது கொள்கையைப் பிடிக்காத காரணத்தால், அன்று தொட்டு இன்று வரையிலும் செம்புக் காசால் அச்சடிக்கப்பட்ட சிறு தம்படி கூட சுவாமி அவர்களுக்கு உதவி செய்ய மாட்டேன் என்ற வாக்குப்படி உறுதியில் தளராதவர். நமது சுவாமியும் எதையும், தந்தையிடம் எதிர்பார்க்க வில்லை. அதனால் தானோ என்னவோ சுவாமி இறை அருளுக்குப் பாத்திரமாகிப் போனார்!

சாலைகளில் உள்ள புளியமரங்களை வருடா வருடம் ஏலத்தில் விடுவார்கள். சுவாமியின் தந்தை உடுமலையில் இருந்து மூணாறு போகும் பாதையில் உள்ள குறிப்பிட்ட தூரம்வரை ஏலம் கூறி எடுத்திருந்தார். அங்கும் ஒரு ஏழுமலையான் கோயில் நடு வனத்தினுள் இருக்கிறது. பக்தர்கள் வனத்தினுள் நடந்து சென்று வழிபட்டு வருவார்கள். அங்குள்ள காட்டு யானைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்! அத்தனை கொடூரமான யானைகள்! மூணாறு செல்லும் பாதையில் வண்டி வாகனங்களை நிறுத்தி இருந்தால் அவற்றைத் தள்ளி உருட்டி, மிதித்து, உடைத்து துவம்சம் செய்து விடும், ஆக்ரோஷம் மிக்கவைகள்! சுவாமி அங்கு ஏழுமலையான் கோயிலுக்குப் பலமுறை தியானம் செய்து வரச் சென்றிருக்கிறார். ஒரு முறை சுவாமி சென்றபோது கோயிலின் மடப்பள்ளியை யானைகள் இடித்துத்தள்ளி விட்டுச் செல்வதைக் கண்டிருக்கிறார். அக்கோயிலுக்கு வரும் பக்தர்களை மட்டும் யானைகள் இதுவரை தொந்தரை செய்ததில்லை! தேங்காய், அவல், கரும்புத் சர்க்கரை தான் அங்கு நைவேத்யம். வசதி மிக்கவர்கள் நெய், ஏலம், உலர் திராக்ஷை, முந்திரி, பேரீச்சை உடன் கொண்டு செல்வர். மறக்காமல் தட்டு எடுத்துச் செல்வார்கள்! அவைகளை ஒன்று கலந்து படையல் வழிபாடு செய்வர். உண்பதற்கும் அதுவே உணவு!

அந்த மலையின் அடிவாரத்தில் இருக்கும் கிராமத்தில் தான் ‘மண்டைவெட்டியான்’ எனப்படும் போக்கிரியை சுவாமியின் தகப்பனார் சந்தித்தது. திகில் நிறைந்த விஷயம்தான்! மூணாறு வழிப்பாதையில் உள்ள யானைகள் இவ்வளவு கொடூரமாக மாறியதற்குக் காரணம், மலையடிவாரத்தில் விவசாயம் செய்து வந்த காட்டுக்குடிகள் தான்! விவசாயப் பயிர்களை நாசம் செய்யும் அவைகளை விரட்ட ஓலை வெடிகள், வானவெடிகள் என்று எத்தனையோ வெடித்தாலும், மீண்டும் மீண்டும் காட்டு யானைகளின் அட்டகாசத்தைத் தாங்கவோ, சகித்துக் கொள்ளவோ முடியாத ஒருசிலர் மூளையில் உதித்துச் செய்த அபூர்வக் கண்டு பிடிப்பால் வந்த வினையே யானைகளுக்குத் தீராத கோபத்தையும், வழியில் பிரயாணம் செய்பவர்களுக்கு மாறாத தொல்லையும் உண்டாக்கி விட்டது! அது என்ன வென்றால் சைக்கிள் சக்கரத்தின் டயர் மற்றும் டியூப் இவை களுடன் சிறிய மண்ணெண்னெய் விளக்கும் தான்!
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!
–ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button