ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
26•08•2016,
வெள்ளிக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(53) மனிதனே புனிதன் —
மகிமை வெளிப்படுதல்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
உடல் தூய்மை உள்ளதாக இருக்க வேண்டும்! எந்தக் காரியத்திற்கும் ஒரு உபகரணம் தேவை. அதைப்போல் நமது உடல் சீராகவும், ஆரோக்கியம் உள்ளதாகவும் வைத்துக் கொள்ள யோக அப்பியாசங்கள் உதவியாக இருக்கிறது. நாம் சொன்னபடி கேட்கின்ற உடலும், நாம் இடும் கட்டளைக்கு அடங்கக்கூடிய மனமும் ஏற்பட்டிருந்தால் எந்த சாதனைகளும் ஞானியர்க்கு ஆச்சரியம் அல்ல! இதற்கு ஞானத்தின் பங்கு அவசியம்!
யோகம் செய்பவர்கள் வெறும் உடற்பயிற்சியாக எண்ணி செயல்பட்டால், உடல் நன்றாக இருக்கும். அதைக் கொண்டு ஒரு ஆசானாக யோகாசனப் பள்ளியை உண்டாக்க முடியும்! பணம் சம்பாதிக்க மட்டுமே அது உபயோகப்படும். ஞானத்துடன் கூடிய அப்பியாசங்கள் உடலை வசப்படுத்துவதோடு, அது மனத்தையும் பழக்குகிறது!
நமது கட்டளைக்கு அடங்கும் உடலும், மனமும் பெற்றவர்கள், தியானம் செய்யும் போது உடலின் ஒவ்வொரு உறுப்புக்களையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்! காரணம் தியானத்தின் முழுப் பயனும் அப்போதுதான் கிடைக்கும்!
தியானம் என்ற பெயரில் மெய்ஞானத்தை மட்டுமே நாடுபவர்கள் அநேகம் பேர் உடலை அலட்சியம் செய்து விடுகிறார்கள். அதனால் அவர்கள் சாதனைகளில் வெற்றி பெற இயலாது போய்விடுகிறார்கள். ஆரோக்கியமான, கட்டளைக்குக் கீழ்படிகின்ற, உடலும், மனமும் எவ்வளவு முக்கியம்! இதனை நமது சுவாமி தன்னுடைய குருநாதரிடம் கண்டார். அவரது உடலைக் கொண்டு வயதைக் கணிக்க முடியாது! என்றும் இளமைத் தோற்றம்! நமது மெய்யன்பர்கள் சுவாமியுடன் இருக்கும் போது சற்குரு நாதரைப் பலரும் கண்டிருக்கிறோம். ஏதாவது நாம் கேட்டால் அவர் நமது சுவாமிடம் பதில் பேசிக் கொண்டிருப்பார்.
இதற்கு நேர்மாறாகப் பொள்ளாச்சி நடுவீதியில் குருநாதரைச் சுற்றிலும் கொஞ்சம் பேர் நின்று அவரை வைது கொண்டிருந்தனர். காரணம் அங்குள்ள ஒரு வீட்டைப் பார்த்து ” தீப்பிடித்து எரியும் ” என்று சொல்லி விட்டதால், அவர்கள் யாரோ தீவினையாளர் என்று எண்ணி சூழ்ந்து கொண்டனர். தெய்வீகத் தோற்றம் அவரை நெருங்க விடாமல் செய்திருந்தது. போலீஸ்காரர் ஒருவரைச் சிலர் அழைத்து வந்து குருநாதரை அடிக்கச் சொன்னார்கள். அவரும் சிரித்துக் கொண்டே நின்று கொண்டிருந்தார். போலீஸ்காரர் தெய்வபக்தி மிகுந்தவர். இது ஏதோ பைத்தியம் என்றெண்ணி அங்கு கிடந்த பெரிய மரத்தடியை எடுத்து அடிப்பது போல பாவலா காட்டினார். அந்த பெரிய கம்பை குருநாதர் அவரது கையில் இருந்து பிடுங்கி மளுக்கென இரண்டாக ஒடித்துக் கீழே வீசி எறிந்தார்.
“ஆஹா பைத்தியம் கம்பை வேறு ஒடித்துப் போட்டு விட்டு பலமாகச் சிரிக்கிறதே” என்ற ஆத்திரம் அடைந்த வீட்டின் உரிமையாளர் வீட்டில் இருந்து பெரிய கடப்பாரை போன்ற நீளான இரும்பை எடுத்து வந்தார். அவரால் அதைச் சுலபாக தூக்கிக் கொண்டு வர முடியவில்லை. போலீஸ்காரர் வசம் கொடுக்கப் போனார். இரண்டே எட்டில் கம்பியைப் பிடுங்கி சுலபமாக வளைத்து விட்டதும், கூட்டம் மெதுவாகப் பின்வாங்கி, நமக்கெதற்கு ஊர் வம்பு என ஓட்டம் பிடித்தது.
வீட்டின் உரிமையாளர் ஆங்கில புலமையைப் பயன்படுத்திக் கெட்ட வார்த்தைகளால் குருநாதரைத் திட்டினார். குருநாதர் ஆங்கிலத்தில் சகஜமாகப் மிகுந்த புலமையுடன் மரியாதையாகப் பேசவும், பயந்து வீட்டிற்குள் போய் கதவை சாத்திக் கொண்டார். போலீஸ்காரர் சுவாமியிடம் அன்பு கொண்டு வணங்கினார். அவர் தெலுங்கு பேசுபவர் ஆதலால் அவரிடம் தெலுங்கில் குருநாதர் பேசி அவருக்கு ஆசி அருளினார்.
நமது நாகராஜ் சுவாமி அங்கு நடைபெற்றதைக் கண்டு சற்று அதிர்ந்து போன வரை அழைத்துக் கொண்டு பழனி போகும் பாதையில் உள்ள மயானத்தில் வெளியே உள்ள சிறிய ஓய்வு மண்டபத்தில் அமர்ந்து கொண்டார். தான் பழனி போவதாகவும் வழியில் ஐவர் மலையில் கொஞ்ச நாட்கள் தங்கி இருக்கப் போவதாகவும் கூறினார். நமது சுவாமி,”பழனியில் உங்களுக்கு என்ன அலுவல்?” எனக் கேட்க பலமாக வாய்விட்டுச் சிரித்தார்.
“நாகராஜா நீ சிறுபிள்ளை. அங்கு பழனியில் முரட்டுப்பிள்ளைகள் இரண்டு பேர் இருக்கிறார்கள். நீ சொன்னால் கேட்டு நடப்பவன். ஆனால் முரட்டுத் பிள்ளைகள் மீதுதான் தாயின் கவனம் அதிகம் இருக்கும். அதுதான் பழனிக்குப் போகிறேன். நீ பாட்டி சொல்படி நடந்து கொள்! திருமணத்திற்குப் பிறகுதான் உனது குடும்பத்தை எங்கள் வழியில் கொண்டு செல்ல விருப்பம்” என்றார்.
பிறகு குருநாதர் நமது சுவாமியிடம் குருஜெபம் எப்படி வழி நடத்தப் போகிறது என்பதைக் கூறினார்.
“சுவாமி தேர்வு செய்த மற்றொருவர் யார்? அவர்கள் பணி என்ன? “என்று கேட்டதும் அதற்கு குருநாதர், ஒருவன் மாயக் கிருஷ்ணன், இன்னொருவன் சதா அம்பலத்தில் ஆடுபவர், மற்றவன் ஆதிசேசன்.இப்போது இது போதும். கருத்து பேதங்கள் அற்று இருப்பாய். நீ பாடி நான் கேட்க ஆவல்! இன்னொன்று மிக முக்கியம்! பாடங்களை எழுதிப் பழகு! வருகிறேன்” என்றவர் பழனிப் பாதையில் சீராக நடந்து போனார்.
வேதமந்திரங்களை நமது முன்னோர்கள் அநேக காலங்கள் திரும்பத் திரும்பப் பல தடவைகள் உச்சரித்ததால் அவைகள் மிகவும் சக்தி படைத்தவைகளாக இவ்வுலகில் விளங்குகின்றன. எந்த மந்திரங்களைச் சொல்வதானாலும் அதற்கு உயிர் போன்று இருப்பது, பிரணவப் பொருளாகிய “ஓம்” என்பதே. மற்ற மந்திரங்கள் அனைத்தும் குருமுகமாக உபதேசத்தில் மட்டுமே பெறமுடியும். ஆனால் பிரணவ மந்திரம் மாத்திரம் பிரபஞ்ச சக்தியில் இயற்கையாகக் கிடைக்கப் பெற்றதாகும். அதனை சித்தர்களும், ரிஷிகளும் பற்பல கோடி தடவைகள் உச்சரித்து சக்தி பெற்ற இதனை உலகத்தில் சாதாரண மக்களுக்கும் வழங்கினர். ஓம் என்ற மந்திரத்தை எல்லோரும் ஜெபித்ததால் அது பற்பல நன்மைகளைச் செய்தது. சக்தி பெற்ற அம்மந்திர ஜெப ஒலி மனிதர்களை இயக்க ஆரம்பித்து விட்டது. எத்தகைய வேலைகளைச் செய்தாலும் ஓம் என்ற மந்திரத்துடன் துவங்கினால் அம்மந்திரம் மனிதனைச் சக்தியின் ஆற்றல் பெற்றவனாகச் செய்தது.
குருநாதரிடம் மந்திர உபதேசம் பெறும்போது அதில் அவருடைய தவசக்தியும் கலந்திருப்பதால் அம்மந்திரம் புனிதமானதாகச் சீடனுக்கு விளங்குகிறது. குருமஹா மந்திரத்தைச் ஜெபிக்கும் போது ஜெபிப்பவருடைய வலிமையைக் காட்டிலும், ஜெப மந்திர சக்தியும், குருநாதரின் அருளுமே இயக்கி வழி நடத்துகிறது. இதனை ஜெபம் செய்யும் நம்மால் நிச்சயமாக அதன் அபூர்வ சக்தியை, அதன் தனித் தன்மையை உணர்ந்து கொள்ள முடியும்! குருநாதன் துணை இருந்தால் அவர் வழி காட்டுதலில் சக்தியும், வெற்றியும் பெறமுடியும்!
இதனைத் திருமணத்திற்குப் பிறகு மீனாம்பாள் நாச்சியாரிடம் நமது சுவாமி முதலில் எடுத்துக் கூறினார். அதனைப் பின்பற்றிய இருவரையும் சற்குருநாதர் வழிநடத்திச் சென்றார்.
ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதி நாகராஜ சுவாமிகளைப் பக்குவமானவராக உயர்த்தி இருக்கிறது. பக்குவமாக இருந்தபோது அவர் நாமத்தை அறிந்து கொண்டார். மானசீகமாகப் பற்றி அவரைப் புரிந்து நடந்து கொண்டார். இவர் தவம் மகாயாகம் போன்றது. இதற்கு பிரபஞ்ச சக்தியானது உதவிகள் செய்தது. திருமணத்திற்குப் பின்னரே சற்குரு நாதரின் பாடபோதனைகள் இன்னும் பரிபக்குவமாக்கியது. நன்மையாகவே நடந்தது!
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும் )
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.