போன மாமி திரும்பி வந்தார்!

192

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

22•02•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(237) மனிதனே புனிதன் —
போன மாமி திரும்பி வந்தார்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆடி மாதத்திய சூறைக் காற்று வீசும் பெளர்ணமியில், தலைவிரி கோலமாக, செவ்வாடை அணிந்த துறவி போல் மாமி வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தாள். வீட்டைத் துறந்து போகும் போது குழந்தை போல் தவழ்ந்து சென்ற மாமி, அம்மிக் கல்லைக் கூட உருட்டிக் செல்லும் சூறைக்காற்றில், கைவீசியபடி ஏதோ வீதியுலாச் செல்வது போல் வந்து கொண்டிருந்தார். அதுமட்டுமா ஆண், பெண், குட்டிகள் என அநேக காட்டு நாய்களின் கூட்டம் மாமியின் பின்னால் வந்து கொண்டிருந்தன. சில ஆகாயத்தைப் பார்த்து ஊளையிட்டபடி வேகமாக மாமியை முந்திக் கொண்டு முன்னால் ஓடி வந்தன. அதனைக்கண்டே குரு பத்தினியும், பணிப்பெண்ணும் அச்சத்தில் அலறினர்.

வீட்டு வாசலில் வந்து மாமியைச் சுற்றிலும் காட்டு நாய்கள் கூட்டமாக நின்று கொண்டு, ஆகாயத்தை நோக்கியபடி ஊளையிடும் சப்தம்
மனதைப் பிசைந்து உடலை அதிர்ந்து போகச் செய்தன. நீங்கள் போகலாம் என மாமி கூறியதும், வாஞ்சையாக அவர் முகத்தைப் பார்த்து விட்டு, வனப் பகுதியை நோக்கிச் சென்றன. அங்கு சுற்றிலும் குடியிருந்த அநேக ஜனங்கள் பயத்துடன், வீட்டின் பலகணி வழியே மிரட்சி மிகுந்த கண்களால் பார்த்துக் கொண்டிருந்தனர். மாமி வீட்டின் படிகளில் ஏறி வந்து கதவை மெல்லத் தட்டினாள். அது வயிற்றுக்குள் இருந்து அச்சம் என்ற பந்து உருண்டு வந்து நெஞ்சில் அடைப்பது போன்று இருந்தது. தயக்கத்துடன் பணிப் பெண் கதவைத் திறந்தாள். மாமி புன்னகை பூத்த முகத்துடன் தீபத் சுடர்போல் ஜொலித்துக் கொண்டு தெய்வீகமாக நின்று கொண்டிருந்தார். பைரவி அதிர்ச்சியில் ஆடாமல், அசையாமல் சிலை மாதிரி நின்று கொண்டிருந்தாள். பணிப்பெண் வாருங்கள் மாமி என அழைத்தார். உள்ளே வந்த மாமி ஏதும் பேசாமல் தனது அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டார்.

பணிமகள் குரல் கொடுத்ததும் இவ்வுலக நினைவுக்கு வந்த குரு பத்தினி, அன்றைய இரவு முழுவதும் பயத்தில் உறைந்து, தூக்கத்தையும் தொலைத்து, விடியும் வரை புலம்பிக் கொண்டிருந்தாள். அதிகாலையில் தனது அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த மாமி ஸ்நானாம் செய்து மடியாக பூஜை இத்தியாதிகளை முடித்துக் கொண்டு ஸ்ரீ விநாயகர் ஜெபம் செய்து கொண்டு பூஜை அறையில் தவக்கோலத்தில் அமர்ந்து விட்டார். மாமியைக் காட்டாற்று வெள்ளம் அடித்துக் கொண்டு சென்றதை பெண்கள் பலரும் கண்டிருந்தனர். அவர் இறந்து விட்டார் என்றே நம்பிக் கொண்டிருந்தனர். இப்போது மாமி திரும்பவும் வந்து விட்ட அதிசயத்தைக் காண, ஆதி குரு நாதனின் வீட்டு வாசலில் ஜனத்திறள் கூடி விட்டது. பலர் மாமியிடம் ஷேமநலன் விசாரித்தனர். வெள்ளத்தில் போன மாமி செளக்கியமாகத் திரும்பி வந்த விருத்தாந்தங்களைக் கேட்க விரும்புகிறோம் என்று கூறியபடி அவரைச் சுற்றிலும் கும்பலாக அமர்ந்து கொண்டனர்.

மாமியும் சுருக்கமாகத்தான் நோயுடன் போராடி கொண்டிருந்த போது, உயிரை மாய்த்துக் கொள்ளக் காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கினேன். வெள்ளத்தில் அடித்துக் கொண்டு வரப்பட்ட பெரிய மரம் தன்னைச் சுமந்து சென்று அடுத்த ஊரில் கரை ஒதுக்கியதாகவும், அங்கே அருகேயிருந்த ஓர் ஆஸ்ரம வாசிகள், தன்னைக் கொண்டு சென்று ஒளஷாதிகள் மூலம் குணப்படுத்தியதாகவும், அவர்கள் செய்யும் ஸ்ரீ கணபதி பூஜைகளில் கலந்து கொண்டு பலன் பெற்றதாகவும், அங்கு வளர்ந்து வரும் காட்டு விலங்குகள் தன்னுடன் நன்றாகப் பழகியதாகவும் தெரிவித்தார். பிறகு வீடு செல்ல விரும்புவதாக அவர்களிடம் கூறியதும் காட்டு நாய்களைத் துணையாக அனுப்பி வைத்தனர் என்றும் முடித்தார். அனைவரும் அவரை வணங்கிச் சென்றனர். பலகணி அருகே மறைந்திருந்த இதைக் கேட்ட குருபத்தினியன் உள்ளம் எரிமலையாகக் குமுறியது. இனி மாமிக்கு கஞ்சி காய்ச்சி விட வேண்டியதுதான் என மனதிற்குள் முடிவு செய்து கொண்டாள்.

மறு நாள் முதற் கொண்டு மாமியின் நடவடிக்கைகளில் வித்தியாசம் தென்பட்டது. சமைத்த உணவுப் பொருட்கள் பாத்திரங்களில் இருப்பதில்லை. மாமியிடம் விசாரிக்கப் போனால் அவர் உறங்கிக் கொண்டிருப்பார். உணவு வகைகளைப் சமைத்தவுடன் எடுத்து உண்டால் மாத்திரமே ஆதி குரு நாதனின் மனையாளுக்கு உணவு கிடைக்கும். இல்லாது போனால் உணவு களவு போய் விடும். பட்டினியால் பைரவி தவித்துப் போனாள். மாமிக்கு விஷமிட்டு வைத்த கஞ்சியைக் கூடவா காவடி விடுவார்கள்? இது யாருடைய கைங்கர்யம்? கண்டு பிடித்தே தீருவது என்ற முடிவுக்கே குரு பத்தினி பைரவி வந்து விட்டாள். மாமிக்கு கஞ்சி காய்ச்சப்போய், தனது வயிற்றுக்கு உணவு கிடைக்காமல் படும் பாடு இருக்கிறதே, இது என்ன சோதனை? பகவானே உனக்குக் கண்ணில்லையா? என்று தெய்வத்தையும் வைதாள். உணவு களவு போகும் செய்தி
காதும் காதும் வைத்தது போல் ஊருக்குள் பரவியது. இது என்னடி அதிசயம்? என்று பெண்கள் கூடிப் பேசினார்கள்.”
(தொடர்ந்து வரும்)
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button