ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
05•08•2017,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(401) மனிதனே புனிதன் —
பைத்தியம் பகர்ந்த விடை.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
” அப்பா கேள். ஆலயங்களுக்கு விக்ரகங்கள் செய்து தரும் குலத்தில் பிறந்தேன். அழகான விக்ரகங்கள் வடிக்கும் கலையில் தேர்ச்சி பெற்றேன். எனது குருவோ போகநாதர். அவரிடம் இருந்து அநேக ரகசிய யோக வித்தைகள் பல கற்றுத் தேர்ந்தேன். அவர் காளி மந்திர உபாசகர். குரு அழைக்க காளி அவருக்குப் பணிகள் செய்வாள். அதனை எனக்கும் கற்றுக் கொடுத்தார். பசி வரும் போது உணவுகள் கொணர்ந்து தருவாள். எனது பூஜைக்குத் தேவையானதைத் தந்து உதவுவாள். அப்பா, இதோ இதனைச் சாப்பிடு ” எனப் பழ வகைச் தட்டுக்களைத் தூணின் மறைவில் இருந்து எடுத்துக் கொடுத்தார். இருவரும் சாப்பிட்டனர். தூணின் மறைவில் இருந்து கடுங்குரலில் அகோரச் சிரிப்பொலி கேட்டது. திரு.ஷண்முகம் பயந்து நடுங்கிப் போய்விட்டார். அவருடைய கண்களுக்கு எதுவும் புலப்பட வில்லை. மேலும் சித்தர் கூறுவார், ” அப்பா ஷண்முகம் தஞ்சை மகா மேரு என்னும் பெரிய கோயிலைக் கட்டும் பணி தொடங்கும் போது, அரசன் வேத விற்பன்னர் களையும், தகுதி பெற்ற ஜோதிட நிபுணர்களையும் கலந்து ஆலோசிக்காமல், தனது இஷ்டம் போல் நல்ல நாளினைக் குறித்தார். அவரது அழைப்பின் பேரில் சென்ற என்னிடத்தில் தான் கணித்த நாளில், தான் தேர்வு செய்த இடத்தில் தான் அடிக்கல் நாட்டுவதாகக் கூறினார். அந்த இடத்தைப் பார்வையிட்டேன். அது யக்ஷினி களை காபந்து செய்து வரும் பிரம்மராட்சசி வாழும் இடமாக இருந்தது. வேதநெறி விற்பன்னர் களைக் கொண்டு ஸ்தல சுத்தி செய்யப்படாமல், அரசன் ஆசைப்படி ஸ்தம்ப ஸ்தாபிதம் எனப்படும் விழா எடுக்கப்பட்டது. கால் கோள் விழாவான அன்று மக்கள் விருப்பப்படி, ஆட்டபாட்டம் கொண்டாட்டம் எனக் கிராமியக் கலை நிகழ்ச்சி எல்லாம் செய்து இனிதாக நடை பெற்றது.”
” அரசன் ஆணைப்படி மனையடி சாஸ்திரம் அறிந்த ஸ்தபதி நல்ல தொரு சுபநாளைக் குறித்தார். மகா ஜோதிட ஞான பண்டிதர் களும், வேதங்கள் கற்ற மகா ஞானிகளும் அக்கால கட்டத்தை நட்சத்திர ஆரக்கால்கள் கொண்டு கணித்துப் பார்த்தனர். சூரியன் சஞ்சரிக்கும் நட்சத்திரத்தில் இருந்து இருபத்தி ஏழாவது நட்சத்திரம் பூரம். அன்றைய தினம் கட்டிடப் பலன் மரணம். சரி, அபிஜித் நட்சத்திரத்தைச் சேர்த்துக் கணித்தாலும் வரும் நட்சத்திரம் உத்திரம். அன்று மரணம் தருகின்ற நட்சத்திரம். ஜோதிட நிபுணர்கள் மனம் கேட்காமல் அரசனை அணுகி னார்கள். அரசன் நாட்டின் அநேக பிரச்சினைகளில் தீர்வு காணப் பிரயாணம் துவங்கி விட்டதால் அரசனைச் சந்திக்க முடியாமல் சிவஸ்மரணையுடன் திரும்பி விட்டனர். அரசன் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பிய அவர்கள் மனம் வேதனையுற்றது. ஆலயம் அமைந்த பிறகு பிரம்மராட்சசி அதற்குள் குடி புகுந்து விட்டாள். சிவலிங்கப் பிராணப் பிரதிஷ்டை அஷ்டபந்தனம் செய்தபிறகு, அதனை நிலையில் அமர விடாது அசைத்துக் கொண்டி ருந்தாள். அதன் பிறகு நாட்டில் ஏகப்பட்ட குழப்பநிலைகளும், பிரச்சினைகளும் தோன்றின. அந்த சமயத்தில் கருவூர் தேவனாகிய எனது உதவியை அரசர் நாடினார். ஜோதிட பண்டிதர்களுடன் கலந்து ஆலோசனைகள் செய்தேன். அவர்கள் பிரம்ம ராட்சசியை வெளியேற்றி விரட்ட உக்கிரம் வாய்ந்த தேவதையின் உதவிகள் இருந்தால் சாதிக்கலாம் எனக் கூறினர். நான் எனது குருநாதர் போக நாதரை வணங்கி மானசீக ஆசி பெற்றேன். எனது உபாசனா தேவி காளிஅம்மை அந்த பிரம்ம ராட்சசியையும், அவள் காபந்து செய்து வந்த யக்ஷினிகளையும் ஓட ஓட விரட்டினாள். பிரம்ம ராட்சசி என்னைப் பிடிக்க வந்தாள். குருநாதர் உபதேசித்த மந்திரம் கூறி எச்சிலைக்காறி அவள் மீது உமிழ்ந்தேன். எச்சில் அவள் மீது பட்டதும் அலறியபடி ஓடி மறைந்து போனாள். பிறகு வில்வ சமித்துகளைக் கொண்டு அஷ்டதிக்கு தேவதைகளை ஆலயம் அமைய இருக்கும் எல்லையைத் சுற்றிலும் முறைப்படி பிரணாப் பிரதிஷ்டை செய்து துர் தேவதைகள் அணுகாமல் செய்தேன். இதற்கு ஜோதிட விற்பன்னர்கள் பேருதவி புரிந்தனர்.”
” இச்செயலால் என்னைத் தனது குருவாக அரசன் வரித்துக் கொண்டார். என்னாலான நன்மைகளைச் சொல்லி வந்தேன். இந்த சமயத்தில் சிதம்பரத்தில் நடராஜா மூர்த்தியின் விக்ரகம் சொக்கத் தங்கத்தால் செய்யப்படுவதாகக் கேள்வியுற்று ஆச்சரியம் அடைந்தேன். செம்பு சேர்க்கப் படாமல் எப்படிச் செய்வது? சோழராஜன் ஆணைப்படி சொக்கத்தங்கத்தால் ஆடல் வல்லான் புனித நடராஜர் விக்ரகத்தைச் சிற்பிகளால் வடிக்க இயல வில்லை. போகநாதர் எனது தியானத்தின் போது காட்சி கொடுத்து நடராஜர் விக்கிரகத்தைப் பொன்னால் வடிவமைத்துத்தர உத்தர விட்டார். நான் சென்று ஆடல் வல்லான் திருவுருவத்தை மிக அழகாகத் செம்பொன்னுடன், செம்பு கூட்டி வடிவமைத்து விட்டேன். இதனால் அரசன் என்னைக் கடுஞ்சிறையில் இட்டான். அப்போது….”
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.