பைத்தியங்களின் நடுவில்!

226

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

22•08•2016,
திங்கட்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(49) மனிதனே புனிதன் —
பைத்தியங்களின் நடுவில்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மனம் என்ன நினைக்கிறதோ அதையே வார்த்தைகளாக வெளி விடும் தன்னம்பிக்கையும் , பிறகு அவைகளை நற்செயல்களாக மாற்றி விடும் ஆற்றல் சக்திகளின் பேருண்மைகளையும், இவ்வுலகில் பிரபஞ்ச இறையருள் சக்தி வழங்கி இருக்கிறது. அதுவே தன்னிலை உணர்தல் என்பதற்கு ஆதாரம்! அத்தகைய தன்நிலையை உணர்ந்து கொள்ளும் காலகட்டத்தைப் பெறுவதற்கு, இறை சக்தியையே வணங்கும் பாக்கியம் பெற்றவர்களுக்கே அல்லாது வேறு யார் பெற்றிட முடியும்?

இறை சக்தியை வணங்குவதால் நமது வாழ்வும், பக்தனின் மேன்மையும் சிறப்புப் பெறுகின்றன. இறைவனுக்கு உகந்தவன் நானே என்று வீண் பெருமையும், வார்த்தையும் வேண்டாம். அதில்கூட தீமைசக்தி நுழைந்து தனது காரியமாகிய, அகங்காரம், ஆணவம், பேராசையாகிய குணங்களைத் தூண்டி விட்டு நம்மை கர்வம் கொள்ளச் செய்து விடும்.

பொன்னம்மாள் பாட்டியும், “இல்லறமே சிறந்த தர்மம்! அதனை வெறுத்துச் செல்லாதே. இறையருள் சுலபமாகக் கிடைக்கும் பாதையை மாற்றிக் கொள்ளாதே. திருமணம் செய்து கொள்வாய்” என்று கூறி வந்தவர் இப்போது எடுத்துச் சொல்வதில் சாபமான வார்த்தைகளைப் சொல்லி விட்டதால், அவருக்கும் உடல்நிலை சீர் கேட்டை அடைந்தது. தவறைத் திருத்திக் கொள்ளத் தவத்தில் சற்று ஈடுபாடு அதிகம் கொண்டார். சுவாமி அதிகமான நாட்கள் மெளன விரதத்தைக் கடைப்பிடித்து வரலானார். உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படாததாலும், மேலும் மெளனத்திலேயே சுவாமி இருந்து வந்ததாலும் மருத்துவர்கள், சுவாமியை மனநல மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் பரிந்துரை செய்தார்கள்.

பலசரக்குக் கடையில் வேலையில் இருந்த காளிமுத்து, கணேசன் என்பவர்கள் பழனி அருகேயுள்ள கரிக்காரன்புதூரைச் சேர்ந்தவர்கள். சுவாமியைக் கவனித்துக் கொள்ள நியமிக்கப் பட்டார்கள். மருத்துவர்கள் தந்த ஆங்கில மருந்தை நேரம் தவறாது கொடுத்து வந்தார்கள். ஒரு நாள் இருவருமே ஒருவர் அறியாமல் மற்றவர் மருந்தைச் சாப்பிட வைத்ததால் சுவாமி ஆழ்ந்த மயக்கத்தில் முழுகி விட்டார். சிறுவயது பையன்களானதால் புரியாமல், அவசரத்தில் நன்மையைக் கருதிச் செய்யப்போக, சுவாமி கண் விழிக்காமல் கிடந்ததால் இருவரும் அழுதுகொண்டு, ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லியபடி மீண்டும் அழுது கொண்டிருந்தனர்.

பெற்றோர் அன்று வயல் அறுவடை செய்யும் பணியைக் கவனித்துக் கொண்டிருக்கும் இடம் சென்று சைக்கிளில் அழைத்து வந்தனர். அதற்குள் செய்தி பரவிவிட்டது. ஆள் பிழைப்பது அரிது என்றனர். ஆனால் தீவிர சிகிச்சையில் கண் விழித்தார். மருத்துவர்களுக்குள் சர்ச்சை எழுந்தது. இவ்வளவு அதிகமான சக்தி உடைய மருந்தை இவருக்குக் கொடுத்திருக்கக் கூடாது என்பதாக அது இருந்தது.

பிறகு கோவையில் உள்ள மனநல மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எங்கு பார்த்தாலும் பைத்தியங்கள் பலவிதமாக சப்தம் செய்து கொண்டிருந்தனர். சுவாமியின் நாக்கில் நீலநிற திரவத்தைத் தடவி தலையைக் குவியத் செய்து எச்சில் கபம் வடியச் செய்தனர். சுவாமி ஒவ்வொரு பைத்தியங்களாகப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தார். அவர்கள் செய்கைகள் நல்ல புத்தியுடன் நடந்து கொள்வதாகவே மனதில் பட்டது. சற்று நேரத்தில் சுவாமிக்குப் புரிந்தது. அவர்கள் தொடர்ந்து ஒரே செயலைக் திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருந்தனர். அங்கு நல்ல உள்ளம் கொண்ட மருத்துவர் நமது சுவாமியின் அமைதியான தெளிந்த முகத்தைப் பார்த்து விட்டுப் பரிவுடன் பேசினார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு சுவாமி மிகவும் தெளிவாகப் பதில் கூறினார்கள். அவர் ஆச்சரியப் பட்டார்! தவறுதலாக உங்களை இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள். நீங்கள் போகலாம் என்று சொல்லி பஸ்ஸில் செல்லப் பணமும் தந்து புன்சிரிப்புடன் வழியனுப்பி வைத்தார். சுவாமியைப் பார்த்து கணேசனும், காளிமுத்துவும் சந்தோஷத்தில் குதித்தனர்.
சுவாமியைப் பாடச்சொல்லிக் கேட்டுப் பரவசமாயினர்.

இப்போது சுவாமியின் மூத்த சகோதரி ஒரு முக்கியச் செய்தியைக் கொண்டு வந்தார். அது
” பொள்ளாச்சி டவுண் போலீஸ் ஸ்டேஷன் கடை வீதியில், பாம்பேடையிங் என்ற கடையின் அருகே டாக்டர் ஒருவர் இருக்கிறார். அவர் மருத்துவம் பார்க்கும் இடம் கோயில் போன்று பார்க்கத் தெய்வீகமாக உள்ளது. நீங்கள் அவரை ஒரு முறை சென்று பார்த்து வந்தால் என்ன? ” என்ற கேள்வியும் பதிலுமாகச் சொன்னார்கள். சுவாமி வாய் திறந்து சம்மதம் என்றார். அன்று வியாழக்கிழமை. பொள்ளாச்சி சந்தைக்குச்செல்லும் கூட்டம் அலைமோதியது. நிதானமாக தியானம் செய்து விட்டு மிகவும் சந்தோஷமாகப் புறப்பட்டு 3 ஆம் நெ. பஸ் வளந்தாயாமரம் To பொள்ளாச்சி வண்டியில் சென்றார். இந்த உலகமே இனிமையானதாக இருந்தது.

பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் வக்கீல்ஐயா குடும்பம் என்பது அக்காலத்தில் பிரபல்யம் வாய்ந்தது. அக்குடும்பத்தில் ஆன்மிக நாட்டத்தில் சிறந்தவர்களாக அனைவரும் திகழ்ந்தனர்.

தெய்வீக மெய்யன்பர்கள் வாழும் இல்லத்தில் பிறந்த திருவாளர் Dr.ராஜசேகரன் ஐயா அவர்கள் மருத்துவத்தோடு, நோயாளிகளுக்கு
ஆறுதலும், தேறுதலும், குணம் பெற்று நன்றாக இருப்பீர்கள் என்று சொல்லி வந்தார். நோயாளிகள் குணம் பெறத் தியானமும் செய்து விட்டு இறையருளுடன் இருந்தார்கள். அங்கு பாம்பேடையிங் திரு.கிருஷ்ணமூர்த்தி செட்டியார் வீட்டில் பிறந்த ஆன்மிக நாட்டத்தில் சிறந்த பெண்மணி திருமதி வேதவல்லியம்மா அவர்களைத் திருமணம் செய்து கொணடு, கணவனும் மனைவியுமாகத் தியானத்தில் ஈடுபாடு கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள்.

இத்தம்பதியர்களுக்கு மகேஷ் என்ற மகனும் அகிலாண்டேஸ்வரி என்ற மகளும் தெய்வீக தியானத்தில் வளர்ந்து வந்தனர். ஒரு தாயும் தகப்பனும் தங்களின் குழந்தைகளை எப்படி வளர்த்தால் சிறப்புப் பெறுவார்கள் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். அப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்ட அவர்கள் நமது சுவாமிக்கு எத்தகைய நன்மையை விரும்பி இருப்பார்கள் என்பதும் நமக்குப் புரிய வருகிறது.

சுவாமியை அன்போடு உபசரித்தார்கள். அமரச் செய்து விட்டு முதலில் வந்துள்ள நோயாளிகளைப் பார்த்து அவர்களை இன்முகத்துடன் அனுப்பி வைத்தனர். பிறகு சுவாமிக்கு அழைப்பு வந்தது. அவரது அலுவலக அறை உண்மையாகவே தெய்வீகத் தன்மையுடன் திகழ்ந்தது. அமைதியாக சுவாமியையே பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு சகஜமாக நட்புடன் உரையாடினார். பெயர், ஊர் எல்லாம் கேட்டு விட்டு மலஜல பரிசோதனைக்கு ஒரு சீட்டு எழுதித் தந்து விட்டு,” இரண்டு நாட்கள் சென்று வாருங்கள். உங்கள் உடலுக்கு எந்தத் தொந்தரவும் இல்லை. தைரியமாகப் போய் வாருங்கள்” என்றார். வீட்டிற்கு வந்த சுவாமியிடம் சகோதரி, “டாக்டர் என்ன சொன்னார்? ” எனக் கேட்டதும், ஒன்றும் இல்லை! இரண்டு நாட்கள் சென்று வரச் சொன்னார்” என்றார். “அதற்குக் காரணம் ஏதாவது இருக்கலாம் அல்லது உங்கள் வாழ்க்கையில் ஏதாவது திருப்பு முனை ஏற்படப் போகிறது பாருங்கள்” என்றார் சகோதரி! அவர் சொன்னது பலித்தது!

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்துவரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button