புல்லூத்து சர்பக்காவு!

208

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

05•11•2016,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(129) மனிதனே புனிதன் —
புல்லூத்து சர்பக்காவு!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
” சர்பமே இது என்ன? யார் உன்னை ஏவியது? என்ன பயன் கருதி இக்காரியம் முடிக்க வந்தாய்? உன் செயலில் சத்தியம், தர்மம், ஞாயம் இருப்பதாக இருந்தால், நான் விலகிக் கொள்கிறேன். நீ தீண்டிவிட்டு சந்தோஷமாகப் போகலாம்! அவர் பிறப்பும் உன் பிறப்பும் கடவுள் படைப்பு. ஆத்மாக்கள் அனைத்தும் இறைவனாய் இருக்க, நீ செய்யும் செயலில் நன்மை, தீமை, பாவம் அனைத்தும் உன்னையே சாரும். போய்விடு! ஈஸ்வரன் மீது ஆணை!” என்று சுவாமி கூறினார்.

கூறிவிட்டு, ” மேகநாதன் வாப்பா! அது தனது ஆசையைத் தீர்த்துக் கொள்ளட்டும். சும்மா, தைரியமாக வெளியே வாப்பா ! ” என்றார். மனதில் சற்றுக் கலவரமுடன் மெதுவாக வெளியே சென்றேன். சர்பம் கோபமாகப் பார்த்த படியே இருந்தது. சுவாமி எனது கையைப் பற்றிக் கொண்டபடி சர்பத்திடம் என்னைத் தீண்டிடச் சொல்லவும், அது சரசரவெனப் பின்வாங்கியது. தரையில் பலதடவை கொத்தியது. பிறகு உயர எழுந்து நின்றபடி நமது
நாகராஜ் சுவாமியையே பார்த்தது.

பிறகு ஒரே தவ்வாகத் தவ்வியபடியே பறந்து மரத்தின் உச்சிக்குச் சென்றது. அங்கேயிருந்து எங்களையே பார்த்தது. பிறகு மற்ற மரங்களில் தவ்வித் தவ்விப் பறந்த மாதிரியே சென்றது. எங்களுக்கு எல்லாம் கனவில் நடந்து முடிந்த மாதிரித்தான் அந்த நிகழ்வு இருந்தது. வீட்டிற்குள் சுவாமி வந்தபிறகு,” என்ன மேகநாதன் புல்லூத்து சர்பவனம் போகலாமா?” என்றார் இயல்பாக! இதுவரை நடைபெற்ற சம்பவங்களால் அதிர்ந்து போன எனது குடும்பத்தினர், மெளனமாகிப் போனார்கள். உடனே புறப்பட்டு அவருடன் சென்றேன். உணவு சாப்பிட்டு விட்டுப் போகலாம் என்ற எனது குடும்பத்தினர் வேண்டுகோளைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.

புல்லூத்து சென்றதும் என்னை ஊற்று நீரில் குளிக்கச் சொன்னார். குளித்தேன். சுவாமி அங்கு மெளனமாக தியானத்தில் ஆழ்ந்து போனார். அந்த இடத்தில் நமது சுவாமிக்கு ஆஸ்ரமம் அமைக்கும் எண்ணம் எனது உள்ளத்தில் தோன்றியது. நடந்த சம்பவத்தின் பின்னணி என்ன வென்று அறிந்து கொள்ள விரும்பிக் கேட்டேன். எனது அந்தக் கோரிக்கையை ஏற்க சுவாமி மறுத்து விட்டார். “தேவரகசியம் தேடாதே” என்ற பதில் மட்டுமே கிடைத்தது! வீட்டிற்கு வந்தவுடனே புறப்பட்டு விட்டார். இன்னும் அநேக சம்பவங்களை நேரில் கண்டறிந்த என்னைப் போலவே பலருடைய வாழ்விலும் அமானுஷ்ய சம்பவங்கள் நடை பெற்றுள்ளது!

இந்நிகழ்ச்சி அநேக வருடங்களுக்குப் பிறகு நடந்த ஒன்று. இன்பத்தையும், துன்பத்தையும் அவர் சமமாகவே பாவித்து வந்தவர். இனி அவர் வாழ்வில் அதிர்ச்சி தரும் சம்பவங்கள் பல நடை பெற்ற போதும் அவர் கலக்கம் அடைந்ததில்லை! இறைவன் ஜெபத்துடனேயே எதையும் ஏற்றுக் கொள்ளவும், தைரியத்துடன் தாங்கிக் கொள்ளவும் உரிய பக்குவத்தை சற்குருநாதர் தந்து அவர் உள்ளத்தை வளமைப் படுத்தி இருந்தார். இனி தவத்திரு வேணுகோபால சுவாமி அவர்களைச் சந்திக்கப் போகின்றார். அந்த நிகழ்வுகளை இனிப் பார்ப்போம்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button