ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
18•09•2016,
ஞாயிற்றுக்கிழமை, ,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(71) மனிதனே புனிதன் —
புரியாத புதிர் மனித மனம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுத்த ஜலம் என்ற கிணற்று நீரை செப்புக் குடத்தினுள் எடுத்துக்கொண்டு, அதனுள் வசிஷ்டம் என்ற சன்னமான தர்ப்பைப்புல் கட்டு ஒன்றினை வைத்துக் கலசம் ஸ்தாபிக்க வேண்டும். சுத்தமான விபூதியில் பன்னீரைக் கலந்து பிள்ளையார் பிடித்து வைக்கவும். அர்ச்சிக்க வில்வம், அறுகு தேவை. நைவேத்யம் அவல், சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலம், கதழிப்பழம் சேர்ந்த கலவை வேண்டும். கணபதி பூஜைக்குப் பிறகு பிள்ளையார், நவக்கிரக ஹோமம் செய்யவும். இரட்டை விளக்கு தேங்காய் எண்ணை விட்டு தீபம் ஏற்றவும். தேங்காய் மூடிகள் இரண்டில் தேங்காய் எண்ணெய் விட்டும் தீபம் வைக்கலாம். ஆனால் அதனை சந்தனத்தின் மீது தான் வைக்க வேண்டும். தெய்வீக எண்ணமுடன் ஹோமம் செய்து பூஜிக்கவும். யாக பஸ்பத்தில் சிறிது எடுத்துக் கலசத்தில் கலந்து, கலசநீர் அருந்திக் கலச நீரில் குளிப்பதனால் தீட்டுக்கள் அகன்று விடும்.
தீட்டுக்கள் எனப்படுபவை நாம் மற்றவர்கள் எண்ணப்பதிவை ஈர்த்துக் கொள்வதால், பிறரின் தீமை விளைவிக்கும் துக்கங்கள் நமது துக்கங்களாக நம்முள் மாறிவிடுகின்றன. நம்முள் ஏற்படும் தீமைப் பதிவுகளை நீக்க நமக்கு உதவும் புறக்காரணிகளே மேலே குறிப்பிட்டவை. அகக் காரணிகளாக, தவம், ஜெபம், இடைவிடாத தெய்வ நம்பிக்கை, குரு கடாட்சம் இவைகள் என்றும் துணை இருந்து வருவதோடு, சக்தி வாய்ந்த பாதுகாப்புக் கவசமாக நமக்கு உதவும்!
தீட்டுக்கள் ஏற்படும் போது மிகவும் சுலபமாக நீக்கிக் கொள்ள நம்மிடம், உலகநலனைக் கருத்தில் கொண்டு செய்த யாகப்பஸ்பம் சிறிது இருந்தாலே, செப்பு பாத்திரம் அல்லது செப்பு தம்ளர் ஒன்றில் சுத்த ஜலம் எடுத்துக்கொண்டு, அதில் சிறிது பஸ்பமிட்டு, சன்னமான தர்பையினால் அந்த நீரைத் தொட்டு, ஜெபம் செய்து கொண்டே உடல் எங்கும் தெளித்துக் கொண்டு, சிறிது நீர் அருந்தினால், அகால மரணம் அடைந்தவர்களையோ, மனிதர்கள், மிருகங்கள் ஆகியோர் எலும்புகளைத் தொட்டாலோ ஏற்படும் தீட்டுக்கள் உடனே விலகி விடும்.
திரு.ரசாக் அவர்கள் இப்போது பல குரல்களில் பேசியபடியே, தனது சுய கட்டுப்பாட்டையும் இழந்தது போல் காணப்பட்டார். பள்ளிக்கூடப் பாடங்களை ஆங்கிலத்தில் ஒப்புவிப்பதும், பெண்கள் குரலில் பேசுவதும் என வீட்டையே பயமுறுத்திக் கொண்டிருந்தார். கோவிந்தன் கம்பு ஊன்றியபடியே வந்து சுவாமியிடம் உள்ள நிலமையைக் கூறினான். அவனது உணர்ச்சியற்ற முகத்தில் பரிதாபம், கலக்கம், பயம் தெரிவதை நமது நாகராஜ் சுவாமி கண்டார்.
“கோவிந்தா இப்படிப்பட்ட சமயங்களில் மனம் தைரியத்தை இழந்து விடக்கூடாது. அவர் நல்ல நண்பர் தான். வா பார்த்து விட்டு வரலாம் ” எனப் பேசியபடியே புறப்பட்டுப் போனார். கையில் சிறிய தம்ளரில் ஜெபநீரும், அதனுள் தர்ப்பையும் இருந்தது. சுவாமியைக் கண்டதும் ஆட்டபாட்டம் எல்லாம் அடங்கி விட்டது. கண்களை இமைக்காமல் வைத்துக் கொண்டு, தர்பையால் நீரைத்தொட்டு அவர்மீது வீசி விட அமைதியாக அமர்ந்து கொண்டார். சிறிய அகல்விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அ தனையே பார்த்துக் கொண்டு இறைவனையே ஜெபம் செய்து சிந்திக்கத் சொல்லி விட்டு, தைரியம் கூறினார். மூன்று நாட்களில் அவர் தமது இயல்பு வாழ்க்கைக்கும் திரும்பினார்.
நன்றி! வணக்கம்!
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.