ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
14•11•2016,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(137) மனிதனே புனிதன் —
புரளியும் விபரீதமும்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுவாமி அவர்கள் அதிகாலையில் தியானம் முடித்துப் பலசரக்குக் கடையைத் திறந்தார். பொன்னம்மாள் பாட்டி காலை சூரிய தியானத்தில் ஆழ்ந்திருந்தார். சுவாமி அவர்களின் மூத்த சகோதரி திருமதி.விஜயலக்ஷ்மி தெண்டபாணி அவர்களின் குழந்தை யுவராஜ் வைசூரி கண்டு சுவாமி வீட்டில் படுத்திருந்தார். குழந்தை குளிப்பதற்கு மண்குடத்தில் மஞ்சள் கலந்த நீரும் வேப்பிலையும் வைக்கப்பட்டிருந்தது. நடை பெறப் போகும் சம்பவத்தை அறியாத குடும்பத்தினர் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
சுவாமியின் தகப்பனார் வயலில் அறுவடையான வைக்கோலை மாடுகளுக்கு சேமித்து வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது தம்பனவசியனின் குடும்பத்துப் பெண்கள் அலறிக்கொண்டு சுவாமி வீட்டிற்கு ஓடி வந்தனர்.
“உங்களுக்குப் பேரழிவு காலம் துவங்கி விட்டது. மில்லுக்காரன் பசங்க கொலைகாரக் கும்பலைக் கூட்டிவந்து விட்டான். இந்நேரம் வயலில் உம்புருஷனக் குத்திக் குடலை உருவி இருப்பார்கள். நீங்களாவது உயிர் பிழைக்க ஊரைவிட்டே ஓடிப்போயிருங்க” என்று முதலைக்கண்ணீர் வடித்தனர். சுவாமியின் குடும்பத்தினருக்கு ஒன்றும் புரிய வில்லை. ” நாங்கள் எதற்காக ஊரை விட்டு ஓட வேண்டும்? என்ன தவறு செய்து விட்டோம்?”என்று சுவாமியின் தாயார் கேள்விகள் கேட்டார்.
“பணக்காரன் வீட்டுப் பையன்களை அடித்து, மண்டையைப் பிளந்து விட்டுக் கேள்வியைக் பார் கேள்வியை! இன்னையோட உங்க குடும்பம் குளோஸ்” என்று குறிவிட்டு அனுதாபம் சொல்லிச் சிரித்தனர்.
சுவாமியின் தாயார்,” அவர்கள் தான் நெல்லை அரைத்து நொய்யாக்கி வீதியில் கொட்டிவிட்டார்கள். எங்களுக்குக் காரணமும் புரியவில்லை. அரிசி கேட்டு மில்லுக்குள் போன எங்கள் ஆட்களையும் அடித்துத் துன்புறுத்தி விட்டார்கள். அவர்களுக்கும் எங்களுக்கும் எந்தப் பகையும் இல்லை. ஏன் இப்படி எங்களுக்கு நடக்கிறது பகவானே”என்று அழுகை ஆரம்பித்து விட்டார். கல்வி அறிவற்ற கிராமப் பெண்கள் படும் அவஸ்த்தைக்கு ஓர் அளவு என்பதே கிடையாது. ஆறுதல் தேட அவர்களுக்குக் கிடைத்த ஒரே வழி, தான் அழுவது அல்லது மற்றவர்களை அழச்செய்து பார்ப்பது.
சுவாமி தனது நம்பிக்கை நிறைந்த ஆட்களை அழைத்துக் கொண்டு வயலுக்குப் புறப்பட்டார். “வயலில் வைக்கோலுக்கு நெருப்பு வைத்து விட்டு APM சாமி அவர்களை வெட்டிச் சாய்த்து விட்டார்கள்” என்று தம்பனவசியன் குடும்ப நபர் தெருவில் நின்று கத்திக் கொண்டிருந்தார். அவரை ‘வயித்துப் பெரியவன்’ என்று கிராமத்தில் அழைப்பார்கள். வீடு வீட்டிற்குக் கோள் சொல்லிக் கலகமூட்டுவது தான் அவரது வேலை. ஊரே அமளி துமளிப் பட்டது. சுவாமியை ஆளாக்கிய இஸ்லாம் குடும்பத்தினர் மற்றும் இதர கிராமத்துப் பெண்களும் சேர்ந்து சுவாமி குடும்பத்தினர் மற்றும் அம்மைகண்டு படுத்திருந்த குழந்தை யுவராஜையும் , நம்பிக்கை வாய்ந்த வீடுகளில் மறைத்து வைத்தனர்.
பாட்டி பொன்னம்மா அவர்கள் பலசரக்குக் கடையில் அமர்ந்து இருப்பதை எல்லோரும் மறந்து விட்டனர். ஒரு அம்பாஸடர் மோட்டார் கார் மற்றும் மூன்று ஆட்டோ ரிக்ஷாக்களில் உருட்டுக் கட்டை சகிதம் வாய்கூசும் வார்த்தைகளைக் கூறிக் கொண்டு, முரட்டு ஆட்கள் சுவாமி வீட்டின் முன்பு குவிந்து விட்டனர்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.