புயலுக்குப் பின்னே அமைதி!

246

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

30•07•2017,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(395) மனிதனே புனிதன் __
புயலுக்குப் பின்னே அமைதி!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° பயணக்குழுவினர் ஆன்மிக விஷயங்களைப் பகிர்ந்து கொண்டும், சுவையாகச் சமைத்த உணவைப் பகிர்ந்து உண்டு கொண்டும் பயணித்தனர்.
நாகபட்டினம் வந்த போது ஊரே சோகமயமாகக் காட்சி தந்தது. சிதிலங்கள் ஆங்காங்கே இடிந்த கட்டிடங்கள் எனப் பரிதாபமான தோற்றத்துடன் தென்பட்டன. தங்கும் விடுதியின் முன்ன அம்பாஸடர் வண்டி நின்றது. ஓட்டுனரை மணி என்ற பெயரில் அழைத்தனர். விடுதியின் சொந்தக்காரர் வந்து, “வணக்கம் அம்மா. போன மாதம் வீசிய புயலில் விடுதியின் மேற்கூரை காற்றில் பறந்து விட்டது. மன்னிக்க வேண்டும், எப்படித் தங்குவீர்கள்? “எனக் கேட்டார். அதற்கு தவயோகினி அம்மா அவர்கள், “ஐயா நாங்கள் உணவு சமைத்துப் சாப்பிடுபவர் கள். சமையல் செய்து சாப்பிட்டு விட்டுப் புறப்பட்டு விடுவோம். ஏதாவது இடம் தாருங்கள். வாடகை என்னவோ அதனைக் கொடுத்து விடுகிறோம் ” என்றார். அங்கு குளிக்க, குடிக்க நீர் இருந்தது வசதியாகிப் போனது. குளித்து, சமைத்து, உணவு சாப்பிட்டு விட்டு விடுதிக்குரிய கட்டணம் செலுத்தி விட்டு நீலாயதாட்சி அம்மன் ஆலயம் சென்றார்கள். இந்த ஆலயம் சித்தர் ஒருவரின் தெய்வீக உண்மைகளைத் தாங்கி இருப்பதாகக் கூறினார்கள். அது என்னவென்றால் செலவச் செழிப்புடன் வாழவேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் வந்து அநுக்கிரஹம் பெரும் இடம் என்றும் பேசிக் கொண்டார்கள். மனம் போல அவர்கள் வழிபாடுகள் நடத்திப் பிரார்த்தனை செய்து கொண்டார்கள். நாகப்பட்டினம் கடற்கரைப் பகுதியில் நின்று புயல், வெள்ளத்தில் இருந்து இங்குள்ள மக்களைக் காப்பாற்ற வேண்டும் ஆண்டவனே என்று வேண்டிக் கொண்டார்கள்.

கடற்கரையில் தள்ளு வண்டி யில் பலகாரம் சுடச்சுட செய்து கொண்டிருந்தார்கள். பெண்களுக்குச் சாப்பிட வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. “வாடா, வாடா” என்று கூவி விற்றுக் கொண்டிருந்தார் கள். ராசீபுரத்துத் தங்கையோ, “என்ன இது? கொஞ்சம் கூட மரியாதையில்லாமல். சாப்பிட வருபவர்களைப் பார்த்து வாடா , போடா என்று கூறுகிறார்கள். நாம வேறு நல்ல கடைக்குப் போய் சாப்பிடலாம் அக்கா ” என்று கூறவும், அதற்கு தவயோகினி அம்மா, “சாப்பிடலாம் சித்த சும்மா இரு. அவங்க யாரையாச்சும் அப்படிக் கூப்பிடலாம்” என்று கூறிவிட்டு வாகன ஓட்டியைக் கூப்பிட்டு, “அது என்ன தின்பண்டம்?” எனக் கேட்டுவரச் சொன்னார். அவரும் விசாரித்து விட்டு வந்து கூறினார். “வடையைப் போன்று காணப்படுகிறது. கடல் மீனைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதன் பெயரை ‘வாடா’ என்று கூறுகிறார்கள். ஆளுக்கு இரண்டு வாங்கி வரட்டுமா ” இது மணி ஓட்டுநர். உடனே தவயோகினி அம்மா அவர்கள், “அப்பா உனக்குப் புண்ணியமாகப் போகட்டும். உடனடியாக வந்து வண்டியை எடப்பா. இனிமேல் வெளியில் எங்கும் பட்சணங்கள் கேட்க மாட்டேன்” என்று கூறியபடியே ஜெபம் செய்யத் துவங்கினார். மணி ஓட்டுனர் சிரித்தபடியே வாகனத்தை ஓட்டினார். வரும் பயண வழியில் ஞான விளக்கங் களைக் கேட்டுக் கொண்டும், தத்துவ ஆத்ம விசாரம் செய்து கொண்டும் ஊர் திரும்பினார்கள்.

நமது சுவாமி அவர்கள் தனது குருநாதர் பாடும் ஞானப்பாடல் வரிகளில் சிலவற்றை தனது மனதினுள் எண்ணித் துதித்தார். “பந்தப்படும் மனிதனையும் உயர்நிலை பெற வைக்கிறாய். அந்தமாதி அற்றயிடம் நீயருளும் தருகிறாய். படைத்துக் காத்து அழித்து மறைக்கும் அருள் திறத்தைப் போற்றிட. அடைந்து மன ஆலயம் வலம் அடிக்குள்ளடி நடந்திட. குரு ஈஸ்வராலயத்தில் ஒன்று கூடுவோம். குருவருளாம் திரு வருளை நன்கு நாடுவோம்.” பயணக்குழு பழனிமலை வந்து சேர்ந்தது. திருவாவினன்குடி ஆலயம் சென்று விட்டு, பழனி மலை மீது சென்று போகநாதரை யும், நவபாஷாண முருகப் பெருமாளையும் கண்டு தியானத்தில் ஆழ்ந்து போனது. ஸ்ரீ போகநாதர் நவபாஷாண முருகன் விக்கிரகம் இரண்டினை வடிவமைத்தார். இதற்கு ஏராளமான மூலிகைகள் கோடைக்கானல் மலையடி வாரத்தில் நிறையக் கிடைக்கப் பெற்றன. அதனை அரைப்பதற்கு பாஷாணக் கட்டு உருவாவதற் கான கல்வம் தேவைப்படும். அதற்குண்டான பாறைக்கற்கள் கோடைக்கானலின் அடர்ந்த காடுகளில் உள்ள நீரூற்றுப் பாறைகளில் உருவாக்கப்பட்ட கல்வங்களே ரசவாதக் கட்டு களுக்கு மிகவும் சிறப்பானது. அங்கிருந்து போகநாதருக்குத் தேவையான கல்வங்களைச் சீடர்கள் கொணர்ந்தார்கள்.

அத்துடன் முக்கியமான செய்தி ஒன்றையும் கொணர்ந்தார்கள். அதாவது பத்தாவது பாஷாணம் ஒன்று கோடைக்கானல் மலை உச்சியில் விளைகின்றது என்பது தான் அது. போகநாதருக்கு நவபாஷாண முருகன் சிலைகள் இரட்டைப் பழனியில் வடித்த பிறகு, தசபாஷாண முருகனின் விக்ரஹம் ஒன்றைக் கோடைக் கானல் வனத்தில் வடித்துப் பூம்பாறை என்ற புனிதமான இடத்தில் பிரதிஷ்டை செய்தார். இதில் துருவசக்தியின் ரகசியம் அடங்கியுள்ளது.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

—- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button