ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
19•03•2017,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம் ,
பொள்ளாச்சி.
(262) மனிதனே புனிதன் —
பழிபாவம் பிறர்மேல் கூறாதே!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சோமனூர் அன்பர்கள் தங்களைத் தியான நண்பர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டார்கள். டைலர் கடையில் வார வழிபாடு நன்றாக நடந்து கொண்டிருந்தது. தெய்வீக சக்திகள் வளர்வதைத் தடை செய்ய தீயசக்திகள் தங்களின் சந்தர்பங்களை உருவாக்கிக் கொள்ளும் அல்லவா? இப்போதெல்லாம் தவத்திரு. வேணுகோபால சுவாமி மாதாந்திர சுற்றுப் பயணத்தில், முக்கிய ஊரான சோமனூரை நிரந்தரமாக்கிக் கொண்டார். காரணம் இங்கு தியானம் செய்யும் ஆர்வலர்கள் மிகவும் அதிகமாக இருந்ததுதான். மட்டுமல்லாது கிருஸ்தவ அன்பர்களும் வந்து தியானத்தில் கலந்து கொண்டு, அநேக கேள்விகள் கேட்டு விடையறிந்து தெளிவு பெற்றிருந்தனர். சோமனூரில் நெசவுத் தொழில் செய்து வந்த, ஜேடர்கள் எனப்படும் கன்னடியர்கள் அனைவருமே மதம் மாறி கிருஸ்தவ மதத்திற்குச் சென்றிருந்தனர். அதில் கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட கிருஸ்தவர்களில், தியான நண்பர்களின் வயதினை ஒத்த சிலர் தியானக் கூட்டங்களுக்கு வரத் துவங்கியிருந்தனர். இதனைப் பற்றி தியான நண்பர்கள் மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டும், அதனைப் பற்றி உரையாடிக் கொண்டும் இருப்பதை நமது நமது சுவாமி நேரில் பார்த்தும், கேட்டும் இருந்தார். இதனைப் பற்றி திரு.பாஸ்கரன் அவர்கள் நமது சுவாமியின் கருத்தைக் கேட்டார். அப்போது சுவாமி பெறுத்திருந்து பார்ப்பதே இதற்குரிய விடை என்று பதில் கூறினார்.
தியான நண்பர்களில் ஒருவர் விவசாயம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர். தான் பிரமச்சரிய வாழ்க்கை வாழ்ந்து, ஆன்ம சக்தி பெற்று பிறவாப் பெரு நிலையை அடையப் போவதாக அடிக்கடி கூறிக் கொண்டிருப்பது அவரது வழக்கம். நமது சுவாமி இல்லற தர்மம் தான் சிறந்தது என்பார். அவரோ ஒளவையாரை உதாரணம் காட்டுவார். தான் திருமணம் செய்யவில்லை என்பதற்காக தன்னுடன் பிறந்த சகோதரர்களையும் திருமணம் செய்ய விடாமல் போக்குக் காட்டி வந்தார். வீடு, தோட்டம் எல்லாம் இருந்தது. உடன் பிறந்தவர்களோ பாகப்பிரிவினை செய்தாலாவது, திருமணம் செய்ய வாய்ப்புக் கிடைக்கும் என எண்ணி, அண்ணனிடம் கேட்டனர். “சொத்தைக் கடைசி வரை பிரிக்கக் கூடாது. நீங்கள் திருமணம் செய்து கொண்டாலும், கூட்டுக் குடும்பம் தான். அவரவர் பாடுபட்டுக் தின்னுங்கள். அம்மா, அப்பா காலத்திற்குப் பிறகு வேண்டுமானாலும் பார்க்கலாம். சொத்தில் இருந்து சல்லிக்காசு தரமாட்டேன்” என்று தம்பி களிடம் பிறவாப் பெரு நிலையை அடைபவர் கண்டிப்புடன் கூறி விட்டார். அவரது தம்பிகள் நமது சுவாமி அவர்களைச் சந்தித்து, எங்களுக்கு ஏதாவது வழி சொல்லுங்கள் என்றனர். அவர்களது தகப்பனாருக்கோ, “மூத்தவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. மற்ற இரண்டு பையன்களுக்குத் திருமணம் செய்து பேரன், பேத்திகளைக் கண்டு விட்டுப் போய்ச் சேர்ந்து விடலாம்; என்னதான் செய்வது கடவுளே? எனது மூத்த மகனுக்கும், நான் கட்டிகிட்டு என்னப்பாடாய் படுத்தற, எம் பொஞ்சாதிக்கும் நல்ல புத்தி கொடுக்க மாட்டியா?” என ஆகாயத்தைப் பார்த்து கை எடுத்துக் கும்பிடுவார். அவரது மனைவி கொஞ்சம் கடுகடுப்பான குணம் கொண்டவர்.
வீட்டுக்காரர் காலையில் எழுந்தது முதல் இரவு தூக்கப் போவது வரை ஓய்வில்லாமல் விவசாய வேலைகள் செய்வது, மாடுகள் மேய்த்து வருவது, பால் கறந்து கடைகளுக்கு விற்று வருவது என வேலையில் பிழிந்து எடுப்பதில்தான், அவரது மனைவி தனது அன்பைப் காட்டுவார். அவரும் சங்கடம் சொல்லாமல், ” எல்லாம் எனது தலையெழுத்து” என்று தனது தலையில் தானே அடித்துக்கொண்டு சத்தமில்லாமல் அழுவார். அதுவும் தனது மனைவி பக்கத்தில் எங்காவது தென்படவில்லை என்றால் தான், தன்னையே நொந்து கொள்ளும் தைரியம் வந்து விடும். அவரது நிறம் நல்ல கருப்பு. மனைவி நல்ல நிறத்துடனும்,அழகுடனும் வாய்ந்ததை எண்ணி அந்தக் காலத்தில் பெருமைப் பட்டவர். மதியம் தான் சோறு கிடைக்கும்; அதுவரையில் பாடுபட வேண்டும். அவரும் அயராது உழைத்து வந்தார்.
மூத்தமகனுடன் தீவிர ஆலோசனை செய்துதான் எந்த முடிவையும் அந்த அம்மாள் எடுப்பது வழக்கம். “பையன்களுக்கு முதலில் சொத்தைப் பிரித்துக் கொடுத்தால் வரக்கூடிய மருமகள்களிடம் தங்களது அதிகாரம் செல்லுபடி யாகாமல் போனால் என்ன செய்வது? கூட்டுக் குடும்பம் என்றால் சொத்து, அதிகாரம் எல்லாம் நம்மிடம் இருக்கும் அம்மா. தம்பிகள் நமது சொல்படி கேட்டு நடப்பார்கள். சொத்து, கெளரவம் எல்லாம் வளரும்” என்பது பிரமச்சாரியின் தரப்பு வாதம். அந்த அம்மாள் ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டுப் பெண்களையும் அவமரியாதை செய்வது மற்றும் கெட்ட நடத்தை உள்ளவர்கள் என்று தூற்றுவதும், பழி போடுவதும் வழக்கம். அதில் அவர்களுக்கு அற்ப சந்தோஷம். உலகத்தில் தான் மட்டுமே சிறந்தவள் என்பது அசைக்கமுடியா நம்பிக்கை.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்! மதுரை M.மேகநாதன்
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.