ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
17•08•2016,
புதன்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(44) மனிதனே புனிதன் —
பலசரக்கு வியாபாரி.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மனிதனின் அறிவுக்கும் (அக நோக்கு), பார்வைக்கும்(புற நோக்கு) புலப்படாத புதிய சக்தியின் ஆற்றலை, அதன் புதிய வடிவத்தை, புதிய விழிப்பு நிலையை மெய்ஞானியர் எடுத்துக் கூறியுள்ளனர். அதனை எப்படி நாடுவது? எப்படித் தேடி உணருவது? என்பது பற்றிய ஞான விளக்கங்களையும் இயம்பினர்.
அழிவற்ற தன்மையுடைய அச்சக்தியின் ஆற்றலைக் கண்டு பிடித்து, அழிவற்றது ஆத்மசக்தி (பேரறிவின் ஆற்றல்) என்று போதித்தனர். மனித உடம்பில் உள்ள கோடிக்கணக்கான அணுக்களையே இயக்கும் பேராற்றல் சக்தியைப் போற்றி வணங்கினர்.
மனிதனின் மூளை கேந்திரத்தை இயக்குகின்றதே பேரறிவு அதனைப்பற்றியும், மூளையில் என்றும் இயங்கும் சிந்தனையின் சக்தி எங்கிருந்து வருகிறது என்பதையும் பற்றிக் கூறியதோடு, அதனை ஆக்கப்பூர்வமாக வளர்த்துக்கொள்ளத் தங்களின் குருநாதர் மூலமாக வழிவகைகள் பெற்றனர். குருநாதர் சுட்டிக் காட்டியதைக் கடைப்பிடித்து வெற்றியும் பெற்றனர்.
மெய்ஞானமானது மனிதனையே ஆராய்ந்து மனிதத் தத்துவத்தைப் புரியவைத்துக் கொண்டிருக்கும் ஞானியர்களின் ஆற்றல் அளவிடமுடியாதது. மனதினை இயக்கி ஆளக்கூடிய வல்லமை உடைய ஆற்றல் சக்தியைப் புரிந்து கொள்ள வைப்பதில் சற்குரு நாதரின் கடாட்சம் நம்மை முழுமையாக பெறச் செய்கிறது.
சக்தி(ஆற்றல்), பண்பு(கருணை), ஞானம்(அன்பு), அழகு(தைரியம்), அறிவு(செயல்), பக்தி(ஒழுக்கம்) ஆகிய நற்குணங்களைக் கடைப் பிடிக்கப்படும் போது தான் மனிதனின் வாழ்வு அர்த்தமுள்ளதாக மாறுகின்றது.
நமது சுவாமியின் வரலாறு படிக்கும் அன்பர்கள் ஒன்றைப் புரிந்து கொண்டிருக்க முடியும். தீமைகளின் பிடியில் இருந்து விடுபட, அனைத்தும் இறை சக்தியினுடையது என்ற உயரிய தத்துவத்தை எப்போதும் நமது சுவாமி அவர்கள் கடைப்பிடித்து வருவது நன்கு புலப்படும்!
சுவாமியின் வாழ்க்கையில் வேடிக்கை, விநோதங்களுக்கும் பஞ்சமில்லை! தந்தையாரின் பலசரக்குக் கடையை அவர் துணைவினார் பாப்பம்மாள் (நமது சுவாமியின் தாயார்) வசம் ஒப்படைத்து விட்டு வியாபாரம் செய்யத் தனது நண்பர்கள் இருவருடன் சென்று விட்டார். தாயார் சுவாமியை கடையை பார்க்கும் படி கூறிவிட்டு கிராம மகளிர் அரட்டை அரங்கத்திற்குச் சென்று விடுவார். சுருக்கமாகச் “கீமா” என்பது அதன் பெயர்.
இந்த சங்கத்தில் யார் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆக முடியாது. பணத்தேவை உள்ளவர்களுக்காக இது உருவானது. இங்கு பணம் உள்ள செம்படவப் பெண்கள் பணத்தைக கீமாவில் புரழ விட்டிருப்பார்கள். ஒரு நபர் நுறு ரூபாய் பெற்றால் வாரம் பத்து ரூபாய் என்று இருபது வாரங்களில் சுலபமாக செலுத்தி விடுவார்கள். இது ஒன்றும் பிரமாதம் கிடையாது. முக்கியமானது எந்த வீட்டில் என்ன நிகழ்ச்சி எப்படி? எப்போது நடந்தது? ஏன் நடந்தது? என்ற பிரபல ஆராய்ச்சி நடைபெறும்.
ஊர் சுற்றி செய்திகளைச் சேகரித்து வர இரண்டு பேர் எப்போதும் தயாராக இருப்பார்கள். ஒன்றுமே இல்லாத சாதாரண விஷயங்கள் அங்கு நார்நாராகக் கிழிக்கப்படும்.
சுவாமியின் தாயார் செல்வது செலவுக்குப்பணம் தேவைப் படுவதால் கந்து வட்டிக்கும் பணம் பெறப் போவார். வீட்டிற்குத் தேவையானதை தானே வாங்கி வந்து வீட்டுக்காரர் கொடுப்பவர், பணம் செலவுக்குத் கிடைக்காத குடும்பப் பெண்கள் கடன் வாங்கி செலவு செய்யவே உதவும் பரந்த நோக்கில் இது உருவானது. பணம் திருப்பித் தராதவர்கள் கடும் துன்பத்திற்கு ஆளாக வேண்டியிருப்பதால் பணப் பட்டு வாடாஒழுங்காக நடக்கும். இல்லா விட்டால் வீட்டுக்காரரிடம் கோள் சொல்ல தனிப் படை தயாராக இருக்கும். ஆன்மிக பாடத்தில் இது எதற்கு என்ற எண்ணம் வரும். ஆனால் குடும்ப முன்னேற்றங்கள் எப்படியெல்லாம் தடை செய்யப்
படும் சூழல் உருவாக்கப் படுகிறது என்பதைச் சுட்டிக் காட்டவே இதையும் எழுதுகிறேன். வருமானம் கையில் தங்காமல் இருப்பதுதான் காரணம் என்று பழிபோட்டு விடுவார்கள். போதிய கல்வி அறிவு இல்லாத இடங்களில் பெற்றோர் வளர்ப்பும் அக்கரையில்லை என்றால் குழந்தைகள் கதி என்னவாகும்?
இப்போது நமது பரிகார ஸ்தலத்தில் அன்னதானம் கொடுக்கும் இடத்தில் பரிமாறிக் கொண்டு இருக்கும் திரு.செல்லதுரை என்பவரை பலரும் அறிவர். இவர் சிறுவனாக இருந்த போது சுவாமி அவர்களின் தெய்வீகப் பேச்சால் கவரப்பட்டவர். நமது கோயில் இருக்கும் இடத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர். இப்படி அநேகம் பேர் பார்த்து வருவார்கள். மளிகை கடையில் சுவாமி இருக்க, திரு. அமீர்அண்ணன் என்பவர் பணியில் இருந்தார். இன்று அமீர்அண்ணன் பிள்ளைகள் சுவாமியிடம் பாடம் கேட்டு மனோவியாதி நீக்கும் வல்லமை பெற்று சிறந்த செல்வச் செழிப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வேடிக்டையாகப் பேசுவதில் திரு.அமீர்அண்ணன் வல்லவர்.
தெருவில் எங்கு சண்டை நடந்தாலும் அவர் அங்கு ஆஜராகி விடுவார்.
எல்லோரிடமும் யார் அடி வாங்கிக் கொண்டு இருக்கிறாரோ, அவரைத் திரு.அமீர்அண்ணனும் போய் தர்மஅடி கொடுத்து விட்டு சந்தோஷமாக, ஒரு வீரனைப் போல வருவார். சுவாமி அவர்கள் இப்படிச் செய்வது தவறு என்று எடுத்துச் சொல்லியும் அவர் கேட்பதாகவே இல்லை! ஒரு நாள் திரு.செல்லதுரை சுவாமி அவர்களைப் பார்க்க வந்திருந்தார். திண்டுக்கல்லில் இருந்து சூட்கேஸ் தயாரிக்கும் திரு.ஜியாவுதீன் அவர்களும் வந்திருந்தார். அவருக்கு நமது சுவாமி அவர்களிடம் தியானம் செய்வது பற்றிக் கேட்க வந்திருந்தார். திரு.அமீர் அண்ணன் பரபரப்பானார். தெருவில் சச்சரவு ஆரம்பமாகி இருக்க உடனே சண்டைக்குப் புறப்பட்டார். திரு.ஜியாவுதீன்,”ஏய் வேணாமப்பா” என்று சொல்லும் முன் ஓடிப்போனார்.
திரு.செல்லதுரை,”இவருக்கு இப்படிச் சொன்னால் புரியாது. நானும் அமீரண்ணன் கூடப் போய் வருகிறேன்” என்று போனார். கைகலப்பு ஆரம்பமாகி யாரோ ஒரு அப்பாவி அடிபட்டும் கொண்டிருக்கும் திரு. அமீரண்ணனும் தன்பங்கைச் செலுத்திக் கொண்டிருந்தார். கூட்டம் அலை மோதிக் கொண்டும், எங்கும் கூச்சலும், குழப்பமுமாக இருக்கத், திரு. அமீர் அண்ணன் முதுகைத் தேய்த்தபடியே , அலறிக் கொண்டு கடைக்குள் ஓடி வந்தார். எப்பவும் அவர் சட்டை அணியாமல்தான் இருப்பார். முதுகு வீங்கிப்போய் வலி தாளாது அழுது கொண்டிருந்தார். திரு.செல்லதுரை மெதுவாக அமீரண்ணனிடம் என்ன நடந்தது? என்று கேட்டார். அவர் அழுது கொண்டே முதுகைக் காட்டி, “எந்தச் சைத்தானோ என்னை வறுத்து எடுத்து விட்டது. அடித்துக் குப்புறத் தள்ளி என்று முதுகிலும் ஏறி மிதித்து விட்டுப் போயிருச்சு” என்று அழுதார். திரு.ஜியாவுதீனும்,”நீங்கள் செய்தது முறையற்ற காரியம். சண்டையை விலக்கிச் சமாதானம் செய்யவா போனீர்கள்? ஆண்டவன் இப்படி ஏதாவது தண்டனையைத் தரும்போது மனம் திருந்த வேண்டும்” என்றார். சிலவுக்கும் பணம் தந்து வீட்டிற்கு அமீரண்ணனை அனுப்பி விட்டு, திரு செல்லதுரையை சுவாமி கண்டித்தார். “உண்மையை உணர்த்த இதுவல்ல வழி!” என்றார்.
மறுநாள் திரு.அமீரண்ணனை மருத்துவ மனைக்குக் கொண்டு போவதாகச் செய்தி வர திரு.செல்லதுரை, திரு.ஜியாவுதீன் இருவரும் சென்று அவரைப் பார்த்து விட்டு வந்து வெகுநேரம் சிரித்துக் கொண்டிருந்தனர். சுவாமி நலம் விசாரித்தார். வாய் விட்டு எப்போதும் சிரிக்கும் அவர்கள், “சுவாமி நீங்கள் பணம் தரவும் குழந்தைகளுடன் சண்டைப்படம் பார்த்திருக்கிறார். சுவற்றுப் பக்கம் தலையை வைத்து இரவு தூங்கும் போது, கனவு கண்டு அவர் மகன் தலையில் உதைத்து விட முன்புறம் நீண்டிருந்த பற்கள் நான்கும் உதிர்ந்து விட்டன. மருத்துவ சிகிச்சை நடந்து கொண்டு இருக்கிறது” என்றனர். அவர் நலமடைய சுவாமி அவர்கள் பிரார்த்தனை செய்தார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை! M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.