ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
08•04•2017,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(282) மனிதனே புனிதன் —
பலசரக்குக்கடை மூடுவிழா.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருநெல்வேலியில் இருந்து அம்பா சமுத்திரம் அருகேயுள்ள பொட்டல்புதூரைச் சேர்ந்தவர் திரு.காஜா மைதீன் அவர்கள். அவரது அண்ணன் அவர்கள் திருவள்ளுவர் திடல் அருகே உள்ள பெரிய சந்தை மார்க்கெட் கட்டிடத்தில், லீகோ அடுப்புக்கரி வியாபாரம் செய்து வந்தார். கிராமத்துப் பலசரக்குக்கடையை வாடகைக்கு விடுவதாக, மண்ணெண்ணெய் வியாபாரம் செய்து வந்த திரு.அபீபுல்லா என்பவரிடம், சுவாமியின் தகப்பனார் கூறியிருந்தார். அவர் பொட்டல்புதூரைச் சேர்ந்த திரு.காஜா அவர்களை அழைத்து வந்து வாடகை குறைவாகப் பேசிக் கடை சாவியைப் பெற்றுப் போனார்கள். ஒரு குறிப்பிட்ட நாளில் கடை வியாபாரம் களை கட்டி விட்டது. அம்பா சமுத்திரம் ஏரியாவைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களில் வசதி குறைவானவர்கள் ஜவுளி வியாபாரிகள் ஆகி கைப்பைகளில் பளபளப்பான புடவைகள், கடிகாரங்கள் இன்னும் அநேக பொருட்களை வைத்துக்கொண்டு, வெளிநாட்டில் இருந்து வந்த பொருட்கள் என்று வீடு வீடாகும் போய் விற்று வருவதில், வயிற்றுப் பிழைப்பை நடத்தி வந்தனர். இவர்கள் கும்பல் கும்பலாக ஒவ்வொரு கிராமமாகச் சென்று, மரங்களின் கீழே கூடாரம் அமைத்துத் தங்கி வியாபாரம் பார்த்து விட்டு அடுத்த ஊர் செல்வார்கள். அப்படி வந்தவர்களில் சுமார் ஐம்பது குடும்பத்தினர் கிராமத்தில் நந்தவனம் புளியந் தோப்பில் தங்கியிருந்தனர்.
ஆழியாறு நீர் வசதியினால் , கிராமமும் இஸ்லாமியர்கள் அதிகமாக வசித்து வந்ததால் அவர்கள் நிரந்தரமாகத் தங்கி, மெல்ல மெல்ல கிராம வீடுகளை வாடகைக்கும் பிடித்து வாழ்ந்தனர். பின்னாட்களில் சிறுகச் சிறுக கிராம மக்களில் பல குடும்பங்கள், பிழைப்பைத் தேடி திருப்பூர் நகரம் சென்று விட்டதால் வீடுகளைக் குறைந்த விலைக்கு வாங்கி வாழத் துவங்கினர். இவர்கள் விற்பனை செய்யும் பொருட்களை ‘பக்'”என்று கூறுவார்கள். இருநூறு ரூபாய் கடிகாரத்தை இரண்டாயிரம் ரூபாயிக்கு விற்று விடும் பேச்சுத் திறமை உள்ளவர்களாக விளங்கி வந்தனர். பள்ளி செல்ல இஷ்டப்படாமல் இருந்த பிள்ளைகள், ஆழியாற்றில் வாகனங்களைக் கழுவி சுத்தம் செய்யும் பணிகளைச் செய்து வருவாய் பார்த்தனர். பொட்டல் புதூர் பகுதியைச் சேர்ந்த சில துணி வியாபாரிகள், மொத்தமாகக் கொள்முதல் செய்து, அவர்களுடன் வந்திருந்த சில்லரை வியாபாரிகள் துணிகளை் கடன் பெற்று, விற்று லாபம் சம்பாதித்துக் கடன்களை திருப்பிச் செலுத்தி வந்தனர். கிராமத்தின் உள்ளூர் குடிமக்கள் சிலர் இந்த வியாபாரம் லாபமானதாக இருப்பதாக எண்ணி, அவர்களுக்குப் போட்டியாக வியாபாரம் துவங்கினர். கோயமுத்தூர் சென்று வட இந்திய வியாபாரிகள் கடைகளில் ‘பக்’ பொருட்கள் வாங்கி வந்து வியாபாரிகளாக மாறி விட்டனர். ஆஹா…இந்த வியாபாரத்தில் இத்தனை லாபமா? என்று பேசிக் கொண்டனர். வெளிநாட்டுத் துணிகள், பொருள்கள் என்று செய்யும் வியாபாரத்தில், இவர்கள் பற்பல ஊர்களில் தங்கி லாபம் பார்ப்பார்கள். உண்மை தெரிய வரும் போது அடுத்த ஊர்களில் கடை போடுவார்கள்.
ஆனால் உள்ளூரில் நிலையாக வாழ்ந்து வருபவர்களை சுலபமாக அடையாளம் கண்டு பிடித்து விடுவார்கள். அநேக உள்ளூர் வாசிகள் லாபம் ஒன்றே குறிக்கோள் என வாழ்ந்து, வியாபாரத் தந்திரம் தெரியாத காரணத்தால் உள்ள முதலுக்கும் மோசம் வந்து கடன்காரர்களாக மாறி விட்டு பழைய தங்கள் தொழிலுக்கே திரும்பப் போய்ச் சேர்ந்தார்கள். வீண் ஆசைகளும், ஆடம்பரத்தை விரும்பும் எண்ணங்களும், பிறரின் நம்பிக்கையை் குலைப்பதும் , கொள்முதல் இருக்கிறது என்ற நம்பிக்கையில் வீண் சிலவினங்களும் வியாபாரத்தை பாதாளத்திற்குக் கொண்டு சென்றதை வெகு நாட்கள் சென்று புரிய வந்தபோது புதிய வியாபாரிகள் நிலை குலைந்து போனார்கள். வெளியூர் வியாபாரிகளைப் பார்த்துப் பொறாமை கொண்டார்கள். அது இன்னும் மோசமான பின் விளைவுகளை அவர்களுக்கு ஏற்படுத்தி விட்டது.
சுவாமியின் கடையை எடுத்து நடத்திய பொட்டல் புதூர்காரர் இறை நம்பிக்கை வாய்ந்த நல்ல ஆத்மாக வாழ்ந்தார். ஆனால் உள்ளூரில் அவரது நம்பிக்கை யைப் பெற்றுவிட்ட சிலர், கடனாகப் பொருளைத் பெற்றுப் பணத்தைத் திருப்பிக் கொடுக்காத மோசடியால் அவர் மனநிம்மதியை இழந்தார். அதே கவலை களுடன் சென்று வாகன விபத்தில் ஒரு காலை இழந்து கட்டைக் கால் பொருத்தி வாழ்ந்தார். உள்ளூர் ஜனங்களின் அடாவடித் தந்ததால் தனது கடையை கேரளா அருகில் உள்ள மீனாட்சி புரத்தில் பெரிய பல சரக்குக் கடையைத் துவங்கினார். மீனாட்சிபுரத்தில் இருக்கும் கனரா வங்கிக்குத் தகப்பனாருடன் சென்றிருந்த நமது சுவாமி அவர் கடைக்குச் சென்று நலம் விசாரித்து விட்டு வந்தார். கொஞ்சகாலத்தலேயே அவரது உடன் பிறந்தவர்கள் அவரை ஏமாற்றிப் பணத்தை எடுத்துக் கொண்டனர். குழந்தை பாக்கியமற்ற அவர் தனது சொந்த ஊருக்குச் சென்று, அங்கேயே மரணம் அடைந்தார்.
(இன்னும்)
— ஈஸ்வர குமாரரின் தொண்டன் மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.