நெருப்பினுள் ஓர் அனுபவம்.

0 241

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

15•07•2016,
வெள்ளிக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(12) மனிதனே புனிதன் – நெருப்பினுள் ஓர் அனுபவம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நமது சுவாமி ஆரம்பப் பள்ளியில் படிக்கும் போது பிள்ளையார் கோயில் அருகே வடக்குப் புறமாக மண் சுவர் வைதுதுக் கட்டிய கூரை வீட்டில், ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை ஒரேயொரு ஆசிரியர் பாடம் சொல்லி வைப்பார்.கிராம மக்கள் தங்கள் குழந்தைகளாவது படிக்கட்டும் என்ற எண்ணத்தில் துவங்கி நடந்து வந்தது.

பொன்னம்மாள் பாட்டி மட்டும் தனியே ஒரு கட்டிடத்தில் தவமிருந்து வந்தார். சுவாமி குழந்தையாக இருந்த போது சற்குரு நாதர் வந்து போன வீடு. நமது சுவாமி அவர்களும் பாட்டி தியானத்தில் மூழ்கிய பிறகு
அவரின் அருகே தியானத்தில் உட்காருவார்.

பள்ளிக்குச் சொற்பக் குழந்தைகள் வருவார்கள். ஆசிரியர் திரு.காளிமுத்து அவர்கள், படிக்கும் பிள்ளைகள் மீது மிகுந்த அக்கறை உள்ளவர்.

வீடுவீடாகச் சென்று குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்து வந்து பாடம் போதிக்கும் மகா உத்தமர். சுவாமி பள்ளிக்கு செல்லாமல் தியானத்தில் இருக்கும் போது,
சந்தடி செய்யாமல் வந்து பிடித்து இழுத்துக் கொண்டு போவார். பள்ளி வரைக்கும் விளாரினால் அடித்து ஒழுங்காக படிக்க வரனும் தெரியுமா? என்று சொல்லியபடியே சுளீர் சுளீரென்று வீசுவார். தவறு செய்து விட்டோம் அதனால் ஆசிரியர் கண்டிக்கின்றார் என்று ஏதும் பேசாமல்,அழுகை இல்லாமல் மெளனமாகப் பின் செல்வார்.”நாம் படித்தால் அறிவு வளரும்.ஏன் இப்படி இந்த ஊரில் குழந்தைகள் இருக்கின்றார்கள்?” என்ற ஆதங்கத்தில் வேறு பள்ளிக்குச் சென்று விட்டார்.
நல்ல ஆசானை இழந்த வருத்தம் சுவாமி அவர்களுக்கும் இருந்தது. ஒழுங்காகப் பள்ளி செல்லும் மாணவனாக நடந்து கொண்டார்.

அப்போது மற்றொரு ஆசிரியர் அவர் பெயரும் காளிமுத்து தான். திருமணம் ஆகாதவர். படிப்பு சொல்லி வைப்பதில் கெட்டிக்காரர். கதைகள் மூலமாகவும், சங்கீதம் கற்றவரானதால் பாடல்கள் வழியே பாடம் சொல்வதால் பள்ளிக்குக் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்தது. பிள்ளைகளின் கல்வி கற்கும் ஆர்வம் அதிகரித்தது.

சுவாமி அவர்கள் தகப்பனார் மாலை நேரத்தில் டியூசன் வகுப்பு எடுத்து பாடம் போதிக்க ஏற்பாடு செய்தார்.அதற்குக் காரணம் இவர் தியானத்தை மாற்றவே இந்த ஏற்பாடு. நமது சுவாமி இரவு நேரம் தியானம் செய்யும் வழக்கப்படி இருந்தாலும் வெளியே செய்து வரும் தியானத்தில் கிடைக்கும் அனுபவ ஏக்கம் உண்டானது.

அவருக்கும் பிறகு திரு.தங்கவேல் ஆசிரியர் அவர்கள்
உடலில் சிறிது ஊனமுற்றவர் வந்து பாடம் போதித்தார். அவருக்கு உடல் நலமின்மையால் பாடம் சொல்லிய நேரம் போக விநாயகர் கோயிலின் அரசமரத்தின் நிழலில் படுத்துக் கொள்வார். அவரிடம் எல்லாப் பிள்ளைகளுக்கும் பயம் கலந்த மரியாதை. காரணம் படிக்காவிட்டால் உள்ங்கை பழுத்து விடும். பெற்றவர்களும் அடியாத குழந்தை படிக்காது என்று எண்ணுவதால் கட்டாயமாகப் படித்து வந்தனர்.நமது சுவாமியும் விதிவிலக்கல்ல!

ஒரு நாள் மதிய உணவு குழந்தைகளுக்குச் சமைத்துத் தரும் ஆயா வராததால் வேலன் என்று அழைக்கப்படும் வேலுச்சாமி சமையல் தெரிந்த நபர் என்பதால் ஆசிரியர் செய்யச் சொன்னார். அன்று மதியம் கோதுமை உப்புமா. விறகு அடுப்பை எரிய விட்டு வாணலியில் எண்ணெய் ஊற்றி வைத்தவன் விளையாட ஓடியவன் காரியத்தை மறந்து போனான்.

வாணலியில் எண்ணெய் தீப்பற்றிக் கொண்டு மளமளவென கூரை எரிய ஆரம்பித்தது விட்டது.ஊனமுற்ற ஆசிரியர் எழுந்து வர இயலவில்லை. பள்ளிக்குள் சிக்கித் தவித்த குழந்தைகளைப் பெரிய பையன்கள் காப்பாற்றினர். நமது சுவாமி மட்டுமே அமைதியாக ஓய்வு கிடைத்த காரணத்தால் தியானத்தில் ஆழ்ந்து போனவருக்கு நெருப்பு பள்ளியைப் பற்றிய உணர்வு இன்றி அமர்ந்திருந்தார்.

நாராஜனைக் காணோம். பள்ளிக்கூடத்தினுள் சிக்கிக் கொண்டான் என்று குல்மாமுகமது, அப்துல் முத்தலீப் என்ற மகமதியச் சிறுவர்கள் சுவாமி மீது மிகுந்த நட்புக் கொண்டவர்கள் நெருப்பில் நுழைய முயன்றனர்.

ஊரே திரண்டு விட்டது. ராணுவப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற கந்தசாமி என்பவரின் இளைய மகன் துணிந்து நெருப்பினுள் பாய்ந்து சப்பணமிட்டு அமர்ந்து இருந்த நிலையிலேயே தூக்கி எடுத்து வந்து விட்டார். அவருக்கு உடலில் நெருப்பு சுட்ட காயங்கள். சுவாமி கண்விழித்து எழுந்து பள்ளிக்கூடம் எப்படி தீப்பிடித்தது என்று கேட்டதும் அன்பின் மிகுதியால் அவரை அடித்த நண்பர்களின் சந்தோஷக் கூச்சல் எல்லோரையும் பரவசம் ஆக்கியது.

வேலனின் தகப்பனார் தச்சுத் தொழில் புரிந்து வந்தவர்.ங கல்கத்தா நகரைச் சேர்ந்தவர். காளி பக்தி மிகவும் உள்ளவர். தமிழகப் பெண்ணை மணந்தவர். அவரை மோகன்ஜீ என்று அழைப்பார்கள்.எல்லோரிடமும் அன்பாகப் பழகுவார். மனிதர்களை அவன் இவன் என்றும், மிருகங்களை அவர் இவர் என்று மரியாதையாக அழைப்பார். காளியின் பூரண அருள் பெற்ற அவர் சுவாமியின் தலையில் கை வைத்து மந்திரம் ஜெபித்து ஆசீர்வாதம் செய்தார

ஆசிரியர், பாட்டி, அம்மா, அப்பா,ஊர் மக்களும் கடவுளுக்கு நன்றி கூறினார்கள். புதிய கட்டிடம் வரும் வரை அரச மரத்தின் கீழே வகுப்பு நடைபெற்றது. பாட்டி சுவாமிகளிடம் அக்னி தோஷத்தில் இருந்து மீண்டு வந்ததாகக் கூறினார்.

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button