ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
17•07•2016,
ஞாயிற்றுக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(14) மனிதனே புனிதன் — நீரினுள் ஓர் அனுபவம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பொள்ளாச்சி முனிசிபல் பள்ளியில் இருந்து மாலை நேரம் வீடு வந்ததும் ஆழியாற்றின் கரைக்குச் சென்று அங்குள்ள அரச மரத்தின் கீழே அமர்ந்திருப்பார். நீராடச் செல்லும் போது நீரினுள் இயற்கையான லிங்க வடிவப் பாறையைக் காண நேரிட்டது. அன்று முதல் ஜெபம் செய்யத் துவங்கி விட்டார். ஈஸ்வர ஜெப நேரமும் கூடிக் கொண்டே போனது. அதனால் அவருக்கு மற்ற காரியங்களுக்கு நேரம் கிடைக்காததால், வீட்டுப் பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளானார்.
அதனைச் சரிபடுத்தப் பணிகள் யாவும் முடிந்து இரவு வீட்டார் உறங்கிய பிறகு, நடுநிசியில் எழுந்து சென்று ஆற்றில் நீராடுவதும், ஜெபம் செய்வதும் தொடர்ந்தது. மழை வெள்ளம் ஏற்படும் காலம் தவிர மற்ற நாட்களில் இரவு நீராட்டமும், ஜெபம் செய்வதும் மிகவும் பிடித்துப் போன காரியமாக அமைந்தது. பாட்டி அவர்கள் ஆரம்பத்தில் இதனைக் கண்டு கொள்ள வில்லை. மூன்று வருட காலமாக எந்தவிதத் தடங்கல்களும் இன்றிச் காரியம நடைபெற்றது. பெளர்ணமி நிலவொளியில் குளிப்பது பரவசம் உண்டாக்கிற்று.
ஒர் நாள் வயல் அறுவடை சமயம் காவலுக்குச் சென்றவர் இதனைக் கண்டு பயந்து இது அசாத்தியம் என்று மனதில் பட்டு பாட்டியிடம் கூறி விட்டார்.
பாட்டி அவர்களின் எச்சரிக்கையும் பலனும்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பொன்னம்மா பாட்டி நமது சுவாமிகளைத் தனியிடத்திற்கு அழைத்துப் போய், “அப்பா! இரவில் தான் தேவதைகள் இழந்த சக்தியைத் திரும்பப் பெறுவதற்கு அவர்கள் வழியில் முயற்சி செய்து கொண்டிருப்பார்கள். மக்களுக்கு அவர்கள் நன்மை செய்வதற்காக அப்படிச் செய்து வருகிறார்கள். நம்மைப் போன்றவர்கள் அவர்களுக்கு உணவுகள் கொடுத்து ஆதரவு தர வேண்டும். அகால நேரங்களில் பாதுகாப்பாக தவம், ஜெபம், யோகம், தியானம் எது நமக்கு உதவியாக இருக்குமோ அதைத் தேர்ந்து செய்பவனே புத்தி உடையவன். அவனுக்கு உள்ள தேவைகளைப் பெறுவதே இந்த வழியில் தான். நமது சக்திகளைப் பிறர் உறிஞ்சி எடுத்துக் கொள்ள வாசலைத் திறக்காதே! இது உனக்குத் தெரியும். புரிந்து கொள்” என்று எச்சரித்தார்கள்.
எதையும் அனுபவமாக அறிந்து கொள்ளும் ஆர்வத்தினால், பெரியவர்கள் சொல்லும் அனுபவ உண்மைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அன்று புரியாததால், எச்சரிக்கையைப் பொருட்படுத்த வில்லை.
இருப்பினும் ஓர் அச்ச உணர்வு மனதில் உண்டாயிற்று. நமது சுவாமி அவர்கள் அங்கு நடுநிசியில் ஆற்றின் அருகே சென்ற போது, மனதின் எண்ண உணர்வுகளுக்கு ஒப்ப ஒளிவடிவ பந்துகள் போன்ற அமானுஷ்ய உருவங்கள் அநேகம் தென்படலாயிற்று.
விழித்துக் கொண்ட அகவுணர்வு மனதின் கட்டளையாக “திரும்பிச் சென்று விடு” என்றது.
எச்சரிக்கை நிமித்தம் திரும்பி வந்தவுடன் வாசலில் பாட்டி வரவேற்க உட்கார்ந்து இருந்தார்.
காய்ச்சல் கண்டு துவண்டு போனவருக்கு பாட்டி உதவிகள் செய்தார்.
” இவனது குரு நாதர் இவனை ஆட்கொள்ளும் காலம் வரையிலும் தனது உடலில் உயிர் தங்கி இருக்க வேண்டும்” என்று தனக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டார்.
“இப்படிப்பட்ட பூதகணங்களைக் கட்டி மேய்க்க வைத்து விட்டாயே அப்பா இறைவா” என
அடிக்கடி கூறிக் கொள்வார்.
மூத்தோர் வார்த்தையும் நலம் தரும்:
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நீரினுள் நின்று ஜெபம் செய்வது சுவாமிகளை வசீகரித்து விட்டதால் அச்செயல் மீண்டும் தொடர்ந்தது. முன்பு போல் பெளர்ணமி நிலவின் ஒளியில் ஜெபம் செய்து கொண்டு இருந்து விட்டு, நீரினுள் மூழ்கி சிவலிங்க வடிவப் பாறையைத் தொட்டார். அப்போது தன்னருகே இன்னொரு உருவமும் நிற்பதைப் போன்ற உணர்வு உண்டாயிற்று. பிடரியைப் பிடித்துத் தனது தலையைப் பாறையில் மோதியது மட்டும் நன்றாக நினைவு கூறுகிறார் சுவாமி.
வெண்மை நிறவடிவு உருவம் நிற்பது கண்டு, வலி தாளாது வேகமாக நீந்தி ஆற்றின் கரையில் ஏறி நினைவு தப்பி அப்படியே மயங்கி விழுந்து விட்டார். அதிகாலையில் ஊர்மக்கள் கண்டு தூக்கிப்போய்
வீடு சேர்த்தனர். காலையில் மயக்கம் தெளிந்தது. ஒரு மாத காலம் பிரமை பிடித்தது போன்று உன்மத்தனாய் இருந்து பிறகு தெளிவு பெற்றார். தெளிவு பெற்ற நேரம் மத்தியானம் உச்சி வேளை.
சித்தமும் மனமும் தெளிவு பெற்ற பிறகு, பெளர்ணமி நிலவொளியில் அன்று தன்னை அடித்தவனைப் பிடித்து விட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. பாட்டியும் அகால நேரங்களில் குளிக்கப் போகாமல், பகலில் சென்று பாதுகாப்பாகத் திரும்பி வந்து விடு என்றார். ஒரு நாள் பள்ளி விடுமுறை தினம் பகல் பொழுதில் நீராடச் சென்றார். நீரினுள் இருக்கும் சுயம்பு லிங்கத்தைக் காண ஆவலுடன் நீரினுள் பாய அப்போது மார்பில் பலத்த அடி ஒன்று விழுந்தது.
இக் காலங்களில் சுவாமி அவர்களுக்கு அசரீரியாகக் காதில் குரல்கள் கேட்கத் துவங்கி இருந்தது. ஆற்றின் கரையின் அருகே உள்ள அரச மரத்தின் கீழே ஏகாந்தமாக நிச்சிந்தனையாக இருந்து வருவது வழக்கம்.
அன்றும் மரத்தின் நிழலில் உள்ள நீண்ட சதுரக் கல்லின் மீது அமர்ந்து இருந்த போது “நில்! நில்! திரும்பிச் சென்று விடு” என்ற அசரீரி ஒலி கேட்டு இருக்கிறார். ஆனால் சிவதரிசன ஆவலினால் கவனம் அதில் செல்ல வில்லை.
மார்பில் அடி விழுந்த உடனே அடித்தவன் அவனாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தில் “தைரியம் இருந்தால் நேரில் வா” என சப்தமிட்டார்.
(மனிதனே புனிதன் வரலாறு தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஈஸ்வர குமாரரின் தொண்டன்
மதுரை மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.