நமது சுவாமி பவானியில்..

132

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

29•03•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(272) மனிதனே புனிதன் —
நமது சுவாமி பவானியில்..
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
” அம்மா நான் பவானி சென்று ஞானகுருவை சந்தித்து வரலாம் என்று இருக்கிறேன். உங்கள் ஆலோசனை எனக்கு வேண்டும்” என்று ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்கள் கூறினார். பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில், வக்கீல் ஐயாவின் துணைவியார் தவ யோகினி திருமதி.சுந்தரம்மாள் அவர்கள் முன்பு அமர்ந்து இருந்தார். தமது மூத்தமகன் திரு.சண்முக சுந்தரம் அவர்கள் குடும்பத்தினருடன் வீட்டின் கீழ்ப்பகுதியில் தவயோகினி அம்மா அவர்கள் தங்கியிருந்தார். மாடியில் அவரது இளைய மகன் திரு. டாக்டர் ராஜ சேகரன் அவர்கள் குடியிருந்தார். ஓர் அன்பான குடும்பத்தினர்ளாக அவர்கள் அனைவருமே வாழ்ந்து வந்தனர். தவயோகினி அம்மா அவர்களின் மருமகள்கள் இருவருமே அவரை நல்ல படியாகக் கவனித்து உதவிகள் செய்து வந்தனர். திரு.மனோரஞ்சிதம் சண்முகசுந்தரம் அவர்கள் தான் மூத்த மருமகள். வந்தாரை வரவேற்று , இன்முகம் காட்டி, அனபுடன் உபசரித்துத் தனது இல்லறக் கடமைகளை செவ்வனே ஆற்றும் ஒரு தெய்வீகப் பெண்மணி அவர். தியானத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, தவத்திரு. வேணுகோபால சுவாமி அவர்களிடம் தீஷையும் பெற்றவர். தியானத்தில் தெய்வீகத் தொடர்பைப் பெற்று, ஞானப் பாடங்கள் வழங்கி, வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருந்த மாதரசி அவர்கள். அன்ன ஆகாரம் தந்து பசிப்பிணி நீக்கும் அவர்கள் அன்று, அந்த வீட்டு மாப்பிள்ளை திரு. ராமசாமி அண்ணார் அவர்கள் வந்திருந்ததால் அவர்களை உபசரித்துக் கொண்டிருந்தார்.

திருமதி.வேதவல்லி ராஜசேகரன் அவர்களும் தியானத்தில் இருந்து வந்தார். அவர்களுக்கு உள்ள மருத்துவ மனையில் புற்றிடம் கொண்ட கணபதி கோயில் ஒன்று பரிவார தேவதைகளுடன் அமைத்து இருந்தனர். பூஜை சேவைகள் மற்றும் திருக்கோயில் பணிகள் அனைத்தும் நல்ல படியாக நடத்தி வந்தார். வக்கீல் ஐயா குடும்பம் என்றால் அனைவருடைய மதிப்புக்கும், மரியாதைக்கும் பேர் பெற்ற குடும்பங்களாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். தவயோகினி அம்மா அவர்கள் நமது சுவாமி அவர்களிடம், ” மகனே நாகராஜா நீ பவானி சென்றால் மறக்காமல் கூடுதுறை சிவனை வழிபட்டு வாப்பா. தியான சங்கத்தில் அவர்கள் என்ன கூறுகிறார்களோ அதனைக் கேட்டுக் கொள்ளப்பா. எதிர் வாதம் செய்து விடாதே! ஞான குருவிற்கு எனது நமஸ்காரத்தைத் தெரியப் படுத்துங்கள். பயணம் செளகரியமாக அமைய வாழ்த்துக்கள் ” என்று கூறினார்கள்.

மற்றும் ஒற்றைச் சொன்னார். “டாக்டர்.ராஜசேகரிடம் நீங்கள் கண்ட புத்தகம் அங்கு கிடைக்கும். தேவைப்பட்டால் வாங்கிக் கொண்டு வந்து விடப்பா” என்றார். சுவாமி அவர்கள் உத்தரவு பெற்றுக் கொண்டு புறப்பட்டுச் சென்றார். அன்றிலிருந்து தவயோகினி அம்மா அவர்களின் மருமகன் திரு.ராமசாமி அண்ணார் அவர்கள் நமது சுவாமி அவர்களுக்கு ஆப்த நண்பராகி விட்டார்.எங்கெல்லாம் தியானக் கூட்டங்கள் நடை பெறுகின்றதோ அங்கெல்லாம் நமது சுவாமி அவர்களையும் உடன் அழைத்துச் செல்வார். ஞான விஷயங்கள் பற்றி மடை திறந்த வெள்ளம் போல், தங்கு தடையின்றி பேசக்கூடிய ஆற்றலைப் பெற்றிருந்த அற்புதமான மனிதர் அவர். ஆனால் அவர் கூறும் உண்மை மிகுந்த செய்திகளை ஒப்புக் கொள்ளாமல், குடும்ப உறவினர்களும் அவருக்கு மறைமுகமான எதிர்ப்பைக் காட்டி வந்தனர். அவருக்கு முன்னால் பேச அஞ்சி, அவரில்லாதபோது பேசி, தங்களுக்குள் திருப்திபட்டுக் கொண்டு வருவது வழக்கம். அவர் உண்மையை உரைப்பதில் யாருக்குமே அஞ்சாத சிங்கம் போல் வாழ்ந்தவர். அவரைப் பற்றிப் பெருமைப்படும் படியான அநேக விஷயங்களை சந்தர்ப்பம் வாய்க்கும் போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

சுவாமி அவர்கள் பவானி தியான சங்கத்திற்கும் செல்ல ஈரோடு சென்று, அங்கேயிருந்து பவானி நகர் செல்லும் பேருந்தில் பயணமானார். பெருந்துறையில் இருந்தும் செல்லலாம். அதனை அவர் அப்போது அறிந்திருக்க வில்லை. காளிங்கராயன் பாளையம், பவானிநதியின் பழைய பாலத்தின் மீது பேருந்து பயணிக்கும் போதே, கூடுதுறை சிவாலய கோபுரம் கண்ணில் தென்பட்டது. பவானி நகரில் செளண்டம்மன் கோயிலை விசாரிக்க அங்கிருந்த பத்திரிக்கைக் கடைக்கு நமது சுவாமி சென்றார். அங்கிருந்த கடை முதலாளியின் மகனிடம் தியான சங்கத்தைச் பற்றி ஆர்வமுடன் விசாரித்தார். அவர் கேலியாகச் சிரித்தார். “அதெல்லாம் பைத்தியங்கள் ஒன்று சேர்த்து கொண்டு தவம், தியானம், என்று பொழுதைப் போக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். உங்களைப் போல உள்ளவர்களால் இந்த உலகம் உருப்பட்டது மாதிரித்தான். போயி வேலவெட்டி இருந்தாப் பார்க்கலாம் அல்லவா? ” என்று அவர் கூறியது அதிர்ச்சியாக இருந்தது. உலகத்தில் எந்த நல்ல விஷயத்திற்கும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்கிறது என்று எண்ணியபடியே, தியான சங்கக் கட்டிடத்தை நோக்கி மெல்ல நடக்கத் துவங்கினார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button