ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
14•05•2017,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(318) மனிதனே புனிதன் —
துன்பத்திலும் ஆறுதல்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சற்குருநாதரின் வருகை இம்முறை சுவாமியின் குடும்பத் தினருக்கு மிகுந்த ஆறுதல் தந்ததுடன், ஞானச்சுடராய் வந்த பாட்டி பொன்னம்மா நாச்சியார் அவர்களுக்கு மனதில் சொல்ல முடியாத குழப்பத்தை ஏனோ உண்டாக்கியிருந்தது. இந்த சந்திப்பை தம்பனவசியன் குடும்ப உறுப்பினர்கள் அறியா வண்ணம் இருக்க வேண்டும் என்று பாட்டி அபிப்ராயம் சொன்னார். அப்படியாயின் பேரனும், பாட்டியும் மட்டுமே தரிசிக்க முடியும். அவரது நினைவாகவே வாழும் சுவாமியின் பிள்ளைகள் மற்றும் மீனாம்பாள் நாச்சியார் அவர்கள் அரைமனதுடன் சம்மதித்தனர். இந்த சந்திப்பின் போது உள்ளூர் விநாயகர் கோயிலில் பரதேசி கோலத்தில் அமர்ந்து கொண்டு இருந்த அவரை வீதியில் வருவார் போவார் அனைவரும் வேடிக்கை பார்த்தபடி சென்றனர். அந்த சமயம் பார்த்து வஞ்சியம்மன் கோயிலில் அருளாடிக் குறி சொல்லும் திருமதி. காளியம்மாள் என்பவர் அங்கு வந்து விட்டார். சற்குரு நாதரின் முகவிலாசம் கண்டதும் அவரை அறியாமல் உடலில் அம்மன் ஆவேசம் வந்து விட்டது.
குரு நாதனின் பாதத்தில் விழுந்து வழிபட்டவர் எழுந்து, கையைத் தட்டிக் கொண்டு “நடராஜா, நடராஜா, சிவராஜா, சிவராஜா” என்று பாடியபடி அழுது கொண்டே குருநாதரை வலம் வரத் துவங்கினார். யாரோ முன்பின் பார்த்திராத ஒரு சாமியாரை நமது உள்ளூர் அருளாடி காலில் விழுந்து வணங்குவதும், ஆடிப் பாடுவதும், கண்ட உள்ளூர் அபிமானிகள் அங்கு கூட்டமாக பயபக்தியுடன் சூழ்ந்தபடி நின்று கொண்டனர். “டேய்.. இது சாதாரண சாமி இல்லடா.. அதுக்கும் மேல, படியளக்கும் பரம சிவன் இவுருதான்” எனத் திருமதி. காளியம்மாள் கூறியபடி மண்டியிட்டு அமர்ந்து ஆடிக்கொண்டிருந்தார். “எங்கே…
வழிவிடு, அந்தப் பொய்ச்சாமிய யாருன்னு கேட்கிறேன் ” என்று கூறியபடியே தம்பனவசியன் அங்கு வந்தான்.
அவனைக் கண்டதும் கூட்டம் வழியை விட்டது. திருமதி. காளியம்மாள் சாமியாடியபடியே எவனோ வழிப்போக்கன், பரதேசி சாமியாரை வணங்கிக் கொண்டாடுவதைக் கண்டதும் ஆத்திரம் கொண்ட தம்பன வசியன், “என்னடி உனக்குச்சாமி ஒரு கேடு” என்று கூறியபடியே தனது செருப்பு அணிந்திருந்த வலது காலினால், சாமியாடியை எட்டி உதைத்துத் தரையில் தள்ளினான். இதனை சற்குரு நாதர் அமைதியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். திருமதி. காளியம்மாள் உடலில் ஆவேசமாக இறங்கிய தேவதா சக்தி, அதே ஆவேசத்துடன் தம்பனவசியனைப் பார்த்து, “உனக்குக் காலில் கொப்புளம் வெடித்து சீழாக வடியும். அதனால் வேதனை உற்று அழுந்திச் சாவாய். வயிறு எரிந்து சொல்கிறேன், அடேய்.. இது சீக்கிரம் நடக்குமடா. எந்த மருத்துவமும் உனக்கு உதவிகள் செய்யாது ” என உச்ச ஸ்தாயில் கூறியது, தம்பனவசியனை மீண்டும் ஆவேசம் அடையச் செய்து விட்டது.
தம்பனவசியன் தனது பற்களை நெறித்து, உதட்டைக் கடித்து, காதுகள் கூசும் படியான கெட்ட வசவுக ளைப் பேசியபடி, அருளாடி தலை முடியைப் பிடித்திழுத்துத், தனது கோபம் தீர கன்னங்களில் அறைந்து, முதுகிலும் திருச் சாத்து சாத்தினான். இந்தச் செய்கையை ஊரார் ஒத்துக் கொள்ள வில்லை. அவர்களால் தம்பனவசியனை எதிர்க்க இயல வில்லை. காரணம் தீய குணமே வடிவமான அவனின் மூன்று மகன்கள் செய்யும் அராஜகம் தான். பெண் சாமியாடி திருமதி. காளியம்மாள் ஊரார் முன்னிலையில் அவமானப் பட்டாலும், அவள் விட்ட சாபம் உடனே பலித்தது. தம்பன வசியன் கிராமத்தில் காபி கிளப் நடத்தி வந்ததுடன், பலவகை வட்டி வரவு செலவு செய்து வந்தான். அதில் நகை கடன் வட்டி, பாத்திரங்கள் வட்டி, நில அடகு வட்டி, நம்பிக்கை பேரில் மாத வட்டி, தினசரி தண்டல் வட்டி, ஒரு நாளைக்குப் தொகை இவ்வளவு என்னும் கந்து வட்டி, ஒருமணி நேரத்துக்குப் தொகை நிர்ணய மீட்டர் வட்டி, மற்றும் வட்டிதரக் கால தாமதம் செய்தால் வட்டிக்கு வட்டி என்று பணம் புழங்கியதில், அநேக வியாபாரிகள் பணம் பெற்று வாழ்ந்து வந்தனர். மாட்டு வியாபாரிகள் கேரளாவில் மாடு விற்பனைக்கு பணம் பெற்று நல்ல லாபம் சம்பாதிப்பதைத் தெரிந்து கொண்டு அதிலும் நாட்டம் வந்தது.
தம்பனவசியன் இப்போது பெரிய மாட்டு வியாபாரியாக மாறி விட்டான். அவன் வீட்டுப் பெண்கள் ஏவல், பில்லி, சூனியம் என்று காரியம் செய்து வந்தனர். பிறர் துன்பம் கண்டு சந்தோஷம் அடைவதும், அவமரியாதை செய்வதும் அவர்கள் வழக்கம். கேரளாவிற்கு உணவுக்கான அடிமாடுகள் விற்பனை செய்ததுடன், அங்கும் மீட்டர் வட்டித் தொழிலைத் துவங்கி வருமானம் ‘கண் மண்’ தெரியாமல் எகிறியது. வீட்டில் நன்றாகக் குடி வெறியில் வாழ்ந்த தைரியத்தில், கேரளாவிலும் பகல் பொழுதில் குடிக்க ஆரம்பித்துப் போதை வெறியில் கீழே விழுந்து காலில் அடிபட்டுப் பணமூட்டையுடன், ஆள் தெருவில் மயங்கிச் சாய்ந்து விட்டான்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.