ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
27•09•2016,
செவ்வாய்க்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(80) மனிதனே புனிதன் —
திவ்ய தரிசனம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பேருந்தில் புறப்பட்டு கேரளா திருச்சூர் சென்று, அங்கே இருந்து எருமேலிக்குச் சென்றார்கள். ஓடையில் வெள்ளப் பெருக்கு இருந்தது. அக்காலத்தில் எருமேலி ஓடை, மக்கள் பயன்பாட்டிற்கு இருந்ததால் மிகவும் தூய்மையாக இருந்தது. இன்று சாக்கடை நீர் கலந்து விட்டது. பேட்டை சாஸ்த்தா கோயில், வாபர்சாமி கோயில் எல்லாம் தரிசனம் செய்தார்கள். உணவுக்கு ஆங்காங்கே ஐயப்ப பக்தர்கள் சமையல் செய்து சாப்பிடும் போது சாப்பிடக் கிடைக்கும். நமது சுவாமி பழங்கள் மட்டுமே சாப்பிட்டு விட்டு அவருடன் பெருவழிப் பாதையில் சென்றார்கள்.
மெதுவாக, ஓரே சீராக, நிற்காமல் வழி நடந்து பேரூர் தோடு என்ற இடத்தில் சிறிது நேரம் இளைப் பாறினார்கள். மெளனசாமி தனது ஆதங்கத்தை அங்கு வெளிப்படுத்தினார். “சபரிமலையில் மாத்திரம் ஜாதி மதங்கள் பார்க்காமல் பக்தர்கள் வரவேற்கப் படுகிறார்கள்! ஆனால் என்னை சன்னியாசி என்றும் பாராமல் ஜாதியைச் சொல்லி அடிக்கடி கேவலப்படுத்த முயல்கிறார்கள். நீங்கள் எல்லோரிடமும் அன்பாகப்பேசி, நல்ல மரியாதையுடன் இருக்கின்றீர்கள். தெய்வபக்தி உள்ளவர்களும் மனம் திருந்த வேண்டும். பிறருக்கும் மரியாதை தரும் வேண்டும்” என்றார்.
நமது சுவாமி அவரிடம், “உங்களின் தெய்வீக குணம் மற்றவர்களை எண்ணி ஆதங்கம் படுவதால் பாதிப்பு அடையும். இதனை நீங்கள் மிகவும் சாதாரணமாகக் கையாள வேண்டும். புகழை விரும்புபவர்களும், பிறரால் மதிக்கப் பட்டவர்களுக்கும் கூட பிறரை விமர்சனம் செய்யும் புத்தி அல்லது கேலி செய்யும் தன்மை இருக்கிறது! ஆனாலும் அதனைத் தவறு என்று அவர்கள் உணர்ந்து கொள்ள முயலாமல், வருத்தப்படுவதன் காரணம் தான் எனக்கும் புரிவதில்லை. இறை சிந்தனை பெருக வாழ்பவர்கள் ஏன் மற்றவர்களைப் பற்றிக் கவலையுடன் எண்ண வேண்டும்? இறை சிந்தனை ஒன்றே எதையும் சாதிக்கும் ஆற்றலைத் தரும் என்பது நிச்சயம். மற்றவர்களுக்கும் உதவும் மனநிலையைத் தரும். நீங்கள் அவர்களை மன்னித்து விடுங்கள். உங்களின் மனம் விடுதலை அடையும்” என்றதும் அவருக்குப் புரிந்து விட்டது.
சபரிமலையில் மேல்சாந்தியை அறிமுகம் செய்து வைத்தார். அவர் அன்புடன் பேசினார். மெளனசாமிக்கு அங்கு நல்ல வரவேற்பும், மரியாதையும் இருந்தது.இருவருக்கும் ஐயப்பன் தரிசனம், செய்வித்து பிரசாதம் தந்து மேல்சாந்தி ஆசி கூறினார். உரல்குழி தீர்த்தம் சென்று நீராடி விட்டு வீடு திரும்பும் வரை மெளனமாக இருந்தார்! மன சாந்தி யில் திளைத்தார்! அன்னதானங்கள், கோமாதா பூஜைகள் நடத்திப் பேர் பெற்ற மெளனசாமி கடைசியில் வெளியூர் சென்றபோது, உடல் நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார். அன்னாரின் ஆத்மா தெய்வீக நிலை அடைவதாக! இறை சிந்தனை உடையவர்கள், வருத்தம், துக்கம் அடையும் போது எந்த அளவிற்கு பாதிப்பை அடைகிறார்கள் என்பதை இதில் இருந்து உணர வேண்டும்.
தன்னைத்தானே நேசிப்பவர்களால் மட்டுமே, தனது வாழ்க்கையை நேசித்து வாழ முடியும்!
உழைப்பை நேசிப்பவர்களால் மட்டுமே, காலத்தை நேசித்து வெற்றியடைய முடியும்!
எந்தக் காரியத்தையும் அக்கறையோடு நேசிப்பவர்களால் மட்டுமே தகுந்த அந்தஸ்த்தை அடைய முடியும்!
அவர்களே வெற்றியாளர்கள்! தன்னைத்தான் நம்புவது என்பது நம்முடைய வாழ்வு சம்பந்தப் பட்டது.
நன்றி! வணக்கம்!
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.