ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
28•11•2016,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(151) மனிதனே புனிதன் —
திரு.SSM.சுப்பிரமணியம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மாதேஸ்வரன் மலையில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார் SSM குழுமத்தின் நிறுவனரும், சத்தியத்தின் சக்திநிலை சங்கத்தின் தலைவருமாகிய திரு.சுப்பிரமணியம் ஐயா. “எங்கள் சம்பந்தியை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றேன்” என்று நாகராஜன் சுவாமி அவர்களை அழைத்துப் போனார், தவயோகினி
திருமதி.சுந்தரம்மாள் அவர்கள். அறையின் வாயிலில் மிகவும் பெரிய திண்ணையில் ஜிப்பா அணிந்தபடி, ஞான தேஜஸ் கண்களில் துலங்க SSM ஐயா அமர்ந்திருந்தார். இயல்பான முறையில் அன்புடன் வரவேற்றார்.
அவரது துணைவியார் அவர் அருகில் இருந்து அவருக்குச் சாப்பிட வேர்க்கடலை கொடுத்துக் கொண்டிருந்தார். தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்கள் வேர்க்கடலையும், ஆட்டுப்பாலும் பருகி வந்தது அந்த சமயத்தில் சுவாமிக்கு ஞாபகத்தில் வந்தது. தவயோகினி திருமதி.சுந்தரம்மாள் அவர்கள் அவரை அண்ணன் என்று’ அழைத்துப் பேசியவர், நமது சுவாமி நாகராஜ் அவர்களை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
“அண்ணா, இவர் பெயர் நாகராஜன். நமது தியான வகுப்பிற்கு வருகிறார். ஆன்மிக விஷயங்கள் பல சொல்லுகிறார் அண்ணா!” என்றார். “அப்படியாம்மா..ஆமாம் இவர் நேற்று சபையில் பிரம்மம் பற்றிய கேள்வியைக் கேட்டவரல்லவா? அதன் விளக்கம் புரிந்ததல்லவா! நீங்கள் தொடர்ந்து எங்கள் சங்கத்திற்கு வாருங்கள். பல உண்மைகள் உங்களுக்கே தெரியவரும் ” என்றார். அவர்கள் சாப்பிடும் நேரம் என்பதால் விடை பெற்றுக் கொண்டார்கள். மூன்றாவது நாள் தியானக் கூட்டம் நிறைவு பெற்றது. தவத்திரு.வேணுகோபால சுவாமி அவர்களைப் பொள்ளாச்சிக்கு வருகை தரவேண்டும் என தவயோகினி திருமதி.சுந்தரம்மாள் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள். அவரும் சம்மதித்து அவர்களுக்கு ஆசீர்வாதம் தந்து அனுப்பி வைத்தார்கள்.
சுவாமி அவர்கள் பொள்ளாச்சி வந்த பிறகு அவரின் தியானத்திற்கும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. சுவாமியின் தகப்பனார் எதிர்ப்பு செய்ததற்கு சுவாமியின் குடும்பத்தினர்களும் ஒருவகையில் காரணமாகிப் போனார்கள். மற்ற உறவினர்களும், வீட்டு மருமகள் என்பவள் சாமியார் மாதிரி தியானம் செய்து கொண்டு வருவது எந்த விதத்தில் நியாயமாகும்? கிராமம் கேட்டறியா அதிசயமாக அல்லவா இருக்கிறது! ஊர் முழுக்க தினமும் புருஷனும், பெண்சாதியும் குடும்பக் காரியங்கள் பார்க்காதவர்கள்! ஏதோ மாந்திரீகம் செய்கிறார்கள் என பலபடியான பேச்சுக்களை ஊருக்குள் உலாவ விட்டனர். இது மீனாம்பாள் நாச்சியார் மனதினைத் துன்புறுத்தக் காரணமானது. வாய் பேசாத குழந்தை குணமாக வேண்டி இறைசக்தியை தியானம் செய்தால், ஏதாவது நல்ல வழிகாட்டுவார் என்பது அவரது நம்பிக்கை. அது பொடிப் பொடியானது. குடும்பத்தினர் மட்டுமல்லாமல் உறவினர்களும் சேர்ந்து துன்புறுத்தியதால், மனது கேட்காமல் ஒருமுறை சுவாமி அவர்களிடம், தனது நிலையை நாசூக்காக எடுத்துக் கூறினார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.