ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
03•10•2016,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(86) மனிதனே புனிதன் —
திருடன் அலறினான்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நிலவின் ஒளியில் கருப்பு நிஜார், கருப்பு முண்டா பனியன் அணிந்து, உடல் எங்கும் கரிபூசி பயமுறுத்தும் தோற்றத்தில் தான் வந்தான். நமது சுவாமி அவனது நடவடிக்கைகளைக் கவனித்தபடி படுத்திருந்தார். தகப்பனார் திடுமென எழுந்ததும் அவன் இருள் பகுதியில் பதுங்கினான். டார்ச்லைட் எடுத்த சுவாமியின் தகப்பனாரைக் கண்டு, இரண்டு செங்கற்களை அவன் எடுத்துக் கொண்டான். சுவாமி பார்த்து விட்டு, விறகு ஒன்றை மெல்லத் தன்னருகே இழுக்க எழுந்த மெல்லிய சப்தத்தால் கவரப்பட்ட அவன், இனி தப்பிச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்து கொண்டான். இருளில் இருந்து சரேலென வெளிப்பட்ட அவன் நிலக்கடலை பெரிய சாக்குக் கட்டு ஒன்றைத் தூக்கி நீர்த் தொட்டி மீது வைத்தான். தகரத்தில் எழுந்த சத்தத்தால் விழித்துக் கொண்ட சுவாமியின் தகப்பனார், “பிடி அவனை” என்று சப்தமிட்டபடியே எழுந்து கம்பு ஒன்றை எடுத்துக் கொண்டார்.
அவன் குதித்து எழுந்து சாக்குக்கட்டு மீது நின்று மதில்மீதிருந்த கம்பியைப் பிடித்துக் கொள்ளவும், சுவாமி விறகுகள் கட்டையை இரும்புக் கதவை நோக்கி வீசினார். அது இரும்புக் கதவில் பட்டு பெருத்த ஓசையை உண்டாக்க, அதிர்ந்து போன திருடன் மிக வேகமாக மதிலின் மீதேறி வெளிப்புறமாகக் குதித்து விட்டான். எசகு பிசகாகக் குதித்ததால் அவனுக்கு அடிபட்டு விட்டது. அவனுடன வந்தவன் கதவை வெளிப்புறமாகத் தாழிட்டு விட்டு அடிபட்டவனைத் தூக்கிக் கொண்டான். சுவாமி தகப்பனாரால் கதவைத் திறக்க இயலவில்லை. அவசரத்தில் அவர் கீழே விழுந்து விட்டதால் கையில் காயம் ஏற்பட்டு விட்டது. இரண்டு கதவு களின் எல்லாத் தாழ்களையும் உள்பக்கமாக நீக்கினால் வெளிப்புறத்தில் தாழ் திறந்து கொள்ளும். சுவாமி அதை நீக்கினார். பிறகு விறகுக் கட்டையைக் கையில் பிடித்தபடி சப்தமிட்டபடி அவர்கள் பின்னால் ஓடி ஊர் எல்லை வரையில் விரட்டி விட்டு வந்தார். திருடன், திருடன் என்ற சப்தத்தால் ஊரே கூடி விட்டது.
சுவாமி வீடு திரும்பியதும் மக்கள் கூடி சுவாமியின் செய்கைக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். இப்படி தனியே விரட்டிச் செல்வது எவ்வளவு ஆபத்தை வரவழைக்கும் எனக்கூறி குடும்பத்தினர் கண்டித்தனர். சுவாமி மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். குருநாதர் உத்தரவை நிறைவேற்றி இருப்பதைச் சொல்லத்தான் முடியுமா? திருடனுக்குத் தர்ம அடி போட முடியவில்லையே என்று ஏங்கும் கிராம மக்களுக்கு உண்மையைக் கூறினாலும் ஏற்றுத்தான் கொள்வார்களா? இப்படியாக சுவாமியின் குடும்பத்தினர் மிகப்பெரிய சதியின் வலையில் இருந்து மீண்டு வந்தனர். குருநாதர் ஒருமுறை கூறியிருந்த அம்பல நாயக்கரின் சாபமாகிய பங்காளிகள் காய்ச்சல் என்பது இதுதானோ?
சுவாமி வீட்டில் இருக்கும் மற்றவர்களையும் தங்கள் பால் இழுக்கும் சூழல்களை உருவாக்க, சூழ்ச்சி மதியாளர் அவர்களுடன் உறவாடினர். கடவுள் மறுப்புக் கொள்கை உடைய அவர்களின் நோக்கத்தைப் பற்றி யாரும் இங்கு குறையாகச் சொல்ல வரவில்லை! குறிப்பாக நமது சுவாமி அவர்களை மட்டுமே குறி வைத்து, இத்தகைய ராஜதந்திர சூழ்ச்சிகள் புரிந்து ஏன்? இது தானே நம்முடைய கேள்வி! சுவாமி அவர்கள் மகாவேள்வி ஒன்று துவக்கி சிறப்பாக நடத்திக் கொண்டிருந்த நேரம். நாங்கள் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு புறப்பட்டுச் சென்றிருந்தோம். சுவாமி வீட்டின் முன்னால் போதை யுடன் நின்று கொண்டு, தகாத வார்த்தைகள் பேசுவதும், வீட்டு மாப்பிள்ளை கள் பற்றித் தரக்குறைவாக பெரியப்பா மகன்கள் ஏசிக்கொண்டிருந்தனர். ஊர் பெரியவர்கள், ” நன்றாக பிழைப்பதனால் பொறாமை கொண்டு, கண்ணியக் குறைவாக நடந்து கொள்கின்றனர்” எனக் கூறினார்கள்.
தனது குருநாதரிடம் குடும்பத்தினர் படும் துன்பங்கள் பற்றி விளக்கம் கேட்டிருக்கின்றார். ‘தம்பனவசியனின்’ குடும்பத்தினர் மீண்டும் பிறவிக்கு வந்து விட்டனர்” என்று மட்டுமே கூறி விட்டு மெளனமானார். சிறிது காலத்தில் குடும்பத்தினரும் அவர்கள் வசமாகி விட்டனர். சுவாமியின் குடும்பத்தை மட்டும் தனிமைப்படுத்தி விட்டனர். இதில் சுவாமிக்கு சந்தோஷமே! ஏனெனில் தியானம் இருக்கவும் நேரம் கிடைக்குமல்லவா? சில ஆரம்ப உபகரணங்கள், கலசம், மணி, விளக்கு என சுவாமி வைத்திருந்தார். அதனை சுவாமியின் தகப்பனார் மூலம் வீதியில் விட்டெறியச் செய்தனர். கலசம் முதல் எல்லாம் போய் விட்டன. இனி வீட்டில் இருக்க முடியாது என்ற சூழல் உருவாகி விட்டது.
“இறைவனை எண்ணி தியானம் செய்து வருவது தவறா? குடும்பத்துடன் தானே தியானம் இருக்கின்றார்கள். அதனால் உங்களுக்கு என்ன தீமைகள் விளைந்து விட்டது?” என்று பாட்டி பொன்னம்மா அவர்கள் கேட்டார்கள். “இரவு பகலாக சாமியார் மாதிரி தவம் செய்து வருவதைக் கண்டால் எங்களுக்குப் பயமாக இருக்கிறது” என்றனர்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும் )
நன்றி! வணக்கம்!
–ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்! மதுரை M.மேகநாதன்
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.