தர்மபத்தினியின் கடமை.

154

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

01•09•2016,
வியாழககிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(54) மனிதனே புனிதன் —
தர்மபத்தினியின் கடமை.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கணவனும், மனைவியும் சேர்ந்துதான் தருமத்தைக் கடைப்பிடித்து இல்லற வாழ்வை நடத்தி வரவேண்டும். வாழ்வில் ஒழுக்கமுடன் தர்மத்தை நடத்திக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு, உத்தமமான சேர்க்கை அவனது மனைவியே! யக்ஞங்கள் முதலான தெய்வீக காரியங்கள் செய்திடவும் மனையாளின் ஷக்தி துணைபுரிகிறது. இது சிருஷ்டியின் தெய்வீகத் தன்மையை உள்ளடக்கியது.

இறைவனை நினைந்து அச் சிந்தனையைக் கொண்டே, மனம் கடந்து உணர்வு உடன் கூடி இருக்கும் நிலையை, இறையருளை இல்லறத்தில் வாழ்பவனும் பெறமுடியும் என்பதே, இறையருள் பெற்ற, இறைவன் வழி நடக்கும் குருமார்களின் குறிக்கோளாகும். இறை சக்தியைப் பற்றிய சிந்தனை மிகவும் அவசியமான ஒன்று என்பதாலும், அதனைப்பற்றிய அறிவின் விருத்தியைப் பெறுவதற்காகவும் தான், இறைவனுக்கு ஆலயங்களும், இறைசக்தியை உணர்ந்து உயர்வடைய உபதேசம் நல்கிடும் ஆஸ்ரமங்களும், இறை நம்பிக்கை உடைய சான்றோர்களால் உலகில் அமைக்கப் பட்டன.

இதில் மனம் என்பது ஒரு செயலைச் செய்வதற்கு முன்பாக, அச் செயலைப் பற்றிய எண்ணங்களை உருவாக்கும் உன்னதமான ஒரு பொருள் என்று புரிந்து கொள்ள வைத்தனர். மனம் என்பது இல்லாவிட்டால் நினைப்பு என்ற ஒன்று உருப் பெற்றிருக்க முடியாது. மனதின் மூலமாக ஒரு செயலை நினைத்து , அந்தச் செயலை நாம் நடை பெறச் செய்ய முயலும் போது, அக்காலத்தில் ஏற்படும் அனுபவமானது உணர்வுப் பூர்வமானது என்பதும் உண்மையே!

எதைப்பற்றியும் நினைக்கத் தெரிந்த மனம் , தனது நினைப்பை தன்னைக் கடந்து செல்ல அனுமதிக்கும் போதுதான், நினைப்பே செயல் வடிவம் ஆகின்றது. செயல்படும் காலத்தே அது இன்ப, துன்ப உணர்வுகளுக்கு ஒப்ப ஏதுவாகிச் செயலின் விளைவு பிறகு மனதையே தாக்குகிறது என்பதே நடைமுறை உண்மை! உணர்வுகளின் தாக்குதல்களே நமக்குள் ஒலி ஒளிச் செயல்களாக மறைமுகமாகவே நடைபெறுகின்றன என்பதனை ஞானியர்கள் தெளிவு படுத்தினர். நமது காரியங்கள் நடைபெற நேர்மறை எண்ணங்களை வலியுறுத்தி வந்தனர்.

நமது சுவாமி எதிர்மறை எண்ணங்களை வென்று குருநாதர் காட்டிய வழியில் நடைபோடத் துவங்கினார். இந்த சமயத்தில் சுவாமி அவர்களுக்கு சோமனூரில் வசிக்கும் திரு. வெள்ளிங்கிரி, திருமதி லக்ஷ்மி யம்மாள் வெள்ளிங்கிரி அவர்களின் இரண்டாவது மகள் மீனாம்பாள் அவர்களை நிச்சயம் செய்தார்கள். தமிழ் வைகாசி மாதம் 23 – ம் தேதி புதன்கிழமை 06•06•1979 அன்று திருமணம் பெரியோர்களின் நல்லாசியுடன் தமிழ்த் திருமறைகள் ஓதி எவ்வித ஆடம்பரங்களின்றிச் சிறப்புடன் நடைபெற்றது. சுவாமி இல்லத்திற்கு வருகை புரிந்த மீனாம்பாள் நாச்சியாரின் வரவினால் தெய்வீக வாழ்வு புனிதம் பெற்றதாக சுவாமியின் பாட்டி பொன்னம்மாள் நாச்சியார் அவர்கள் ஆசி கூறினார்.

மனிதன் தனது வாழ்வில் பிரமச்சரியம், கிருஹஸ்தம், வானப் பிரஸ்தம் ஆகிய மூன்று நிலைகளைக் கடந்து முற்றும் பற்றற்ற தன்மையைப் பெறவேண்டும் என்று ஆன்றோர் வழிகாட்டினர். அதாவது சாதாரணமாக உள்ள மனிதன் உலக அறிவைப் பெற்று, அதனால் சிற்றின்பம், பேரின்பம் இரண்டையும் பூரணமாக அனுபவத்தால் உணர்ந்து கொண்டு, பிறகு பேரின்பமே சாசுவதமானது என்பதைத் தெரிந்து கொண்டு, மற்றொன்றைக் கைவிட்டு முற்றும் துறந்த வாழ்வினில் இறையருளில் லயமடைகிறான்.

ஆனால் பெண்களுக்கு இறையருளைப் பெறப் படிப்படியாக மனமுதிர்வைப் பெற்றும், கடைசி வரையில் கணவனைப் பிரியாமலும் வாழ்கிறார்கள். கணவனை இழந்து விட்ட நிலையிலும்கூட இறையருட் சிந்தனையால் உலகபாதிப்பை விலக்கிக்கொண்டு, இயல்பாகவே இறைவனின் அருளைப் பெற்றுப் பக்குவ நிலையை அடைந்து விடுகிறார்கள். மனம் துறவற நிலையில் உலக இன்பங்களை விலக்கி, அவைகளைக் கடந்து, இறைவன் நினைவினிலேயே உண்மையான பேரின்பத்தை அடைந்து வாழ்வாங்கு வாழ்கிறார்கள்.

குடும்பத்தில் வாழ்ந்தாலும், குடும்பக் காரியங்களில் ஈடுபட்டாலும், சுகதுக்கங்களில் கலந்து கொண்டாலும், இறைவன் சிந்தனையுடன் தாமரை இலை மீது நீர் போல வாழும் மனப் பக்குவம் அடைந்து விட்டால், சந்நியாசம் பெறாமல் குடும்பத்தில், வீட்டில் இருக்கலாம். பெற்றோர், மனைவி, குழந்தைகள், உறவினர், நண்பர்கள் எல்லோரிடமும் அன்புடனும், மரியாதையுடனும் வாழ்ந்தாலும் இறைவன் தான் நம்முடைய நிரந்தரமான உறவு என்ற மனப் பான்மையை உண்டாக்கிக் கொள்ளவேண்டும்.

இறைவனையே நம்பி, அவரின் அன்பையே உறுதியுடன் பற்றிக் கொண்டு, காணும் யாரிடமும் இறைவனையே பார்க்கும் மனப்பக்குவம் மட்டும் கிடைத்தாலே வெளியில் வாழ்ந்தாலும், வீட்டினில் வாழ்ந்தாலும் இரண்டும் ஒன்று தான் என்று கூறிய ஞானியர்களின் வார்த்தைகளில் தான் எவ்வளவு பொருள் பொதிந்து இருக்கின்றது! நமது சுவாமி அப்படியே இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பவர். உலகத்தில் எதுவும் நமக்குச் சொந்தமானதல்ல என்ற மனப்பான்மையை உருவாக்கச் சொல்லுவார். நன்றி!

– ஈஸ்வர குமாரரின் தொண்டன் மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button