ஞானகுரு சோமனூர் விஜயம்.

150

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

18•03•2017,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(261) மனிதனே புனிதன் —
ஞானகுரு சோமனூர் விஜயம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தவத்திரு.வேணுகோபால சுவாமியின் மாதாந்திர சுற்றுப் பயணம் துவங்கியபோது, பவானி தியானசங்க சுற்றறிக்கைப்படி ஞானகுரு சோமனூர் வரப்போவதாகத் தகவல் வந்தது. அவரை வரவேற்க சோமனூர் அன்பர்கள் தங்களைத் தயார் படுத்திக் கொண்டனர். அவரும் பேருந்தில் வந்து இறங்கினார். அவரை அழைத்து வரத் திரு.பாஸ்கரன் அவர்கள் தனது மிதிவண்டியை ஓட்டிப் போனார். ஞானகுருவிற்கு முகமன் கூறி வரவேற்புக் கொடுத்த திரு. பாஸ்கரன், சுவாமியை வண்டியின் பின்புறம் அமரச் சொன்னார். ஞானகுரு அவர்கள் மிதிவண்டியைத் தான் ஓட்டி வருவதாகக் கேட்டார். அதனை மறுத்துத் தான் ஓட்டி வருவது தனக்குப் பாக்கியம் என்று கூறித் திரு.பாஸ்கரன் அழைத்து வந்தார். தவத்திரு. வேணுகோபால சுவாமி அவர்கள் மிகவும் எளிய வாழ்வு வாழ்ந்தவர். எவ்வித ஆடம்பரங்களுமின்றி எல்லோரும் விரும்பும் எளிமையான தோற்றம் கொண்டவர். சற்குரு நாதர் ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி அவர்கள் ஜீவ சமாதி அடைந்த பிறகுதான் அவரிடமிருந்து ஏராளமான தெய்வீகப் பாடங்களைத் சூட்சுமம் நிலையில் இருந்து சொல்லக் கேட்டறிந்து கொண்ட ஞானி அவர். அவரது ஆடம்பரமற்ற எளிய வாழ்வுதான், அவருக்கு ஏராளமான பக்தர்களை உருவாக்கித் தந்தது. அதுமட்டுமல்ல வெறும் உபதேசத்தோடு நின்று விடாமல் பக்தர்களின் இன்ப துன்பங்களுக்கு ஆலோசனைகள் வழங்குபவராகவும் தனது வாழ்வை அர்ப்பணித்து வந்தவர்.

தனது வாழ்வில் தான் படும் துன்பங்களையும், துயரங்களையும் பக்தர்களிடம் கூறுவதற்கு அவர் மறைத்ததில்லை. திறந்த புத்தகமாகத்தான் பக்தர்களுடன் வாழ்ந்தார். சற்குருநாதர் ஜீவசமாதி அடைவதற்கு முன்பு இவரை எல்லா இடங்களுக்கும் கால்நடையாக அழைத்துச் சென்று கொண்டிருந்தார். மாளாத துன்பங்களை மனதில் சுமந்து கொண்டு சென்று கொண்டே இருந்தார். இவரது தந்தைக்கு மகன் மீது தாளாத பாசம். ராஜபாளையத்தில் வாழ்ந்து வந்த அவருடைய மரணச் செய்தி தெரியாமல் சற்குருநாதரின் கட்டளைப்படி ஓயாமல் அவர் சொல்லுகின்ற இடங்களுக்குச் செல்வார். சில சமயங்களில் சற்குரு நாதர் அந்தர்தியானமாகிக் காணாமல் தன்னை மறைத்துக் கொள்வார். தனது தந்தையின் ஈமச் சடங்குகள் நடை பெற்றதும் தெரியாது.மகன் வராததால் குடும்ப வழக்கப்படி உடலைத் தகனம் செய்து விட்டார்கள். தனது சற்குருநாதர் ஜீவசமாதி ஆனதும் இவருக்குத் தெரியாது. தியானம் செய்யச் சொல்வார் அந்தந்த இடங்களில் தியானம் இருந்து வருவார். சற்குருநாதர் இவர்முன் தோன்றி இவரது தந்தை மரணம் அடைந்து விட்டார் எனக் கூறினார். தனது தந்தையின் மரணச் செய்தி கிடைத்ததும் ஓடோடிச் சென்றவருக்குக் கோபத்துடன் தாயின் வரவேற்புக் கிடைத்து அதிர்ச்சி அடைந்தார்.

கையில் காசுமில்லை ஆதரவு தர யாருமில்லை. சற்குருவின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு அவர் கூறிய வழியில் தியானம் செய்து வந்தார். வீட்டினர் இவரது பரிதாப நிலைகண்டு, குடும்பம் குழந்தைகளைக் காப்பாற்ற அவரது தந்தைநடத்தி வந்த சைக்கிள் கடையை இவருக்குத் தந்தார்கள். இறைவனது ஆணை இதுவெனப் பெற்றுக் கொண்டு பழனியில் சைக்கிள் கடையைத் துவங்கியவருக்கு தொழில் நன்றாக நடைபெறவில்லை. ஒரு ரூபாய் கூட வரவு இல்லாமல் இவருக்குக் கடும் சோதனை தொடர்ந்தது. எல்லாவற்றையும் மிகவும் பொறுமையுடன் தாங்கிக் கொண்டார். தனது குருநாதரை பழனி மலை அடிவாரத்தில் உள்ள பஜனை செய்யும் இடத்தில் கடைசியாகப் பார்த்தது தான். அதன் பிறகு அவரைப் பார்க்க வில்லை. தனது குருநாதர் சமாதி அடைந்து விட்ட கவலையில் ஆழ்ந்திருந்தார். தான் சமாதி அடையப் போகும் மார்கழி மாதத்திய ஏகாதசி திதியை முன்கூட்டியே சற்குரு நாதர் கூறியிருந்தார். அந்த நாளில் நீ தியானம் இருந்தால் நான் உன் முன் தோன்றுவேன் என்றும் கூறியபடி, அவரது தரிசனம் பெற்றவர். அப்போதும் சற்குரு நாதர் தாய் தந்தைதான் முதல் தெய்வம் என்று கூறினார். அதனைப் பக்தர்களுக்கும் போதித்து வரலானார்.

சோமனூரில் திரு.சண்முகம் வீட்டில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. அதில் நமது ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்களும் கலந்து கொண்டார். அவர் கூறும் செய்திகளைக் கேட்டுக் கொண்டு ஓர் பார்வையாளராகக் கடைசியில் அமர்ந்து கேட்பார். சற்குருநாதர் கூறிய கருத்துங்களை மட்டுமே அவர் போதித்து வந்தார். தனது குருநாதரைப் பற்றி அதிகமாக ஏதும் அவர் சபையில் கூறியதில்லை. தவத்திரு. வேணுகோபால சுவாமி அவர்கள் தியான வகுப்பு முடிந்து பவானி செல்லும் போது, பக்தர்கள் ஏதாவது காணிக்கையாகப் பேருந்தும் பயணச் சிலவினுக்குத் தந்தால் மட்டுமே பெற்றுக் கொள்வார். யாரிடத்திலும் பணமோ, பொருளோ அவர் கேட்டுப் பெற்றதாக யாரும் குறைகள் கூறியது கிடையாது. அவரது இந்தப் பெருந்தன்மைதான் மக்கள் மனதைக் கவர்ந்தது.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button