ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
18•10•2016,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(101) மனிதனே புனிதன் —
ஜீவ மரணப் போராட்டம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சத்தியமங்கலம் வனப்பகுதியில் பண்ணாரி, திம்மம் துவங்கி சாம்ராஜ் நகர் வரை செல்லும் மரங்கள் அடர்ந்த பாதையில் பேருந்து சென்று கொண்டிருந்தது. இரண்டு பக்கமும் கவனித்தபடியே பயணிகள் ஆர்வமும், அச்சமும் கண்களில் துலங்க பேச்சற்று இருந்தனர். இடது புறம் பள்ளமான பகுதியில் இறங்கி வலது புறம் பாதை திரும்பும் இடத்தில் அந்தக் காட்சி தென்பட்டது. சற்று மேடான பகுதி அது! சண்டையிட்டுக் களைத்து பாம்பு புற்றுக்குள் நுழைந்து விட, புற்றைத் தனது கால்களால் அடித்து, உடைத்து, துவம்சம் செய்து கொண்டிருந்தது புலி. திடகாத்திரமான புலியின் கால்களில் புற்று சிதைந்து கொண்டிருந்தது. சிறிது நேரம் இக் காட்சியைப் கண்டு மனம் சஞ்சலப்பட அங்கிருந்து சென்று விடவே அனைவரின் மனமும் துடித்தது.
மனிதனின் மனம், சித்தம், புத்தி இவைகளால் செயல்படுவதாக சித்தர்களின் அனுபவம். புத்தி என்பதைப் புறமனம் என்றும் சித்தம் என்பதை அகமனம் என்றும் கூறினர். அகமனதினில் பல ஜென்மங்களின் பதிவுகள் அடங்கி இருக்கும் சக்திமிக்க இடமாக இது கூறப்படுகிறது. சித்தம் செயல்படும் போது சகல காரியங்களும் வெற்றியாகும். ஆனால் புறமனதின் புத்தியானது மற்றவர்களின் எண்ணங்களால் வந்த பதிவு ஆக்கிரமிப்புகள் செயல்படும் போது அகமனதின் கட்டளைகள் புரிவதில்லை. புற மனமானது புத்தியின் உதவியுடன் போராடத் துவங்கி விடும். அநேக வெற்றிகளைப் புறமனதின் புத்தி, அகமனதின் சித்தத்துடன் போராடிப் போராடி முடிவில் காரியம் தோல்வி கண்டு விடுகிறது. தோல்வியினால் அதிர்ச்சி ஏற்படுகிறது என வைத்துக் கொண்டால் அப்போது மட்டுமே சித்தத்தின் சிந்தனையை உபயோகப்படுத்தும் நிலை மனிதனுக்கு வருகிறது. காரிய வெற்றியும் கிடைக்கின்றது.
சீர்மிகு சித்தத்தின் அகமனதின் அறிவு எப்பொழுதும் செயல்படவே ஞானியர்கள் வழிகாட்டிச் சென்றனர். இங்குதான் ஒலி, ஒளியைக் கொண்டு எப்படிச் செயல்படுவது?என விளக்கம் தந்தனர். ஆரம்பத்தில் தீபத்தை ஏற்றி வைத்து அதனைக் குழைந்த பார்வை பார்ப்பது! இதனை மனதின் ஏக்கம் என்றும் சொல்லலாம். தீபத்தைப் பார்க்கும் பொழுது பார்வையை சிறிது தாழ்த்தி மூக்கின் வழியே பார்த்தால் கண்கள் இமையாது இருக்கும். அப்போது மனதினுள் ஒலி உண்டாக்கப்பட வேண்டும்.
அவ்வொலியே குருஉபதேச மந்திரம் எனக்கூறப்படுகிறது. நாவு அசையாமல், உதடுகள் அசையாமல் குரு மஹா மந்திரம் ஒலிகள் ஜெபிக்கப்படும்போது ஒலி, ஒளித் தன்மை சமன் படுகிறது. குழைந்த பார்வையால் தீபத்தை நோக்கி தனது காந்தபுல சக்தியால் ஒளி ஈர்க்கப்படுகிறது. அது காந்த புலத்தில் ஒலியாக மாறும். நமது ஜெபம் வழியாக ஒலி, ஒளியாக மாற்றம் அடையும். புறமனம் தனது பதிவுகளைத் தூய்மை செய்து அகமனமாகிய சித்தத்தில் நாம் மூன்று கர்ம வினைகளையும் நீக்கி விட முடியும்.
சஞ்சித கர்மங்கள்(முற் பிறவியின் பதிவுகள்) — பிராப்த கர்மம்(இப் பிறவியின் இன்ப, துன்பம்) — ஆகாமிய கர்மம் (இப் பிறவியில், ஆசையினால் உருவாக்கும் நன்மை, தீமைப் பதிவுகள்) ஒலி, ஒளித் தன்மையின் சமன் பாட்டில் தீய வினைகளை மாய்த்து, நல் வினைகளை உருவாக்கலாம். சமமான மனநிலை உண்டாகி விடும். இதனால் நம்முள் உயர் காந்த சக்தி எப்போதும் உருவாகிக் கொண்டே இருக்கும்.
விருப்பு, வெறுப்பு, கோபம், அதிகமான ஆவல் இவையெல்லாம் நமது காந்த சக்தியை மின்சார சக்தியாக மாற்றி காந்த சக்தி செலவழித்து கொண்டே இருக்கும். செலாவணி ஆகலாம்! ஆனால் அதீதமாக சக்தியை வீண் செலவு செய்யக் கூடாது.
காந்த சக்தியின் சேமிப்பினால் நமது சித்தமானது பழைய வினைகளை நீக்கிக் கொண்டு புதிய நல்வினைகளை உருவாக்கிக் கொள்ளும். இச் செயல் புரிவதற்குப் பற்றற்ற மனநிலை மனிதனுக்கு வேண்டும். சகலமும் இறைவன் செயல் என்று ஈஸ்வரார்ப்பனம் செய்து கொண்டு வரும் சித்தத்தின் செயலினால் புறமனமாகிய புத்தியும் ஒழுங்காகும்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M. மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.