ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
30•09•2016,
வெள்ளிக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(83) மனிதனே புனிதன் —
சுளுக்கு வைத்தியர் வாழ்வு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுவாமி வீட்டின் கிழக்குப் பக்கம் ஒரு வீடு தள்ளி எலும்பு முறிவுக்கு சிகிச்சை தரும் ‘போடி பாளையம் பத்திர காளியம்மன் எலும்பு முறிவு வைத்தியசாலை’ ஒன்று நீண்ட பெயருடன் விளம்பரப் பலகை இருந்தது. வைத்தியர் திரு.ஆறுச்சாமி எப்பவும் சந்தனநிற முழுக்கை சட்டையை மடித்து விட்டுக் கொண்டு, கணேஷ் பீடியை புகைத்துக் கொண்டிருப்பார். வலது காதிலும் ஒருபீடியைச் சொருகி வைத்திருப்பார். மென்மையானவர். நமது சுவாமியை ‘நாகப்பா’ என்று அழைப்பார்.
கை, கால், சுளுக்குகளை மஞ்சள் நிற எண்ணெய் தடவி நீவி குணப்படுத்துவார்! தேங்காய் எண்ணெய், மஞ்சள் பொடி சுவாமி கடையில் வாங்கி, மூலிகைகள் போட்டு, சுளுக்கு எண்ணெய் காய்ச்சுவார்.ஒரு முறை மரத்தில் இருந்து கீழே விழுந்து அடிபட்டு விட்ட ஒருவரை வைத்திய சாலையில் படுக்க வைத்திருந்தனர். பரிசோதித்துவிட்டு “இடுப்பில் சுளுக்கி உள்ளது. இரவில் வைத்தியம் செய்யலாம்” என்று கூறினார். அடிபட்டவருடன் வந்திருந்த மூன்று பேர் ஆண்கள் அங்கே தங்கிக் கொண்டனர். வைத்திய சாலைக்குள் பின்புறம் நான்கடி ஆழக்குழி தோண்டப்பட்டது. சுவாமி போய்ப் பார்த்து விட்டு, “இது எதற்காக? ” என்று கேட்டார். “வைத்தியம் செய்வதற்கு!” என ரத்தின சுருக்கமாகப் பதில் வந்தது.
இரவு பத்து மணி இருக்கும். ‘அம்மா’ என்ற அலறல் சப்தம் கேட்டது. பிறகு எந்த சத்தமும் இல்லை. சுவாமி வைத்திய சாலைக்கு வீட்டின் பின்புற வாயில் வழியே சென்றார். அங்கு சென்று பார்த்தால் அடிபட்டு வந்தவரை குழிக்குள் இறக்கி, இடுப்பு வரை மண் போட்டு கிட்டித்திருந்தார்கள். முதுகு வழியே அக்குளில் வேட்டி சுற்றி, இருவர் சேர்த்து அடிபட்டவரை குழிக்குமேலே இழுத்துக் கொண்டிருந்தார்கள். அம்மா என்று அலறிய வாயைத் துணியினால் அடைத்துப் பொத்தியபடி தலையை ஒருவர் பிடித்துக் கொண்டிருந்தார். சீமை சாராயத்தைக் குடிக்கக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
பாட்டி கூறிய கருட புராணத்தில், எமலோக வாதனை என்று சொல்லப்பட்டிருக்கும். அப்படித்தான் கண்முன்னே அந்தக் காட்சி தெரிந்தது. சுவாமி எமலோகத்தை நினைத்து வேண்டிக் கொண்டார். அவருக்காக ஜெபம் செய்தபடியே பார்த்துக் கொண்டிருந்தார். வைத்தியர் தர்மதேவதையாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தார். குழிக்கு மேலே படபட வென சப்தத்துடன் உடல் வெளிவந்த போது ஆள் மயக்கமாகி விட்டிருந்தார். வைத்திய சாலைக்குள் தூக்கிப் போனார்கள்.
சரி! போய்ச் சேர வேண்டிய இடம் போய்ச் சேர்த்து விட்டார் என்று எண்ணியபடியே வீடு வந்து, அவருக்காகப் பிரார்த்தனை செய்தபடியே இருந்தார்.
காலையில் குளித்து சூரிய தியானம் செய்து விட்டு வீட்டின் முன்புறத்தில் வந்தார். வைத்திய சாலைக்கு வெளியே மைல்கல் மீது பீடியைப் புகைத்துக் கொண்டு சிறிது சாய்வாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். இவரைப் பார்த்த மாதிரித் தெரிகிறதே என்று எண்ணமிட்டபடி வைத்தியரிடம் போனார்.மரத்தில் இருந்து விழுந்தவர் என்ன ஆனார்? என்று விசாரித்தார் சுவாமி! அதோ அவர்தான் என்று காட்டினார். சிறிது உடலை லேசாகச் சாய்த்தபடியே அவர் நடந்து வந்தார். வைத்தியருக்கு அவர்கள் மனமுவந்து நல்ல தொகையாகப் பணம் தந்து, நன்றி கூறி விட்டு நால்வரும் சென்றனர்.
வைத்தியருக்கு மருமகன் ஒருவர் இருந்தார். உடல் நலக் குறைவு காரணமாக எங்கெங்கோ மருத்துவம் செய்து குணமடையாமல், தானாகப் சிரிப்பதும், புலம்புவதுமாக மாறிப் போனார். சில நாட்கள் சென்று வெற்றுடம்புடன் வீதி வலம் வந்தார். பிறகு இடுப்பில் துண்டு மட்டுமே அணிந்து, பார்க்கச் சித்தரைப் போல சிரித்துக் கொண்டே இங்கும் அங்குமாக ஓடிக் கொண்டிருந்தார். தனது மகள் வாழ்வு இப்படி ஆகிவிட்டதே என்ற கவலையில் மாரடைப்பு ஏற்பட்டு, வைத்தியர் மரணத்தைத் தழுவினார். மருமகன் பைத்தியம் பிடித்து அலைவதால், குடும்பத்தைக் காப்பாற்ற வைத்தியர் மனைவி சிகிச்சை செய்யத் துவங்கினார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M. மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.