சித்தர் தம் ரகசியங்கள்!

249

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

25•06•2017,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(360) மனிதனே புனிதன் —
சித்தர் தம் ரகசியங்கள்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சற்குருநாதர் அவர்கள் ஐவர் மலையில் பல காலம் இருந்து வந்ததால், அக்காலத்தில் அப் பகுதி மக்களுக்கு நன்கு அறிமுக மானவராகவும் இருந்தார். அந்நாளில் ஐவர் மலைக்கு இவரைத் தேடிவருவர்களில் தவத்திரு. வேணுகோபால சுவாமி அவர்களும் அதில் ஒருவர். ஐவர் மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இவரது கால் பதியாத இடங்களே இல்லை எனலாம். பழனியில் இருந்து அடிக்கடி ஐவர் மலைக்கு வந்து செல்வார். அத்துடன் அமராவதி ஆற்றங்கரையில் உள்ள ஸ்ரீ தத்தாத்ரேயர் சமாது இடம் வந்து அவருடன் பேசிக் கொண்டிருப்பார். ஜீவசமாதியான அவதூதர் ஸ்ரீ தத்தாத்ரேயரிடம் சற்குருநாதர் ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி அவர்கள் சகஜமாகப் பேசுவது வழக்கம். நல்ல நட்பாக அவர்கள் விளங்கி வந்தனர் என்பதும் நமது சுவாமி அவர்க ளுக்குப் புரிந்து விட்டது. அங்கு காசி விஸ்வநாதர் ஆலயமும் இருந்தது. அருகில் உள்ள பாதையில் அமராவதி ஆற்றுக்கு நமது சுவாமியை அழைத்துப் போனார்.

ஆற்றுநீரை அள்ளி ஜெபம் செய்து தலைமீது தெளித்தார். நெற்றியில் தனது கட்டை விரலை வைத்து ஏதோ மந்திரம் எழுதினார். கை விரல்கள் அனைத்தையும் கோர்த்தபடி இரண்டு உள்ளங் கைகளையும் தலையின் பின்புறமாக வைக்கச் சொல்லி செய்து காட்டினார். உள்ளங்கை கள் தலையைத் தாக்கிப் பிடித்த படி இருக்க, இரண்டு முழங்கை களையும் முகத்தின் அருகே கொண்டு வந்து காட்டி அதன்படி செய்யச் சொன்னார். நமது சுவாமியும் அதன்படியே செய்யக் கண்களுக்கு எதிரே உள்ளது மாத்திரம் புலனாகியது. அப்படி யே தலையைத் தூக்கிக் கண்கள் திறந்தபடி இருக்கச் சூரியனைப் பார்க்கச் சொன்னார். சுவாமி பார்க்கும் போது ஜெப மந்திரத்தைக் காதில் ஓதினார். நமது சுவாமி மனதினுள் ஜெபம் செய்தபடி சூரியனைப் பார்த்தார். நன்றாகப் பார்க்க முடிந்தது. சிறிது நேரத்தில் சூரியன் குளிர்ச்சியாகக் கண்ணுக்குத் தெரிந்தது. குளிர்ந்த பனிக்கட்டி அம்புகள் போல் பறந்து வந்து நமது சுவாமியைத் தாக்கியது. உடல் எங்கும் குளிர்ச்சி ஊசி தைப்பது போல் இருக்க, நடுக்கம் ஏற்பட்டது. சுமார் பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு சற்குருநாதர் சிரிக்கும் சப்தம் இடிபோல கேட்க உள்ளமும் நடுநடுங்கியது. குளிர்ந்த நிலவுபோல தெரிந்த சூரியன் இப்போது பளிச்செனத் தெரியத் துவங்கியது. உடல் சாதாரண நிலைக்கு மாறியது. நமது சுவாமியின் தலையில் தனது வலது உள்ளங்கையை வைத்து ஆசிகள் கூறினார்.

இந்தப் பயிற்சியைத் தினமும் மதியம் 11•45 முதல் 12•00 மணி வரை தொடர்ந்து செய்து வர உத்தரவு பிறப்பித்தார். சற்குரு நாதர் ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி அவர்களுக்குக் கண்கள் எப்போதும் இமையாமல் தான் இருக்கும். அவர் கண்கள் இமைத்து ஒரு போதும் நமது சுவாமி பார்த்ததில்லை. அவர் நமது அருகே வரும் போது பரிமள வாசனைகள் அவரிடம் கமழ்ந்து கொண்டிருக்கும். நமது மனதில் இனம் புரியாத ஆனந்த உணர்வுகள் ஏற்படும். ஆன்ம பலம் நம்மிடம் தானாக உருவாகும். இவரைக் கண்டு பயந்து விலகிப்போகும்படி தான் இவரது நடவடிக்கை இருந்தது. இவரிடம் உபகாரம் பெற்றவர்கள் இவரை மறந்து விடவே முடியாது. இவர் யாரிடமும் யாசகம் பெற்றதுமில்லை. கொடுத்தே பழக்கப் பட்டவர். இவர் உமிழ்நீர் பட்டாலே உலோககங்கள் சொர்ணமாக மாறுவதை நமது சுவாமி உட்பட அநேகர் கண்டிருக்கின்றனர். வறுமையில் உழல்பவர்களுக்கு தங்கத்தை நன்கொடையாகத் தந்தவர் ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி யாகத்தான் இருக்க முடியும். அவர் தொட்டவுடன் நோய் நீங்கி ஆரோக்கியம் பெற்றவர்கள், தீய சக்திகளின் பிடியிலிருந்து விடுபட்டவர்கள் அக்காலத்தில் அநேகர்! நமது தவத்திரு ஸ்ரீ நாகராஜன் சுவாமி இவரைக் குருவாக அடைந்தது நாம் செய்த பாக்கியம் என்று தான் எண்ணம் நமக்கு உருவாகிறது. தனது குருநாதரிடம் தான் கற்றுக் கொண்ட சூரிய நோக்குப் பயிற்சியை இன்றளவும் கடைப் பிடித்து வருகிறார் நமது சுவாமி.

கொழுமத்தில் இருந்து ஐவர் மலைக்கு இருவரும் மெல்ல நடந்து சென்று கொண்டிருந்த னர். செல்லச் செல்ல சற்குரு நாதரின் நடை வேகம் கூடிக் கொண்டே இருக்க நமது சுவாமி அவர்கள் அவர் பின்னால் ஓடிக் கொண்டிருந்தார். அவர் முன் சென்று விட்டார். இவர் பின் சென்று கொண்டே இருந்தார். பாப்பம்பட்டி விலக்கு வரை சென்றும் சற்குரு நாதர் தென்படவில்லை. பிறகு நமது சுவாமி ஐவர் மலை அடிவாரம் சென்று சேர்த்திட மாலைப் பொழுதாகி விட்டது. மலைப் பாதை விநாயகர் கோயிலின் மேற்பகுதியில் சற்று தள்ளி இப்போது இருக்கும் பெருமாள் சாமியின் வீடு அன்று இல்லை. அங்கும் சற்குருநாதர் காணப்பட வில்லை. மெல்ல மாலைப் பொழுதில் இருள் கவியத் துவங்கி விட்டது. நமது சுவாமி மலையின் உச்சியை நோக்கி நகரும் முன்பு கணபதி கோவிலின் வெளியே அமர்ந்து கொண்டார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button