ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
08•01•2017,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(192) மனிதனே புனிதன் —
சிங்கத்தை நாகம் தீண்டியது!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஊருக்குள் செம்படவர் மக்கள் வண்டிமாரியம்மன் நோன்பு கொண்டாட முடிவு செய்தனர். அதற்குக் கோயில் கிடையாது. மைதானத்தில் பந்தல் போட்டு கலசம் முத்திரித்து வந்து, பந்தலில் வைத்து வழிபாடுகள் செய்வர். ஒரு கட்டை வண்டியில் மீது மாரியம்மனைப் போல் வேடமணிந்தவர் நின்று கொள்வார். அசுரனைப் போன்று வேடமணிந்தவர் கையில் வீச்சரிவாள் வைத்திருக்க, அவரை சங்கிலியால் பிணைத்து நான்குபேர் பிடித்துக் கொள்ள, அசுரனை வண்டிமாரியம்மன் வதம் செய்ய, வீதிவீதியாகத் துரத்தியபடியே அம்மன் செல்வார்.
ஆட்டம், பாட்டம், கர்ஜனை, கும்மாளம் என்று ஊரே அமர்க்களமாயிருக்கும். அம்மனும், அசுரனும் போராடி யுத்தம் செய்வதை மிகவும் தத்ரூபமாக நடித்து கிராம மக்களை மகிழ்விப்பார்கள். கையில் வண்ணவண்ணமாகக் துணியைப் பிடித்தபடி வாலிபப் பையன்கள் வரிசையாக நின்று தேவராட்டி நடனம் ஆடுவார்கள். மேளம், கொம்பு, அடித்து ஆவேசமாகச் சலங்கை கட்டிக் கொண்டு ஆடும் ஆட்டம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்த கிராமப்புரக் கலைகள் மெல்ல மெல்ல அழிந்து வருவது நல்ல விஷயங்கள் அல்ல!
நமது திரு.சிங்கத்தேவர் நல்ல போதையில் வயிற்றுப் பசியுடன், தனது மனைவி திருமதி.முத்து அம்மாளிடம் சாப்பாடு போடும்படி கேட்டிருக்கிறன்றார். காது முற்றிலும் செயல் இழந்து போயிருந்த மனைவிக்கு ஏதும் கேட்காததால், தனது “கள்ளிச்செடி ஆத்தாளிடம்” ஏதோ புலம்பிக் கொண்டு இருப்பதைப் பார்த்து வந்ததே கோபம். கையில் கிடைத்த கம்பைக் கொண்டு திருச்சாத்து மண்டகப்படியை நடத்தி விட்டுத் திட்டியிருக்கிறார். தனது புருஷன் என்ன காரணத்திற்காகத் தன்னை அடித்ததுமில்லாமல், ஏதோ பேசிவிட்டுப் போவதை, ஊமைப்படம் பார்ப்பதைப் போல் பார்த்துக்கொண்டும், வலி தாளாமல் கத்திக் கொண்டும் இருக்கையில், கள்ளிச் செடியின் மீது வெள்ளை உருவம் நின்று கவனித்தபடி இருக்க, அம்மா என்று அலறியபடியே அருகில் சென்று அழுதுள்ளார்.
தனது கணவனைத் தண்டிக்க வேண்டும் என்று புலம்பிப் பிராதும் கொடுத்துள்ளார். மீசையை முறுக்கியபடியே உறுமிக்கொண்டு வயல் வெளியில் பருவகாரராகப் போன வரை நாகம் பின் தொடர்ந்து சென்றிருக்கிறது. சமயம் பார்த்து காலில் ‘பட்’ என ஒரு கொத்துக் கொத்தித் தீண்டிட, திரு.சிங்கம் கண்விழித்தது விழித்தது போல் தரையில் அப்படியே சாய்ந்து விட்டது. அங்குள்ளவர்கள் அதைக்கண்டு எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற எண்ணமுடன், பாம்புக் கடிவாயின் மேல் பகுதிகளில் கயிறு கொண்டு இறுக்கிக் கட்டிப் போதாததற்குச் சுண்ணாம்பினால் கடிவாயைச் சுற்றிக் கோ டும் போட்டுப் பாடையைக்கட்டி, துளசிச் செடிகள் பரப்பி, அதன்மீது அவரை உட்கார வைத்து ஊர்வலம் போல் எடுத்துக் கொண்டு ஊருக்குள் வந்தனர். வண்டி மாரியம்மன் ஊர்வலம், அசுரனை விரட்டியபடியே எதிரில் வந்தது. விஷயத்தைக் கேள்விப்பட்டதும் ஊரே அல்லோல கல்லோலப்பட்டது.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.