ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
06•01•2017,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(190) மனிதனே புனிதன் —
சக்தி பெற்ற முத்துஅம்மாள்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நமது சுவாமி நாகராஜ் அவர்களின் வயோதிக நண்பர்களில் ஒருவர் பழனியப்பத்தேவர். கிராமத் திருவிழாவின் போது, அம்மனின் கரகம் உலா வரும். அப்போது ‘சிங்கம்’ வேஷங்கட்டி ஆடுவார். மத்தளம், கொம்புகள், தாரை, தப்பட்டை முழங்க சிங்கத்தைப் போலவே உறுமுவார். சிங்கவேஷம் போட்டுக் கொள்ள அதிகாலை முதலே தயாராகி விடுவார். உடல் முழுவதும் சாயம்பூசி தத்ரூபமான மீசையுடன், சிலம்பம் கையில் சுழற்றியபடியே நாலுவீடுகட்டி, கிருக்கி அடித்து, பகுல் எடுத்து விளையாடி வருவார்.
உயிருள்ள ஆடு ஒன்றைக் கொணர்ந்து நடுவீதியில் நிறுத்துவர். உறுமும் இவரைக் கண்டு ஆடு பயத்தில் கத்தி வீறிடும். பாவ்லா காட்டியபடியே கைகால்களை அசைத்து ஆட்டைச்சுற்றிக் கொண்டு வருவார்.ஆட்டைக் கையில் தொடாமல், வாயினால் கவ்வி மேலே எடுத்துத் தூக்கித், தனது தலைக்கு மேல் புறமாக வீசி எறிவார். தூரமாகச் சென்று விழும் ஆடு அவருக்குத் சொந்தமாகி விடும். சிங்கம் போலவே உறுமிக் காட்டுவதால், அவரது சொந்தப் பெயர் மறைந்து போய், அவரை “சிங்கத் தேவர்” என்றே ஊரார் அனைவரும் அழைக்கத் துவங்கினர்.
பயில்வானாக விளங்கிய அவருக்கு மூன் ஆண் மக்களும், இரண்டு பெண் மக்களும் இருந்தனர். மனைவி பெயர் திருமதி.முத்து அம்மாள். கிராமத்தினர் “முத்துமக்கா ” என்று அழைப்பார்கள். கணவன் மனைவிக்குள் தினமும் சண்டை சச்சரவுகள் நடை பெறும். அவர் கூலி வேலைக்குச் செல்ல இஷ்டப்படாமல் வயல்வெளியைப் பாதுகாக்கும் “பருவகாரர்” என்ற காட்டுப்பண்ணாடி வேலைக்குச் சென்று, கையில் பெரிய கம்புடன், மீசையை முறுக்கி விட்டபடியே, தமது சிம்மக்குரலால் உறுமியபடியே வலம் வந்து கொண்டிருந்தார். இதற்குக் கூலியாக அல்லது அவர்பாணியில் சம்பளமாகவோ, அறுவடை சமயத்தில் “நெல் மூடைகள்” மற்றும் வைக்கோல் சிறிதளவு வீடு வந்து சேரும்.
“வீட்டுச்செலவிற்குப் பணம் தேவை. ஏதாவது வேலைக்குப் போனால் தின வருமானம் வீட்டிற்கு வரும். இரண்டாவது மகன் நோயில் படுத்திருக்கிறான். பணமிருந்தால் குழந்தைகளைக் காப்பாற்றலாம். இப்படி மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு, உறுமீட்டுத் திரிந்தால் அடுப்பு சோறு பொங்குமா? மீசை உனக்கொரு கேடு ” – இது அவர் மனைவியின் வாதம். மீண்டும் மீசையைப் பற்றியே ஏசிக் காட்டினார்.
சிங்கத்தேவரை என்ன வேண்டுமானாலும் ஏசலாம், அவர் பெறுத்துக் கொள்வார். ஆனால் எண்ணெய் தடவி ஆசைஆசையாய் வளர்த்த மீசையை மட்டும் ஏதாவது கூறி விட்டால் வந்தது ஆபத்து. அவரை அவமானப்படுத்தவே , “வெட்டி மேஸ்த்திரிக்கு நெய் தடவின மீசை” என்று திருமதி.முத்து அம்மாள் மீண்டும் கூறிய மறுகணமே பளார் என்று அவரது கை மனைவியின் கன்னத்தைப் பதம் பார்த்து விட்டது. அடி படுவதில் இருந்து தப்பிக்கத் தலையைத் திருப்பும் பொழுது, அவரது உள்ளங்கை சரியாக முத்துஅம்மாள் காதில் பட்டுவிட்டது. மீண்டும் மீண்டும் கன்னத்தில் விழும் அடி காதிலேயே விழுந்தது. அவ்வளவுதான், காதில் “ஙொய்” என்ற சப்தத்துடன், அது தனது கடமையை முடித்துக் கொண்டது. பயில்வான் தனது வலதுகாலைத் தூக்கி மனைவியை ஒரு எத்துஎத்தியதும், முத்துஅம்மாள் தலைசுற்றலில் தள்ளாடி மயங்கிக் கீழே தரையில் சாய்ந்தும் விட்டார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.