சகோதரரின் மரணமும் தெய்வீக காட்சியும்.

0 139

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

16•07•2016,
சனிக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(13) மனிதனே புனிதன் — சகோதரரின் மரணமும்
தெய்வீக காட்சியும்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுவாமி அவர்களின் தம்பி சொளந்திரராஜன் நல்ல அழகும் குணமும் கொண்டவர். தகப்பனாருக்கு மிகவும் செல்லப் பிள்ளை. அறிவு மிக்க அவனை கிராமத்தில் எல்லோருடைய வீட்டிற்கும் கூட்டிப் போவார்கள். சுவாமியின் பெரியப்பா மகன் ராஜமாணிக்கம் என்பவர் அன்று விளையாட அழைத்துப் போனார்.அருகில் ஊத்துக்குளி ஜமீன்தாரின் பெரியவர்கள் கட்டிய தருமச் சத்திரம் மிகுந்த பெரியதும், பல அறைகள் கொண்டும் விசாலமாக இருந்தது. வழிப்போக்கர்கள் தங்கி உணவருந்தி இளைப்பாற பெரிய மனதுடன் கட்டிடம் கட்டி தர்மம் செய்து வந்தார்கள்.

அங்கே விளையாடச் சென்றவர் குழந்தையைத் தோளில் அமரச் செய்து மாடியின் மீது ஏறியவர், கை நழுவிக் கீழே விழுந்ததில் பையன் விலா எலும்பு ஒன்று முறிந்து போனது.

அன்று இக்காலம் போல் மருத்துவ வசதி இல்லை. இருபது நாட்கள் குழந்தை துன்பப்பட்டு பெரியவர்கள் முகத்தைப் பார்த்து ஏங்கியபடி இருந்தான்.

பாட்டி அவன் பிழைப்பது அரிது என்றார். கிராமம் முழுவதும் துயரத்தில் அவனுக்கு வைத்தியமும் பார்த்தது. சூலக்கல் மாரியம்மனிடம் வழிபட்டு வரலாம் என்று நமது சுவாமியை வழித் துணைக்குக் கூட்டிக் கொண்டு பாட்டி புறப்பட்டுப் போனார். பொள்ளாச்சி சென்று அங்கே இருந்து கோயிலுக்கு நடந்து சென்றனர்.

வழியில் மரம் ஒன்றின் நிழலில் இளைப்பாற அமர்ந்தனர். பாட்டி யாருடனோ பேசிக் கொண்டு இருந்தார். கெஞ்சும் குரலில் பேசியபடி இருந்தவரிடம் நமது சுவாமி அவர்கள் வந்தது யார் எனக்கேட்டார்.
தருமதேவதை என்று பாட்டி சொல்லவும் தனக்கும் காட்டும் படி கேட்டுக் கொண்டார்.

இப்படிப்பட்ட அமானுஷ்ய சக்திகள் எல்லோரிடமும் தொடர்பு கொள்வதில்லை. தான தர்மங்கள், மனிதாபிமான சிந்தனை கொண்டவர்கள், மற்றவர்களுக்கு உபகாரம் செய்பவர்கள், சமுதாயத்திற்கு நல்ல செயல் புரியும் விஞ்ஞானிகள் இவர்களுடன் தொடர்பு கொள்வார்கள் என்று தவத்திரு வேணுகோபால சுவாமி கூறுவதைக் கேட்டிருக்கிறேன்.எனது வாழ்க்கை அனுபவத்தில் கண்டிருக்கிறேன். ஏன் நமது சுவாமி அவர்கள் எனக்குக் காட்டி இருப்பதால், இதனையும் கூறுகிறேன்.

ஒளி பெற்ற மங்கலான உருவம் வெளிப்பட்டது. கட்டளை இடுவது போன்று மிகவும் மெதுவான குரலில் பேசியது. அமானுஷ்யங்களைக் காண்பது சுவாமிக்குப் பழக்கமானதால் செய்தியை மட்டும் கேட்டுக் கொண்டார். செய்தி இதுதான்.
“குழந்தையை எடுத்துக் கொள்வோம்.தர்மம் செய்யும் குடும்பமானதால் உங்களுக்கு எப்போதும் உதவி செய்து வருவோம்.இவன் கொண்டு வரும்(சுவாமி யைக்காட்டி) ஆலயத்தில் எப்போதும் இருப்போம்.”

அம்மன் முன்பு பாட்டி வேண்டிக் கொண்டார். அன்று அவரது கண்களில் கண்ணீர் வழிய மெளனமாக இருந்தார்.வீடு திரும்பியும் மெளனத்தைக் கடைப் பிடித்தார். சுவாமி தந்தையின் வேண்டு கோளின் படி குழந்தைகளுக்கு அபிமந்திரிக்கும் வேங்கடசாமி என்பவர் வந்து பார்த்து விட்டு இவனை ஆண்டவனிடம் அனுப்பி வையுங்கள் என்றார்.

அம்மா அழுததில் வெகு நாட்கள் பேசாமலும், பிரமை பிடித்தும் இருந்தார்.தம்பி அவர்களின் மறைவுக்குப் பிறகு தாயார் தர்மம் செய்வதில் கவனத்தைத் செலுத்தலானார். பசு மாடுகள் கறக்கும் பாலை இரண்டு வேளையும் கிராமத்து குழந்தைகளுக்குக் கொடுத்து மகன் இறந்த துக்கத்தை ஆறுதல் படுத்திக் கொண்டார். பிறகு மூன்று பெண் குழந்தைகள் பிறந்தனர்.

சுவாமியின் தகப்பனார் ஹோட்டல் தொழில் தொடங்கி நடத்தி வந்தார். இருப்பினும் விவசாயம் செய்வதில் மிகவும் ஆர்வம். இரண்டுமே நல்ல படியாக வருவாய் கிடைக்க விவசாயம் உள்ளூர் தவிர வெளியூர்களிலும் இருந்தது.அவர் உழைப்பில் சிறந்தவர்.உதவிகள் செய்வதில் தாய் தந்தை இருவரும் சமமாக இருந்தனர்.

வறியவர்களுக்குக் கொடுப்பதில் குழந்தைகள் அனைவரும் ஆசைப்பட்டனர். நல்ல வருவாய். புஞ்சை, நஞ்சை தானியங்கள் சுற்றத்தாருக்கும், சொந்த பந்தங்களுக்கும் பேருதவியாக இருந்தது.

நமது சுவாமி நாகராஜ் அவர்களுக்கு ஆதரவு பொன்னம்மாள் பாட்டியும், சுற்றிலும் குடி இருக்கும் முஸ்லீம் மக்களும் தான்.

ஆறாம் வகுப்பு படிக்க பொள்ளாச்சி முனிசிபல் பள்ளியில் சேர்ந்தார். திரு.கருணாகரன் ஆசிரியர் மாணவர்களிடம் பாசமும், கண்டிப்பும் உள்ளவர். திருவாசகம் வாசிப்பவர். பகவத்கீதைக்கு மிகவும் எளிய உரை எழுதியவர். நன்றாக வாழும் போதே இறைவன் நிழலில் இன்னுயிரை அர்ப்பணித்தவர். அன்னாரின் போதனைகள் சுவாமி அவர்கள் ஆன்மிக முன்னேற்றத்திற்கு உறுதுணையானது.நல்ல வழிகாட்டிகள் கிடைப்பதை அதிர்ஷ்டம் என்று சுவாமி கூறக் கேட்டிருக்கிறேன்.

பள்ளி பருவத்துப் பாடத்தை விட ஆன்மிக பாடத்தில் சிறந்து விளங்கினார். இன்றும் சுவாமி அவர்களுடன் படித்த நண்பர்கள் இவரிடம் மிகவும் மரியாதை செலுத்தி வருவதைக் காணலாம். அவர்கள் அனைவரும் உயர்ந்த செல்வாக்குடனும்,செழிப்புடனும் வாழ்கின்றனர்.

சுவாமியின் அனுபவம் வித்தியாசமானது. பிரமிக்க வைக்கும் தன்மை உடையது. அதையும் எழுதுகிறேன். நன்றி! வணக்கம்!

-ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button