ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
09•02•2017,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(224) மனிதனே புனிதன் —
கோயில் பூஜாரியின் கனவு!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° அருள் மிகு பண்ணாரி மாரியம்மன் பக்தர்களின் வாழ்வில் அற்புத அநுக்கிரகம் செய்யும் ஓர் மகா சக்தி! நமது சுவாமி அவர்கள் பேருந்தில் புறப்படும் சமயம், அவரது கிராமத்தைச்சேர்ந்த ஒருவரைப் பேருந்து நிலையத்தில் வைத்து சந்திக்கும்படி ஆயிற்று. அங்கே சத்தியமங்கலத்தில் சிற்றுண்டிக்கடை வைத்து நடத்திக் கொண்டிருந்தார். அவர் பெயர் திரு.மாதேஸ்வரன். “சுவாமி ” என்று சப்தமாகக் கூவியபடியே ஓடி வந்தார். “எங்கு பயணம்?” என்று கேட்டவரிடம், சுருக்கமாக “பண்ணாரி” எனக்கூற, “நானும் வருகிறேன் ” என்று கூறியபடியே பேருந்தில் ஏறிக்கொண்டு, சேமநலம் விசாரித்தார். பேருந்து பண்ணாரியை அடைந்து கோயிலை ஒரு சுற்றுச்சுற்றி வந்து வடக்குப் பகுதியில் நின்றது. கோயிலில் இருந்து நடந்து தண்ணீர் தொட்டி இருக்கும் இடம் சென்று குளித்து விட்டு வந்தனர். உடன் வந்த நண்பர் வெளிக் கோயில் பலவற்றைக் காட்டினார். குறிப்பாக சருகமக மாரியம்மன், வண்டி முனியப்பன், மாதேஸ்வர திருமூர்த்தி, விநாயகர், பொம்மையராயர், ஓம் சக்தி பண்ணாரி மாரி அம்மன் தரிசனமெல்லாம் செய்வித்தார். அங்கே மண்டபத்தில் அமைதியாக அமர்ந்து இயற்கை தந்த பரிசாகிய வனத்தின் அழகிய பசுமையைக் கண்டு களித்து இறையருளுக்கு நன்றி கூறிக் கொண்டிருந்தார்கள். மைசூருக்கு செல்லும் பேருந்துகள், கனரக வாகனங்கள் மற்றும் அனைத்து வாகனங்களும் கோயில் அருகே நின்று தான் செல்கின்றன. கூட்டம் கூட்டமாக ஜனங்கள் அம்மனை வழிபட வந்த வண்ணம் இருந்தனர். பயணிகள் அநேகம் பேர் கட்டுசாதம் கொண்டு வந்தவர்கள் கோயில் மண்டப மேடையில் அமர்ந்து சாப்பிட்டுப் பசியாறிக் கொண்டிருந்தனர்.
பண்ணாரி மாரியம்மன் கோயில் பகுதியில் சுவாமியுடன் வந்த நண்பர் திரு.மாதேஸ்வரன் அம்மனின் திருவிளையாடல்கள் பற்றிய செய்திகள் பலவற்றைக்’ கூறினார். அதில் ஒரு செய்தி சுவாமி ஸ்ரீ நாகராஜ் அவர்களை ஆச்சரியப்பட வைத்தது! அது சபரிமலை யாத்திரை பற்றிய செய்திதான்! நமது சுவாமி அடிக்கடி சபரிமலை சென்று வருவதால் அந்த செய்தியைச் சற்று கவனமாகக் கேட்டுக் கொண்டார். மெய்யன்பர்களே இவர்கள் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது அநேக வருடங்களுக்கு முந்தைய செய்திகளை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். நன்றி! அந்த செய்தி அருள்மிகு பண்ணாரி மாரியம்மனுக்கு நித்திய கடமைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்த பூஜாரியைப் பற்றியதாக இருந்தது.
“அம்மன் தன்னை வழிபடும் பக்தர்களை மட்டுமல்லாது, தன்னை அனுதினமும் பூஜிக்கும் பூஜாரிக்கும் சோதனை செய்து அனுக்கிரகம் தந்து காப்பாற்றுவார் என்பதும் உண்மை!
பூஜாரியின் நண்பர்கள் சபரிமலை யாத்திரை செல்ல விரும்பி, ஒருமண்டலம் விரதம் துவங்கி விட்டனர். பூஜாரி அவர்களுக்கும் நீண்டகால ஆசை ஒன்று, சபரிமலைக்குச் சென்று வரவேண்டும் என்பது! நண்பர்கள் விரத காலம் முடியும் தருணம் ஆவலைக் கட்டுப்படுத்த முடியாமல், மணி மாலை அணிந்து கொண்டு அவர்களுடன் தினமும் சரண கோஷத்தில் கலந்து கொண்டு மகிழ்வுடன் விரதத்தைக் கடைப்பிடிக்கச் சென்றார். சபரிமலைக்குச் செல்வது வாழ்வில் அவரது கனவு! ஏக்கமான அது, நனவாகும்போது ஏற்படுகின்ற சந்தோஷத்தை வார்த்தைகளால் கூறி விட முடியாது! அநேகமாக அம்மன் கோயில் பூஜைகளில் அவருக்கு, ஈடுபாட்டுடன் மனம் இப்போது லயமாகவில்லை. அதற்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொண்டு, நண்பர்களுடன் அடிக்கடி ஐயப்ப பஜன்களுக்குச் சென்று வருவதும், ஆடிப்பாடி மகிழ்வதும் என, மனம் ஒரு புதிய உலகத்தில் சஞ்சரிக்கத் துவங்கி விட்டது. அதனைப் போலவே இருமுடி கட்டு நிறைவும் சிறப்பாக நடந்ததும் மிகுந்த மன நிறைவைத் தந்தது. ஆனால்..
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.