ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
20•02•2017,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(235) மனிதனே புனிதன் —
குரு வித்தைகளில் சூட்சுமம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“உலகத்தில் நல்லவர்களும், தீயவர்களும் இருந்தாலும், எவ்விதப் பாகுபாடுகளும் இல்லாமல் இரு சாராரும் இன்ப துன்பங்களை அனுபவித்து வருகின்றார்கள். இரு சாராரும் தெய்வத்திடம் தங்களைப் காப்பாற்றும்படி வேண்டிக் கொள்கிறார்கள். இன்ப துன்பங்களை நமக்கு தெய்வம் தருவதாக இருந்தால், தீயவர்களுக்குத் தீமைகளையும், நல்லவர்களுக்கு நன்மைகளையும் அல்லவா அருள வேண்டும்? ஆனால் அவ்வாறு இல்லாமல் இருசாராருமே இன்ப துன்பங்களை ஒரே மாதிரித் தானே அனுபவித்து வருகிறார்கள்! இன்ப துன்பங்களைத் தடுக்கும் சக்தி தெய்வங்களுக்கு நிச்சயமாக இருக்கிறது! ஆனால் அதனை தெய்வீக சக்திகள் தடுக்காமல் இருக்கக் காரணம் என்ன?”
“இன்பம், துன்பம், செல்வம் வறுமை, இவைகளைத் தக்கார், தகாதார் எனக் கண்டு தெய்வ சக்திகள தருவதாக வைத்துக் கொண்டால், இயற்கையின் இயல்பில் மாறுதல்கள நிச்சயம் ஏற்பட்டு விடும். இன்பம், செல்வம், மதிப்பு, துன்பம், வறுமை, அவமரியாதை எல்லாம் அவரவர்கள் எண்ணத்தினால் எண்ணுவதாலும் அனுபவித்தலாலும், இயற்கை சுதந்திரத்தினாலும் மட்டுமே மறைக்கப்பட்டு உள்ளது. எதனை மனிதன் எண்ணுகின்றானோ, அதுவே அவனது வாழ்க்கையாக மாறிவிடும் என ஆன்றோர் பெருமக்கள் கூறியிருக்கின்றார்கள்.”
“தவவாழ்வில் இரவும், பகலும், அனுதினமும் ஈடுபட்டு விட்ட ஆதி குரு நாதன் மனதில் ஸ்ரீ ஞான கணபதியைத் தவிர வேறு நினைப்பு எதுவுமே இல்லை. நாவும், உதடுகளும் அசையாமல் ஓங்கார ஜெபம் மட்டுமே விடாமல் ஒலித்துக் கொண்டும், பிரபஞ்சம் முழுக்கப் பரவிக் கொண்டும் இருந்தது. சர்வ வியாபகமாகி எங்கேயும் பரவிய அந்நாதம், மீண்டும் திரும்ப அவரிடத்தில் வந்த போது, அண்ட பகிரண்ட மெல்லாம் ஒலிக்கும் பிரமாண்ட சப்தமாகக் கேட்டது. மனம் கிடுகிடுவென அதிர்ந்து, பின் சப்தநாடிகளுள் மெல்ல அடங்கி, ஓய்ந்து, மெளனமானது. ஆதி குரு நாதனே என்னைப்பார் என்ற மெல்லிய குரலாய் அசரீரியாகக் கேட்கத் துவங்கியது. ஒளி வடிவில் ஓங்காரமும், மனதை நெகிழ வைத்து மகிழச் செய்யும் பரவசமும் அக்குரு நாதனுக்கு ஏற்பட்டது. ஸ்ரீ ஞான கணபதியின் பிரகாசம் கண்களைக் கூடச் செய்தது. ஆதி குரு நாதன் சிரசின் மீது கரம் கூப்பி வணங்கினார். எம்மை உளமிருத்தி அருந்தவம் புரிந்த ஆதி குரு நாதனே, உமக்கு என்ன வேண்டும்? கேள் என்று விக்ன விநாயகர் அருள் புரிந்தார்.”
“ஓங்காரப் பொருளைத் துதி செய்து ஐயனே உமது தரிசனத்தால் புண்ணியம் பெற்றேன். தேவதைகளின் சோதனையால் அருள் ஞான வித்தைகளுக்கும் சோதனை வந்து விட்டது. எனவே ஞான ரகசிய போதனைகளைத் தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றும் வல்லமையும், குருத்துரோக பரிகார விமோச்சனமும், உண்மையை உபதேசம் செய்யும் குருமார்களையும் காத்தருள வேண்டும் என்று வேண்டினார்.
அதற்கு ஸ்ரீ ஞான கணேச மூர்த்தி, ஆதி குரு நாதா கேள் என உரைக்கலுற்றார். தேவதைகளுக்கு நீ இட்ட சாபத்தால் அவர்களால் குருதோஷத்தை இனி நிவிர்த்தி செய்திட முடிந்திடாது. தேவதைகள் குருமார்களுக்கு இட்ட சாபத்தால் இனி சீடர்கள் குருதக்ஷணை தந்து உதவ மாட்டார்கள். குரு துரோகம் செய்து பாபிகளாய் ஜடப்பொருட்களாய் பிறப்பெடுத்து அறியாமை இருளில் கிடந்துழல்வார்கள். இன்னும் பைசாசங்களாகவும் மாறுவார்கள். தீய சக்திகளுக்கு அடிமைப்பட்டு குருநிந்தனை செய்து, தங்களைப் பெரிய குருநாதர்களைப் போல உலகில் வேடமணிந்து, ஏமாற்றிக் பிழைப்பார்கள். வித்தைகளைச் சீடர்களுக்குக் கற்றுத் தரும் போது கிரந்திகளை ஒரு பங்கு உள் மறைத்துக் கற்றுக் கொடு! ஏதும் வேண்டாத உண்மைச் சீடனுக்கு கிரந்தியின் முடிச்சு் நீக்கிக் தெளிவு படுத்து! பிறகு உன் மனதில் சாந்தம் பிறக்கட்டும்” என்ற ஸ்ரீ கணேசர் ஆதி குரு நாதனுக்கு மேலும் பல தெய்வீக உண்மைகளைக் கூறலுற்றார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.