குரு பத்தினிக்கு தேவ சாபம்!

202

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

24•02•2017,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(239) மனிதனே புனிதன் —
குரு பத்தினிக்கு தேவ சாபம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“மாசி மாதத்து மஹா சிவன் ராத்திரி விசேஷமும், அம்மாவாசை திதி புண்ணிய காலமும் நெருங்கிக் கொண்டிருந்தது. கடந்த ஏழு மாதங்களில் தவவாழ்வின் உச்சத்தை ஆதி குரு நாதன் எட்டியிருந்தார். இந்தக் காலகட்டத்தில் குரு பத்தினி பைரவி, மெளனமாக ஏதாவது இடையூறுகளைச் செய்து கொண்டு இருந்தாள். இது குரு நாதனின் கவனத்திற்கு வந்தது. அவரது கடமைகளைச் செய்திடும் விவேகம் தடுமாற்றம் அடைவதை அன்னை சுட்டிக்காட்டினார். உனது மனைவியிடம் அன்பு சிறிதளவும் குறையாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கோப உணர்வு கொள்வதால் அறிவின் ஆற்றல் சக்தியையும், செய்கின்ற கடமைகளில் கொண்ட நெறி தவறிடும் நிலையும் ஏற்பட்டு விடும். உனது மனைவி தரும் இடையூறுகளுக்காகப் பயந்து எடுத்துக் கொண்ட தியானக் கடமைகளில் இருந்து நழுவி விடுவது ஆண்மகனின் ஆற்றல் சக்திக்கு அழகல்ல! துன்பம் விளைவிப்பவர்களிடம் கோபம் கொள்வதும் ஆண்மையல்ல! என்று மாயா அன்னை உபதேசித்தார்” என்ற தவஞானச் சுடர் தவத்திருமதி. பொன்னம்மாள் பாட்டி அவர்கள் அருமையாகச் கூறினார்

“ஒரு மனிதன் தனது கடமைகளை விட்டு விலகிச் செல்வது, அது தனக்குத்தானே செய்திடும் துரோகம் ஆகும். நமக்கு இடையூறு செய்பவர்களை, அவர்கள் செய்யும் குற்றம் குறைகளை, நாம் கட்டாயமாக அவர்கள் மீது சுட்டிக் காட்டி, இகழ்ந்து பேசுவதும் செய்யக் கூடாது. நாம் அவர்களிடம் உள்ளத்தில் அன்பு வைத்து, அவர்களது செயலின் உண்மையை எடுத்துக் கூறத் தயங்கவும் கூடாது. அதற்காகப் பொறுமையின் மொத்த உருவமாகவும் காட்டி நம்மைத் தாழ்த்திக் கொள்ளவும் கூடாது. எந்த உதவிகளையும் மனதாரச் செய்திட வேண்டும். அதனால் அவர்களது எண்ணங்கள் நல்ல மாற்றத்தைப் பெறும். நாம் நன்மைகள் தான் செய்கிறோம் என்பதை நமது உள்ளத்தில் குடியிருக்கும் சத்தியம் என்ற இறைசக்தி அறியும்படி செய்திடல் வேண்டும். இதனைச் செய்வதுதான் தர்மம் என்று சொல்லப்படுகிறது. பரிசுத்தமாகிய இச்செயலினால் வாழ்வில் வெற்றி உண்டாகும் என்பது ஆன்றோர் வாக்கு.”

மாயையால் உருவாகிய மாமி, ஆதி குரு நாதனின் தாயார் சாப்பிட்டு வந்த கஞ்சி ஆகாரத்தை மட்டுமே சாப்பிட்டு வந்தார். குரு பத்தினியின் ஊழித்தீ போன்று கனன்று எரிந்த கோபக்கனல், அவள் உள்ளம், உடல் இரண்டையும் தகித்திடச் செய்த நிகழ்வு ஒன்று நடந்தது. அவளின் செய்கையை வானோர் உன்னிப்பாகக் கவனித்து வந்தனர். ஆதி குரு நாதன் அடைய வேண்டிய குரு கோள் தத்துவத்தில் வேறு இடையூறுகளை உண்டு பண்ணுவதை, வானவர்களாகிய தேவாதி தேவர்கள் நிராகரித்தார்கள்! இவள் சாபம் பெற்று துன்பம் அடைவதற்கே பிறந்தவள் என எண்ணினர். யாராலும் நீக்க முடியாத குருதோஷத்தை இவள் அடையக்கடவது என்று மறைமுக சாபம் இட்டு விட்டார்கள். ஆதி குரு நாதன் மிகப் பெரிய விருந்து ஒன்றினுக்கு ஏற்பாடுகள் செய்தார். அநேக குருமார்களும் சீடர்களும், பொதுமக்களும் கலந்து கொண்ட பெரிய விருந்து அது! சபை நடுவில் ஆதி குரு நாதனுக்கும், அவரது குரு பத்தினி பைரவிக்கும் ஆசனப் பலகைகள் போடப்பட்டன. தான் கணவருடன் சேர்ந்து அமர்ந்து, இவ்வளவு பெரிய சபையில் தனி மரியாதையைப் பெறப் போவதை எண்ணி உள்ளம் பூரித்தாள்.ஆதி குரு நாதர் தனது அன்றைக்கு முதலில் பாதபூஜை செய்ய என்ற எண்ணத்தில், அவரை அழைத்து வந்து, சபை நடுவே அமர வைத்தார். இதனை குரு பத்தினி பைரவி எதிர்பாராததால் அதிர்ச்சியடைந்தாள். ஆதி குரு நாதன் எல்லோருடைய முன் நிலையில் தனது அன்னைக்கு, சபை நடுவில், பாதபூஜை செய்வதைக் கண்டு மனம் கொதித்துப் போய்,”நிறுத்துங்கள்” என சப்தமிட்டாள்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button