ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
09•09•2016,
வெள்ளிக்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(62) மனிதனே புனிதன் —
குரு சொன்ன அவரா இவர்?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பொள்ளாச்சியில் நடைபெற்ற தியானக் கூட்டத்தில் பற்பல காட்சிகளைச் சொன்னார்கள். சிலர் நல்ல ஈர்ப்பாக இருந்ததென்றும் பரவசப்பட்டார்கள். சுவாமியைப் பற்றி எல்லாம் விசாரித்துச் தெரிந்து கொண்டார்கள். தியானம் எப்படி என்று அந்தப் பெரியம்மா கேட்டார்கள். நன்றாக இருந்தது என்று சொல்லி அத்துடன் பேச்சை நிறுத்திக் கொண்டார். எல்லோரும் விடை பெற்றுப் போன பிறகு திருமதி.சுந்தரம்மாள் சுவாமியிடம்,” அப்பா நான் ஒரு குருநாதரிடம் தத்துவம் படித்து வந்தேன். பாடங்கள் முடிந்த பிறகு எனது குருநாதர் என்னிடம் இன்னும் இருபது ஆண்டுகள் சென்றபிறகு இளம்வயது ஆசான் ஒருவன் வருவான். அவன் உனது சந்தேகங்களை நிவர்த்தி செய்வதோடு, பிறவா நிலைக்கு வழியும் காட்டுவான். உனக்கு முன்ஜென்மத் தொடர்பு கொண்ட ஆசானைப் பார்த்ததும் உனது உள்ளம் உருகும். நான் உனக்கு சொல்வது நடக்கும் என்றார். அப்பா இன்றுடன் அந்தக் கெடுவு பூர்த்தி ஆகிவிட்டது. நீ யாரப்பா? சொல்!”என்று கேட்டதும்,
சுவாமி, “சொல்கிறேன் அம்மா. நீங்கள் வழிபாடு செய்து வருவது எனது குருநாதரைத் தான்! படம் தான் மாறு பட்டிருக்கிறது” என்றார். பெரியம்மா, ” சுவாமி நான் வயோதிகம் அடைந்து விட்டேன். எனது குழந்தைகளைத் தொட்டிலில் போட்டு தூங்க வைக்கத் தத்துவப் பாடல்கள் தான் தாலாட்டில் பாடுவேன். கடவுள் பக்தி மிகுந்த எங்களுக்கு வழி சொல்ல வேண்டும். நீங்கள் ஒருமுறை எங்கள் இல்லத்திற்கு வந்து உங்கள் குருநாதரைப் பற்றிக் கூற வேண்டும். அப்பா! வாருங்கள் ” என வரவேற்றார். சுவாமி விடைபெற்று வந்தார்.
சுவாமியின் தகப்பனார் ஈரோடு முருகன் எண்ணை மில்லிற்கு நிலக்கடலை வியாபாரியாகச் சென்று விட்டார். மளிகைக் கடையைத் தாயாரும், பொன்னம்மா பாட்டியும் தகுந்த ஆட்களுடன் நிர்வாகித்து வந்தனர். சுவாமி விவசாயத் தொழிலைச் கவனித்து வந்ததால் தியானம் இருக்கப் போதிய அவகாசம் கிடைத்து வந்தது. மூத்த சகோதரியின் கணவர் திரு.K.தண்டபாணி வந்திருந்தார். வட இந்திய யாத்திரைக்குச் சீட்டுப் போட்டு இருப்பதாகவும், மாதாமாதம் சீட்டிற்கு அவரே பணம் கட்டி வருவதாகவும், பணம் சேர்ந்த பிறகு ஸ்பெஷல் பஸ் ஏற்பாட்டைத் திரு ரத்தினமும், அவர் தம்பி பாலுவும் செய்து வருகிறார்கள். உங்களுக்கு இது நல்ல ஆன்மிகப் பயணமாக அமைய வாழ்த்துக்கள்” எனக் கூறிச் சென்றார். அன்று இரவு வயல் காவலுக்கு சுப்பு, ராமன், மளிகைக் கடைப் பொறுப்பில் உள்ள காளிமுத்து மற்றும் சுவாமி நால்வரும் சென்றனர். வயல் ஆத்துப் பொள்ளாச்சி என்ற ஊரின் அருகே, ஆழியாற்றின் கிழக்குப் கரையில் இருந்தது. நிலவு வெளிச்சம் பகல் போல் வீசியது. வயல் அறுவடை சமயம். இரவு பதினோரு மணி. சுவாமி முன்னால் செல்ல காளிமுத்து பின்னால் வந்தவன் ‘அம்மா..’. என்று அலறினான். வயலுக்குள் இருந்து நெற்கதிர்களை களவாண்டு கொண்டு இருந்த கும்பலில் ஒருவன் களிமண் கட்டியை வீசி எறிய சரியாகக் காளிமுத்து இடுப்பில் விழுந்தது. வலியில் துடித்த அவன் சமாளித்துக் கொண்டு சுவாமியைத் தாண்டி ஓடிச் சென்று கையில் இருந்த கம்பைக் குறிபார்த்து மண் கட்டி பறந்து வந்த திசை நோக்கிக் குறி தவறாமல் வீசி விட்டான்! கம்பு பட்டதும் நெல் திருடன் கத்திக் கதறி ஓடிச் சென்று ஆழியாற்றில் குதிக்க, அவன் தோழர்களும் ஆற்றில் குதித்துத் தப்பி ஓடினர்.
எல்லோரும் களத்து வீட்டிற்கு வந்து தேநீர் போட்டுச் சாப்பிட்டனர். ராமன் வீசி எறிந்த கம்பை எடுத்துவர, கம்பின் நுனியில் சிறு பேனாக்கத்தி கட்டப் பட்டிருந்தது. அது களவாணி கையில் பட்டு சிறு காயத்தை உண்டாக்கியதால் பயந்து ஓடிவிட்டிருந்தனர். சுவாமி காளிமுத்துவைக் கடிந்து கொண்டார். பென்சில் சீவும் சிறு கத்தி அது. இது தவறு. உன்னைத் திருத்திக் கொள் என்றார். காளிமுத்து இடுப்பில் ராமன் தைலம் தடவிவிடப் படுத்துக் கொண்டான். காலையில் மருதுதுவரிடம் சென்று வரவேண்டும் என்று சுவாமி அவனிடம் கூறினார். சுவாமி களத்து மேட்டில் நிலவைப் பார்த்தபடியே அதன் ஒளி அலைகளைக் கிரகித்துக் கொண்டிருந்தார். களத்து மேட்டில் இருந்து ஆற்றுக்குள் செல்லும் வழித்தடம் ஒன்று இருந்தது.அங்கிருந்து அழுகை ஒலி விசும்பலுடன் விட்டுவிட்டு வந்து கொண்டே இருந்தது. காளிமுத்து உறங்கிப் போயிருந்தான். சுப்பு, ராமன் கிழக்குப் பகுதியில் காவல் இருந்தனர். அழுவது அமானுஷ்யம் என்று புரிந்து கொண்டார். நிலவின் ஒளி, சூரியன் ஒளியின் கதிர்கள் நீரில் பட்டுப் பிரதிபலிக்கும் சக்தியை ஈர்க்கும் ஆற்றல் அவைகளுக்கு உண்டு! சுவாமி அருகே சென்றார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.