குருநாதரின் கண்டிப்பு.

179

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

28•09•2016,
புதன்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(81) மனிதனே புனிதன் —
குருநாதரின் கண்டிப்பு.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஒரு நாள் அதிகாலையில் சுவாமியின் காதில் ‘ஐவர் மலைக்கு வரவேண்டும்’ இந்தச் சொல் காதில் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்தது. இது தனது குருநாதரின் அழைப்பு. உடனே ஐவர்மலைக்குக் கிளம்பி விட்டார். உடுமலைப் பேட்டையில் இருந்து பழனி செல்லும் சில பேருந்துகள், கொழுமம், குமரலிங்கம் வழியாகச் செல்லும்.

கொழுமம் என்ற இந்தப் பகுதியை கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான குமணன் என்ற மன்னர் ஆட்சி புரிந்து வந்ததாக இங்கு செவிவழிக் கதைகள் உண்டு. ஸ்ரீ தத்தாத்ரேயர் இங்குள்ள அமராவதி ஆற்றின் கரையில் ஜீவசமாதி ஆன புனிதமான இடம் உள்ளது. இங்கு நல்ல வெய்யில் காலத்திலும், சாதியைச் சுற்றிலும் தரை குளிர்ச்சியாய் இருப்பது விந்தையே! இந்த இடம் எப்போதும் பூட்டியே வைத்திருப்பதால், இங்கு வந்து தியானம் இருப்போருக்கு வருகின்ற ஏக்கத்தைச் சொல்லி மாளாது. இங்குள்ள ஆற்றங்கரை காசிவிஸ்வநாதர் ஆலயம் பிரசித்தி பெற்றது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய நடராஜர் விக்கிரகம் கொழுமம் கிராமத்தில் உள்ள சிவாலயத்தில் உள்ளது.

நமது சுவாமி பாப்பம்பட்டி விலக்கில் இறங்கி இரண்டு கி.மீ தொலைவில் உள்ள ஐவர் மலைக்கு நடந்து தான் சென்றார்.
மலை மீது துறவி ஒருவர் தியானம் செய்து வந்தார். யார் சென்றாலும் ஏதாவது உணவு கொடுப்பார். சுவாமி சென்ற சமயம் மளிகைக் பொருட்கள் வாங்க பாப்பம்பட்டி சென்றிருந்தார். சுவாமி பாதவிநாயகர் கோயிலில் பூஜை செய்து வரும் பெருமாள் அவர்களைச் சந்தித்து விட்டு மலைமேல செல்லும் வழியில் ஐயிறை அம்மனின் கோயில் வழியே சென்று சாமியார் மடம் சேர்ந்தார்.

அங்கு சிரித்தபடியே திண்ணையில் அமர்ந்திருந்த சற்குருநாதர், “மகனே நாகராஜா வா வா” என்றார். நமது சுவாமி அவர்களின் எதிரே சென்று வணங்கி விட்டு எதிரில் தரையில் அமர்ந்து பணிவுடன் தனது குருவைப் பார்த்தார். பிறகு அருகில் இடிந்து கிடந்த கட்டிடத்தையும் பார்த்தார். அவர் உடனே, “இந்தக் கட்டிடத்தை எனது கையால் உடைத்து விட் டேன்” என்று சொல்லி விட்டுச் சிரிக்க ஆரம்பித்தார். பிறகு அது எப்படி நடந்தது என்பதை விளக்கிச் சொன்னார்

“நான் இங்கு தனித்திருக்க விரும்பி வந்து தங்கி இருந்தேன். ஒரு அமாவாசை தினம் சில மாந்திரீகர்கள் தங்கள் எண்ணத்தை ஈடேற்றும் பொருட்டு பூஜைகள் செய்ய வந்தனர். நட்பாகப் பேசினதால் நானும் சில விஷயங்களை மட்டும் தெரிவித்தேன். எனது ஆற்றலைப் புரிந்து கொண்டு அடிக்கடி இங்கே வந்து என்னைச் சந்தித்தனர். அதில் ஒருவன் பல ஜென்மத் தொடர்பு கொண்டவன். விக்ரமாதித்திய மன்னன், முதலாம் சந்திரகுப்தன் காலத்தில்’ ‘தம்பனவசியன்’ என்னும் பெயரில் தீவிரமான தீயசக்தியின் தொடர்பு கொண்டவன். உனக்கு ஜென்ம வாசனைத் தொடர்பு உள்ளவன். மீண்டும் பிறப்பிற்கு வந்துள்ளான். பேய், பிசாசு பிடித்து வந்தால் அவைகளை ஓட்டும் மந்திரவாதியாக இருக்கிறான். அவனுக்கு என்னால் நன்மை மட்டும் ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் உன்னையும் தெரிந்து கொள்வான். உனக்கு ஒரே மாதிரியான சப்தங்களும், காட்சிகளும், கனவு களும் அதனால் தான் ஏற்படுகின்றன. நீ உனது நிலைப்பாடு பற்றி முடிவு செய்யும் நேரம் நெருங்கி விட்டது” என்றார்.

“என்னைப் பற்றித் தெரிந்து கொண்டு அவனது தலைமையில் கேடான எண்ணம் கொண்டு என்னிடம் அணுகி வந்தனர். மாயமாக மறையும் வித்தை சொல்லித்தரக் கேட்டனர். நானும் ஓரளவுக்குச் சொல்லி விட்டேன். டேய்..எதற்காக இதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள் ? என்று கேட்டேன். பணம் நிறைய உள்ள இடங்களில் சென்று எடுத்து வந்து பிழைத்துக் கொள்கிறோம் என்று கூறினர்.”

” நான் மறுத்ததும் எனது கைகால்களை கயிறு கொண்டு கட்டி, இந்த மடத்தின் கிழக்குப் பகுதியில் சிறிய அறையில் வைத்துப் பூட்டி விட்டனர். தீய எண்ணம் உள்ளவர்கள் என்னை அடித்துத் துன்புறுத்தும் போது அருகில் உள்ள கரும்புக் தோட்டம் தானாகப் பற்றி எரிந்ததால் பயந்து போய் ஓடிவிட்டனர். காளி எனது கட்டுக்களை அவிழ்த்து விட்டாள். இருவரும் இந்த அறையைத் தகர்த்து எறிந்தோம். இனி இந்த உடலை சமாதுக்குள் வைத்து விட்டு சூட்சும சரீரத்தில் சஞ்சரிக்க முடிவு செய்தேன். இனிமேல் நீ தெய்வீகப் பாடங்களைப் படிக்க வேண்டும். இது எனது கட்டளை” என்று கண்டிப்புடன் கூறிவிட்டு தமக்கே உரிய தெய்வீகப் புன்சிரிப்பை உதிர்த்தார். ஐவர்மலை பற்றி நமது சுவாமி அறிய விரும்பினார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button