குருநாதன் மகா புனிதன்!

165

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

12•10•2016,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(95) மனிதனே புனிதன் —
குருநாதன் மகா புனிதன்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நமது சுவாமியும் அவர் நண்பர் உசேனும் பேசியபடியே வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். மலை வாழ்மக்கள் குடியிருப்புக்கு முன்பு வந்ததும் உசேன் நாகராஜ் சுவாமியிடம், ” தம்பி கொஞ்சம் நில்லப்பா. உங்க குருநாதர் யாரு? அவரு பாட்டுக்கு வாராரு, போராரு! உங்ககூட ஒரு வார்த்தை பேசலயே. ஏன்?” என்றார். “வா உசேன் இருட்டு ஆகீட்டு வருது பாரு! வீட்டுக்குப் போய் பேசிக்கலாம்” என்றார். உசேன் இப்பொழுது கம்பு இல்லாமல் நடந்து வந்து கொண்டிருந்தார். அதனை உசேனும் மறந்து விட்டார்.

சுவாமி கவனித்து விட்டுத் தனது மனதில் சற்குருவிற்கு நன்றி கூறிக் கொண்டார். அதுபற்றி உசேனிடமும் பேசவில்லை. உசேன் வீட்டை நெருங்கி விட்டனர். வீடுகளில் அரிக்கேன் லாந்தர் விளக்குகள் ஏற்றப்பட்டு விட்டது. அன்று பெளர்ணமிக்கு அடுத்த நாளானதால் நிலவு வெளிச்சம் இருந்தது. குழந்தைகளுக்கு நலக்கம் கண்டால் அபிமந்திரிக்கும் திரு.அண்ணாமலைக் கவுண்டர் டோபி ரங்கசாமி வீட்டுக் குழந்தைக்கு மந்திரித்து விட்டுப் பேசிக் கொண்டு இருந்தார்.

கவுண்டரைப் பார்த்து உசேன், “தம்பி நாகராஜ் சுவாமிக்கு மந்திரித்துவிட்டுப் போங்கள் ஐயா! பையனுக்கு என்னவோ ஆகிப் போச்சு” எனவும் அவரும் ஆகட்டும் எனச் சொல்லிச் சிரித்தார்! சுவாமியும் சிரித்தார். கவுண்டர் உசேனிடம், “அது இருக்கட்டும் உசேன், கம்பு எங்கே? “எனக் கேட்டார். ரங்கசாமி துணி தேய்ப்பதை நிறுத்திவிட்டு வந்து உசேனை மேலும் கீழுமாகப் பார்த்த விட்டு வாய் பிளந்து அதிசயித்தார். உசேன் சந்தோஷத்தில் குதித்தார். எப்படி என்று கேட்டவரிடம், “எல்லாம் மரத்தடிக் கிழவன் மந்திரிச்சுக் குணமாக்கினார்! எல்லாம் இவரக் கேளுங்க” என்று சுவாமியைக் காட்டினார்.

உசேன் தனது வீட்டிற்கு சுவாமியை அழைத்தார். அங்கு உசேன் தாயார் சுலையம்மா ஆச்சரியப்பட்டார். கடவுளுக்கு நன்றி சொன்னார். “அந்த சுவாமிகளை வீட்டிற்கு அழைத்து மரியாதை செய்ய வேணும் நாகுசாமி.எவ்வளவு பெரிய உதவியிது ” என்று சொல்லி விட்டு ஆகாயத்தைப் பார்த்து இரண்டு கைகளை விரித்து ஏதோ சொல்லி வணங்கினார். சுவாமி உசேனிடம், “உனது தாயார் அழைப்பிற்கெல்லாம் அவர் வரமாட்டார். காரணம் அவர் சமாதியாகிப் பல ஆண்டுகள் ஆகி விட்டது” என்றதும் அதிர்ச்சியில் கீழே விழுந்துவிட இருந்த வரை, டோபி ரங்கசாமி தாங்கிப் பிடித்துக் கொண்டார்.

சமாதியாகிப் பல வருடங்களுக்குப்பின் வெளியே வந்து சரீரத்துடன் உலவிக் கொண்டும், மகான் ஒருவர் நேரிலே பேசுவதும், ஆசீர்வாதம் தந்து செல்வதும், அறிவு ஜீவிதம் பெற்ற யாரும் நம்பமாட்டார்கள். மகான் வந்து சந்தித்து விட்டுச் சென்றவர்கள் சொன்னாலும், சொல்பவனுக்கு மறை கழன்று விட்டது என்று கேலியாக சிரித்துக் கொள்வார்கள்.அல்லது சமாதியானது பொய்
என்றுதான் சொல்வார்கள். மனிதனின் சிற்றறிவுக்கு எட்டாத எத்தனையோ விஷயங்கள் இந்த விஞ்ஞான யுகத்திலும் நடந்து கொண்டு இருப்பதும் உண்மைதான்! நம்பிக்கையுடன் நமது ஆன்மிகப் பயணத்தைத் தொடர்வோம்.

(மனிதனே புனிதன் வரலாறு தொடர்ந்து இன்னும் வரும்)

நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M. மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button